ஒரு பெண்ணின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடித்து, நீதிக்காகப் போராடும் இன்னொரு பெண்ணின் கதையே 'பொன்மகள் வந்தாள்'.
ஊட்டியில் 10 வயதுக் குழந்தையை ஜோதி என்கிற ஒரு பெண் துப்பாக்கி முனையில் கடத்திவிட்டதாகவும் காப்பாற்றப் போன இரு இளைஞர்களையும் அவர் சுட்டுக்கொன்றதாகவும் அந்த சைக்கோ கொலைக் குற்றவாளியைத் தேடி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர். திருப்பூரில் இருந்து ஜெய்ப்பூர் தப்பித்துச் செல்ல இருந்த சைக்கோ ஜோதியைப் பிடித்துவிட்டதாகவும் பிறகு சொல்கின்றனர். குழந்தையை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டச் சொல்லும்போது, பெண் குற்றவாளி எங்களைச் சுட்டதால் நாங்களும் பதிலுக்குச் சுட்டதில் குற்றவாளி இறந்துபோனார். அவர் வடநாட்டைச் சேர்ந்த பெண் என்று போலீஸார் செய்தியாளர்கள் முன் தெரிவிக்கின்றனர். இது 2004-ம் ஆண்டில் நடக்கிறது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை அறிந்துகொள்ளும் நோக்கில் இந்த வழக்கைக் கையில் எடுக்கிறார் வழக்கறிஞர் வெண்பா (ஜோதிகா). அப்பா பெட்டிஷன் பெத்துராஜ் (பாக்யராஜ்) ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து அவருக்கு உதவுகிறார். குழந்தைகளைக் கடத்திக் கொன்ற ஒரு கொலைகாரிக்கு வக்காலத்து வாங்குவதா என்று பொதுமக்கள் கொந்தளித்து ஜோதிகாவை அவமானப்படுத்துகின்றனர். மண்ணை வாரித் தூற்றி சாபமிடுதல், செருப்பு வீசுதல் என்று பல்வேறு அவமானங்களுக்கு ஜோதிகா உள்ளாக்கப்படுகிறார். இந்த அவமானங்களைத் தாண்டி ஏன் இந்த வழக்கைக் கையில் எடுக்கிறார், அதுவும் வழக்கறிஞராக அவர் வாதாடும் முதல் வழக்கு இதுதான்.
ஊட்டியே பப்ளிசிட்டிக்காக இந்த வழக்கைக் கையில் எடுத்ததாகக் கேலி செய்யும்போது அதன் பின் உள்ள உண்மைகளை எப்படி வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார் என்பதே 'பொன்மகள் வந்தாள்' படத்தின் திரைக்கதை.
'36 வயதினிலே' படத்தின் மூலம் ஜோதிகாவின் மறுவருகை நிகழ்ந்தது. அதற்குப் பிறகு ஆறேழு படங்களில் நடித்திருந்தாலும் 'பொன்மகள் வந்தாள்' படத்தின் மூலம் மறுவருகைக்கான அர்த்தம் முழுமை அடைந்துள்ளது. வலி, வேதனை, துயரம், ஆற்றாமை, அழுகை, பதற்றம், உறுதி, துணிச்சல், எதிர்ப்பு, அன்பு என அத்தனை உணர்வுகளையும் அப்படியே திரையில் கொண்டு வந்து அபாரமான நடிப்பால் ஜோதிகா மனதில் நிற்கிறார். அவரது மிகை நடிப்பு எப்போதும் துருத்திக்கொண்டு இருக்கும் என்ற விமர்சனத்தை இதில் சுக்குநூறாக உடைத்தெறிந்துள்ளார். வழக்கறிஞர் கதாபாத்திரத்துக்கான கச்சிதமான தேர்வாக, வசனங்களாலும் உடல் மொழிகளாலும் தன்னை நிரூபித்துள்ளார்.
பிரதாப் கே.போத்தன், பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன் என்று ஐம்பெரும் இயக்குநர்கள் இதில் ஆளுமை செலுத்தியுள்ளனர். தன் வழக்கமான குணநலன்களுடன் கூடிய கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார். பார்த்திபன் நீதிமன்றத்தில் கலாய்க்கும்போது அவருக்கு கவுன்ட்டர் கொடுக்கும் விதத்தில் குருவாக மிஞ்சி நிற்கிறார். ராஜரத்னம் சார் என்று மரியாதையுடன் பார்த்திபனை அழைக்கும் பிரதாப் கே.போத்தன் பின்பு அவரை அடக்கும் விதத்தில் அசாத்திய கம்பீரத்தைக் காட்டுகிறார்.
பார்த்திபன் நிறைய இடங்களில் அநாயசமாக ஸ்கோர் செய்கிறார். ஒவ்வொரு முறையும் எதிர்த்தரப்பு வழக்கறிஞராகவே வலம் வந்து வாதாடுவது ரசனை. எரிச்சலாக இருக்கிறதே எனத் தோன்றும்போது அப்படியே அமைதியின் வடிவமாக மாறி விடுகிறார். ''கேட்குறதுக்கு ஒண்ணுமில்ல... சொல்றதுக்கு ஒண்ணு இருக்கு... வெண்பா ஜோதியோட பொண்ணு இல்லை... ஜோதிக்கு ஒரு ஏஞ்சல்'' என்று அவர் பாணியில் சொல்வது அட்டகாசம்.
பாண்டியராஜனுக்குப் படத்தில் பெரிய வேலையில்லை. ஆனாலும், நீதிபதியையே இடித்துரைக்கும் காட்சியில் நியாயத்தின் தராசாக நிற்கிறார். வழக்கமான கதாபாத்திரம் என்றாலும் வில்லத்தனத்தில் குறையில்லாமல் மிரட்டியுள்ளார் தியாகராஜன்.
குழந்தையைப் பறிகொடுத்த துக்கத்தில் ஓலமிடும் செம்மலர் அன்னத்தின் அழுகை இதயத்தில் ஈரம் கசியச் செய்கிறது. எதிர்த்தரப்பு வழக்கறிஞரின் உதவியாளராக இருந்தாலும் நீதியின் பக்கம் பேசும் விஜே ஆஷிக்கின் நடிப்பு கவர்கிறது. சுப்பு பஞ்சு, வினோதினி வைத்தியநாதன், அக்ஷரா கிஷோர், வித்யா பிரதீப், கிரேன் மனோகர், கஜராஜ் என யாருடைய நடிப்பும் சோடை போகவில்லை. அவர்கள் அனைவரும் பொருத்தமான பாத்திர வார்ப்புகளாக மிளிர்ந்தனர்.
ராம்ஜியின் ஒளிப்பதிவும், கோவிந்த வசந்தாவின் இசையும் பின்னணியும் படத்துக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளன. ரூபனின் எடிட்டிங் நேர்த்தியின் உச்சம்.
''ஒருத்தரோட அடையாளத்தைச் சிதைக்குறதுதான் இருக்குறதுலேயே மிகப்பெரிய வன்முறை'', ''யாரை இந்த உலகம் தேவதையா பார்த்திருக்கணுமோ அவங்களை சைக்கோவா மாத்தி உங்களை எல்லாம் நம்ப வெச்சிருக்காங்க'', ''பசிக்காக ஒரு கை அரிசியைத் திருடுனவன்னை அடிச்சுக் கொன்ன இதே நாட்டுலதான் 100 பேரை பலாத்காரம் பண்ணவங்க, அதை வீடியோ எடுத்தவங்கள்லாம் ஜாலியா வெளியே சுத்திக்கிட்டு இருக்காங்க'', ''நாங்க தோத்துட்டோம்னு சொல்றதுக்கு இது கேம் இல்லை யுவர் ஹானர். ஜஸ்டிஸ்'' போன்ற வசனங்களை எழுதி கதைக் களத்துக்கு வலுவூட்டிய லஷ்மி சரவணகுமார், ஜேஜே ப்ரட்ரிக், முருகேஷன் பொன் பார்த்திபன் ஆகியோருக்கு வாழ்த்துப் பூங்கொத்துகள்.
குறைகள் என்று பார்த்தால் ஒரு இளைஞர் பெல்ட்டைத் தளர்த்தி பேன்ட் ஜிப்பைத் திறப்பதைப் போன்று காட்டியிருக்கவே கூடாது. இப்படித்தான் குழந்தைகள் மீதான வன்முறையைக் காட்சிப்படுத்த வழி இருக்கிறதா? காட்சியின் தாக்கத்துக்காக இப்படிச் செய்ததற்கு பலத்த கண்டனங்கள். கொலை தொடர்பான வீடியோ வெளிநாட்டு சுற்றுலாப் பயணி எடுத்தது என்று முதலில் சொல்லப்படுகிறது. போலீஸார் சிசிடிவியில் சிக்கிய காட்சி என்று சொல்கிறார்கள். கடத்தல்காரியின் அட்டகாசம், அப்பாவி இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொலை, ஊட்டியில் குழந்தை கடத்தல்காரி ஊடுருவல், மயக்க பிஸ்கட் கொடுத்து குழந்தைகளைக் கடத்தும் கும்பல் ஊடுருவலா? அமைச்சர்கள் குழு இன்று முடிவு என்று பத்திரிகை செய்திகள் காட்டப்படும்போது அதில் உள்ள வார்த்தைப் பயன்பாடுகள் செய்தியின் அறியாமையை அப்படியே பிரதிபலிக்கின்றன.ஆதாரங்கள் இல்லாமல் வெறுமனே சத்தம் போடவைத்து கோபமூட்டி உண்மையை வரவழைப்பதும் பழைய பலவீனமான உத்தியே.
இவற்றைத் தாண்டிப் பார்த்தால் வணிக சினிமாவுக்குத் தேவையான அம்சங்களில் மட்டும் இயக்குநர் ஜேஜே ப்ரட்ரிக் கவனம் செலுத்தவில்லை என்பது இடைவேளை ட்விஸ்ட், கிளைமேக்ஸுக்குள் ஒரு கிளைமேக்ஸ் போன்றவை உணர்த்துகின்றன. அதே தருணத்தில் இரு விஷயங்களில் ப்ரட்ரிக் பொதுப்புத்தியைப் போட்டு உடைத்துள்ளார். வடநாட்டுப் பெண், வடநாட்டு இளைஞர் என்றாலே தீயவர், கடத்தல்காரர், கொலைகாரர் என்ற பார்வையுடன் அணுக வேண்டாம். ஒரு வீட்டில் பெண் குழந்தை எப்படி நடந்துகொள்ள வேண்டும், உடை உடுத்த வேண்டும், யாருடன் பேச வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும் பெற்றோர்கள் அதே வீட்டில் உள்ள பசங்களுக்கு பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படி மதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் விறுவிறுப்பான திரைக்கதையால் குழந்தைகள் கடத்தல், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை மையமாகக் கொண்டு வந்த சில தமிழ்ப் படங்களில் 'பொன்மகள் வந்தாள்' தனித்து நிற்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
41 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago