180 சிகரெட்டுகள் புகைப்பதிலிருந்து மீள 'வாரணம் ஆயிரம்' உதவியது: வெற்றிமாறன் சுவாரசியப் பகிர்வு

By செய்திப்பிரிவு

180 சிகரெட் புகைப்பதிலிருந்து நிறுத்தியது மற்றும் 'வாரணம் ஆயிரம்' செய்த உதவி குறித்து இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார்.

கரோனா ஊரடங்கில் அனைவருமே நேரலையில் பேட்டி மற்றும் கலந்துரையாடல் நடத்தி வருகிறார்கள். அவ்வாறு தனியார் யூடியூப் இணையதளம் ஒன்று ஒருங்கிணைத்த கலந்துரையாடலில் பயிற்சியாளர் பாசு ஷங்கர், இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்தி மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினேஷ் கார்த்திக் மற்றும் வெற்றிமாறன் இருவருக்குமே உடற்பயிற்சியாளராக பாசு ஷங்கர் இருந்து வருகிறார். இவர்கள் தவிர்த்து பல்வேறு முன்னணி பிரபலங்களுக்கும் பயிற்சியாளராக இருந்து வருகிறார் பாசு ஷங்கர். இந்த கலந்துரையாடலில் தான் புகைப்பதை நிறுத்தியது தொடர்பாக விரிவாக பேசியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

அந்தப் பகுதி இதோ:

தினேஷ் கார்த்திக்: நிறைய புகை பிடிப்பவராய் இருந்து இப்போது முற்றிலுமாக நிறுத்தி விட்டீர்கள், இந்தப் பயணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

வெற்றிமாறன்: நான் 13 வயதில் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன். அப்போது ஆரம்பித்து 33 வயது வரை பிடித்திருக்கிறேன். எக்கச்சக்கமாகப் பிடித்திருக்கிறேன். 'பொல்லாதவன்' சமயத்தில் எல்லாம் நாள் ஒன்றுக்கு 170 - 180 சிகரெட்டுகள் பிடித்து வந்தேன். எனக்கே தெரியாது நான் அவ்வளவு பிடித்திருக்கிறேன் என்று. 'சார் 15 பாக்கெட் முடிஞ்சிடுச்சு' என்று உதவியாளர்கள் சொல்வார்கள். ஒரு பாக்கெட்டில் பத்து சிகரெட்டுகள் இருக்கும். அப்போது கூட, 15 காலியாகிவிட்டதா, சரி இன்னும் இரண்டு வாங்கி வைத்துக் கொள் என்பேன். விடாமல் பிடிப்பென். சாப்பிட்டு முடித்ததும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பதால் சாப்பிடுவதற்கு முன் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துவிட்டுத்தான் சாப்பிட ஆரம்பிப்பேன்.

தொடர்ந்து சிகரெட் பிடித்தீர்கள் என்றால் ஒரு 20 வருடங்கள் கழித்து உடலே, இனி ஏற்க முடியாது, போதும் என்று சொல்ல ஆரம்பிக்கும். அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். நம் உடல் சொல்வதை நாம் கேட்க ஆரம்பித்தால் போதும். அப்படித்தான் எனக்கு நடந்தது. பொல்லாதவன் படம் முடியும் தருவாயில், அதற்கு சில வருடங்களுக்கு முன்னால் எனக்கு இருந்த ஆரோக்கியம், அப்போது இல்லை என்பதை உணர்ந்தேன். பிறகு எப்படி புகைப் பழக்கத்தை விடுவது என்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

அப்போது ஒரு இதய சிகிச்சை நிபுணரைக் கலந்தாலோசித்தேன். எனது ஈசிஜியில் ஏதோ மாறுதல் இருக்கிறதென்று சொன்னார்கள். ஆஞ்ஜியோ சிகிச்சை செய்து அடைப்பு இருக்கிறதா பார்க்கலாமா என்று மருத்துவரைக் கேட்டேன். அதற்கு அவர், அது நம் இஷ்டம் தான் ஆனால் புகை பழக்கத்தை நிறுத்துவது அத்தியாவசியமான தேவை என்றார். நான் ஆஞ்ஜியோ செய்ய வேண்டும் என்றேன். செய்து பார்த்தோம். எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் ஆஞ்ஜியோவுக்காக நான் தயாரானதுதான் தொடக்கப் புள்ளி.

அப்போதிலிருந்துதான் எப்படி எடையை குறைப்பது, எப்படி பயிற்சி செய்வது என்பது பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது பாசு தனுஷின் 'பொல்லாதவன்' தோற்றத்துக்காகப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார். அப்படித்தான் எனக்கு பாசுவைத் தெரியும். நான் அவரை சந்தித்து எனது உடல் ஆரோக்கியத்துக்கு பயிற்சி செய்ய வேண்டும் என்றேன். அவர் பயிற்சிக்கு வரச் சொன்னார். தொடர்ந்து அவர் மேற்பார்வையில் பயிற்சி செய்தேன். அது ஒரு 6 மாதப் பயணம். ஆனால் அப்போதும் நான் புகை பிடித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் புகைப் பிடிப்பதைக் குறைக்க அந்த உடற்பயிற்சி எனக்கு உதவி செய்தது.

புகைப் பழக்கத்தை விடுவது என்பது ஒரு சங்கிலித் தொடர் போல. ஒரு வாரம் விடுவோம், மீண்டும் ஆரம்பிப்போம். மறுபடியும் 10 நாட்கள் விடுவோம், அதன் பின் ஆரம்பிப்போம். இப்படி சங்கிலித் தொடராகப் போகும். அப்படியே விட்டு விட்டு பழகினால் 7வது முறை உங்களால் விட்டு விட முடியும், என்று எனது மருத்துவர் சொன்னார். அதை நான் பின்பற்ற முயற்சித்தேன். .

'வாரணம் ஆயிரம்' படத்தைப் பார்த்தேன், அந்தப் படத்திலும் புகை பிடிப்பது பற்றியெல்லாம் பேசப்பட்டிருந்தது. புகைப் பிடிப்பதைக் கண்டிப்பாக விட வேண்டும் என்று நான் உறுதியாக முடிவு செய்ய ஒரு வகையில் அந்தப் படம் எனக்கு உதவியது. அந்தப் படம் பார்த்து முடித்து வந்து, இதுதான் கடைசி சிகரெட் என்று ஒரு முறை பிடித்தேன். அன்றிலிருந்து இன்றுவரை நான் மீண்டும் சிகரெட்டைத் தொடவில்லை. அது 2008 என்று நினைக்கிறேன்.

எல்லோருமே புகை பிடிப்பதை நிறுத்த அவர்களுக்கு உரிய வழியைத் தேட வேண்டும் என்று நினைக்கிறேன். ஹெராயின், கொக்கைனை விட நிகோடின் அதிகமாகப் போதைக்கு அடிமையாக்கும் என்று சொல்கிறார்கள். எளிதில் கிடைக்கக்கூடியதும் கூட. எனவே இதை நிறுத்தவது அவ்வளவு சுலபமல்ல. அது உங்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதனால் அவரும் பாதிப்புகள் என்ன, அதிலிருந்து நாம் எப்படி மீள வேண்டும் என்பதையெல்லாம் நாம் தான் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி இருக்கும்.

பாலுமகேந்திரா புனே திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு முறை சத்யஜித் ரே அவர்கள் அங்கு பாடம் எடுக்க வந்திருக்கிறார். இயக்குநராக முதல் என்ன என்று ரேவைக் கேட்கும்போது அவர் சொன்னது, 'ஒரே இடத்தில் எட்டு மணி நேரம் நிற்க முடிந்தால் போதும், மற்ற திறமைகளைக் கற்றுக்கொள்ளலாம்' என்பதுதான். எனவே உடல் ஆரோக்கியம் என்பது இயக்குநராக இருப்பதற்கு அத்தியாவசியமானது.

200-300 நபர்கள் உங்களைப் பார்க்கிறார்கள். நீங்கள் அவர்களை வழி நடத்த வேண்டும் என்றால் அப்படி இருக்க வேண்டும். ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை வாங்கிக் கொண்டிருந்தால் நடிகர்கள் உங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்கள். நாம் களத்தில் இறங்கி இங்கு வந்து நில்லுங்கள், இப்படி நடிக்க வேண்டும் என்று சொன்னால் அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். உங்கள் மீது நம்பகத்தன்மை வரும், நடிகர்கள் மதிப்பார்கள், மொத்த குழுவும் உங்களைப் பின்பற்றும். அது மிகவும் முக்கியம்.

மலை மீது ஏறிப் பார்க்கும் காட்சி என்றால் நாம் தான் முதலில் ஏறி நிற்க வேண்டும். அதன் பின் நம் அணியைப் பின்பற்றச் சொல்ல வேண்டும். எனவே ஆரோக்கியத்துடன் இருப்பது மிகவும் முக்கியம்.

'பொல்லாதவன்' சமயத்தில் நான் புகை பிடித்துக் கொண்டிருந்தேன். 'ஆடுகளம்' சமயத்தில் பிடிக்கவில்லை. 'ஆடுகளம்' படத்திற்காகக் கடினமாக உழைத்தோம். 'பொல்லாதவன்' படத்தில் சில இடங்களில் சமரசம் செய்து கொண்டோம். அதற்குக் காரணம் அப்போது எனக்கு உடலில் வலிமை இல்லாததுதான். எனக்கு இருந்த சில கட்டுப்பாடுகள் தான்.

நான் எப்போதுமே மன வலிமையால் உந்தப்பட்டு வேலை செய்பவன். இருந்தாலும் உடல் வலிமைக்கு முக்கியப் பங்கு உண்டு. கடந்த 12 வருடங்களாக நான் புகை பிடிக்கவில்லை. அது நான் எந்த மாதிரியான படங்களை எடுத்தேன் என்பதில் உதவியது. என் படங்களில் பல விஷயங்கள் எனது உடல் வலிமையுடன் சம்பந்தப்பட்டது என்றே நான் நினைக்கிறேன். குறிப்பாக 'அசுரன்' சமயத்தில் நான் திட்டமிட்ட முறையில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அது எனக்கு அந்தப் படத்தை முடிக்கக் கூடுதல் சக்தியைக் கொடுத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்