‘சிங்கம்’ வெளியாகி பத்து ஆண்டுகள்: மாஸ் விருந்து படைத்த போலீஸ் படம்

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தைப் பிடித்த கதாநாயகர்கள் பலர் ஒன்றிரண்டு படங்களிலாவது போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பதைக் காணலாம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் போலீஸ் கதைகளில் நடித்து வெற்றிபெறுவது ஒரு நடிகர் நட்சத்திரமாவதற்கான பயணத்தில் மிக முக்கியமானது என்று சொல்லலாம்.

இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கும் சூர்யா முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்த படம் கெளதம் மேனன் இயக்கிய ‘காக்க காக்க’ (2003). அந்தப் படம் சூர்யாவின் திரைப் பயணத்தில் முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அன்புச் செல்வன் ஐபிஎஸ் தமிழ்த் திரையில் தோன்றிய காவல்துறை அதிகாரிகளில் மறக்க முடியாத ஒருவரானார்.

’காக்க காக்க’ ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டு பெரிய வெற்றியைப் பெற்றாலும் அதற்குப் பிறகு ஏழு ஆண்டுகள் கழித்துதான் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்த இன்னொரு படம் வெளியானது. தென்னிந்திய சினிமாவில் முதல் முறையாக மூன்று பாகங்களைக் கண்ட அந்தப் படம் வெளியாகி இன்றோடு பத்தாண்டுகள் நிறைவடைகின்றன.

வீரமும் ஈரமும் நிறைந்த போலீஸ்

ஹரி இயக்கத்தில் 2010 மே 28 அன்று வெளியான ‘சிங்கம்’ படத்தில் சூர்யா துரைசிங்கம் ஐபிஎஸ் ஆக நடித்தார். அன்புச் செல்வன் கிளாஸ் என்றால் துரைசிங்கம் மாஸ். கெளதம் மேனன் ஸ்டைலும் மதியூகமும் மிடுக்கும் பெண்களைக் கவரும் அழகும் நிறைந்த காவல் அதிகாரிகளைப் படைத்தார் என்றால் ஹரியோ வீரமும் ஈரமும் மிக்க போலீஸ் கதாபாத்திரங்களைப் படைப்பவர். சென்னையில் பிறந்த வளர்ந்த நவநாகரீக இளைஞரான அன்புச் செல்வனுக்கும் தூத்துக்குடி மாவட்டம் நல்லூரில் பிறந்து வளர்ந்த துரை சிங்கத்துக்கும் அடிப்படையில் சில ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் உண்டு.

இந்த ஒற்றுமை வேற்றுமைகள் கெளதம், ஹரி ஆகிய இரண்டு படைப்பாளிகளின் தனித்தன்மைகளை, கதை, கதாபாத்திரம். சினிமா ஆகியவை சார்ந்த அணுகுமுறைகளில் உள்ள வேறுபாட்டைப் பிரதிபலிப்பவை. இவை இரண்டையும் சரியாக உள்வாங்கி இரண்டு விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாகப் பொருந்தி பட்டையைக் கிளப்பியிருப்பார் சூர்யா. இயக்குநர் சொல்வதை நடித்துவிட்டுப் போகும் நாயகன் என்பதைத் தாண்டி இந்த இரண்டு படங்களையும் தோள்களில் சுமந்து அவை வெற்றிபெற முக்கியப் பங்காற்றினார் சூர்யா.

வெற்றிக்கு வித்திட்ட அம்சங்கள்

சிற்றூர்கள் சார்ந்த கதைக்களம், பரபர திரைக்கதை, ஆக்‌ஷன், செண்டிமெண்ட், காமடி, காதல் என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான திரைக்கதை, அசத்தலான பஞ்ச் வசனங்கள் என ஹரி படங்களின் சிறப்பம்சங்கள் அனைத்தும் ‘சிங்கம்’ படத்தில் கூடியிருந்தது. இதற்கு முன்பு விக்ரமை வைத்து அவர் இயக்கியிருந்த ‘சாமி’ இதே சிறப்பம்சங்களுடன் பிளாக்பஸ்டர் வெற்றிபெற்றது. ’சாமி’யில் விக்ரம் என்னும் நடிப்பு ராட்சசனுகு போலீஸ் படையல் வைத்தவர் ‘சிங்கம்’ படத்தில் சூர்யாவின் ஆளுமைக்கேற்ற போலீஸ் கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தார். படத்தில் சூர்யா வைத்திருந்த ஹாண்டில் பார் மீசை உட்பட அனைத்து புது ட்ரெண்டாகின. ”ஓங்கி அடிச்ச ஒன்ற டன் வெயிட் டா” போன்ற ஹரியின் அசத்தலான பஞ்ச் வசனங்களும் ரசிகர்களைக் கவர்ந்தன.

சூர்யா மட்டுமல்லாமல் நாயகியாக அழகு நிரம்பிய அனுஷ்கா, நாயகனின் தந்தையாக ராதாரவி, காமெடிக்கு விவேக், கொடூர வில்லனாக பிரகாஷ் ராஜ், தேவி ஸ்ரீ பிரசாத்தின் வெற்றிப் பாடல்கள், ப்ரியனின் ஒளிப்பதிவு என ‘சிங்கம்’ படத்தில் அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்தன.

மறக்க முடியாத மாஸ் காட்சிகள்

ஆனால் ‘சிங்கம்’ எல்லா அம்சங்களும் கலந்த கலவையாக இருந்தாலும் பாயாசத்துக்கு சர்க்கரையைப் போல் ஆக்‌ஷன் படங்களுக்கு மாஸ் காட்சிகள் மிக அவசியம். ஹரி படங்களில் மாஸ் காட்சிகளுக்குப் பஞ்சம் இருக்காது. இந்தப் படத்தில் மாஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு தலைவாழை இலை விருந்தாக அமைந்தன. குறிப்பாக இடைவேளையில் சூர்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் நல்லூர் காவல் நிலையத்துக்கு வந்து ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டுச் செல்ல வேண்டிய பிரகாஷ்ராஜ் அதைச் செய்யத் தவறுவதால் ஏற்படும் மோதல் காட்சியை எப்போது பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போன அதே பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் தரக் கூடியது.

திருந்த வாய்ப்பளிக்கும் போலீஸ்

பொதுவாக போலீஸ் படங்களில் தண்டனை கொடுப்பதே பிரதானமாக இருக்கும்.ஹரி காவல்துறை கதாநாயகர்கள் தண்டனை என்பதை கடைசி ஆயுதமாகவே கையிலெடுப்பார்கள். சாமா தான பேத தண்டம் என்ற அணுகுமுறையைக் கடைபிடிப்பார்கள், கெட்டவர்கள் திருந்த வாய்ப்பளிப்பார்கள். ’சிங்கம்’ படத்தில் “பசிக்கு பழைய சோறு திருடறவன மன்னிச்சிடலாம் ருசிக்கு பாயாசம் திருடறவன மன்னிக்கக் கூடாது” என்பது போன்ற வசனங்கள் அனைத்து குற்றங்களும் ஒரே மாதிரி அணுகத்தக்கவை அல்ல என்ற புரிதலை வெளிப்படுத்துகிறது.

மூன்று பாகங்கள்

’சிங்கம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யாவும் ஹரியும் மீண்டும் இணைந்து ‘சிங்கம் 2’ என்ற இரண்டாம் பாகத்தை (Sequel) வழங்கினர். தமிழ் சினிமாவில் சீக்வல்களே அரிதானவை எனும்போது கிட்டத்தட்ட அனைத்து கதாபாத்திரங்களையும் பின்னணிகளையும் நடிகர்களையும் அப்படியே தக்கவைத்து கதையின் உண்மையான தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட சீக்வல்கள் மிக மிக அரிது. அப்படி ஒரு அரிதான சீக்வல் படமாக அமைந்த ‘சிங்கம் 2’ முதல் பாகத்தை விட பெரிய வெற்றியைப் பெற்றது. 2017-ல் ‘சி3’ படம் சிங்கம் சீரீஸின் மூன்றாவது படமாக வெளியானது.

மூன்று பாகங்கள் வந்துவிட்டன. மூன்று படங்களையும் ரசிப்பவர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் இவற்றில் ‘சிங்கம்’ முதல் பாகத்துக்கு இருக்கும் கிரேஸ் ஈடு இணையற்றது. எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டாலும் அதிக மக்களால் பார்க்கப்படும் படமாக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்