ரசிகரின் ஆசையை நிறைவேற்ற விஜய் - அனிருத் சம்மதம்

ரசிகரின் ஆசையை நிறைவேற்ற விஜய், அனிருத் இருவருமே சம்மதம் தெரிவித்திருப்பதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'வாத்தி கம்மிங்', 'வாத்தி ரைடு', 'குட்டி ஸ்டோரி' உள்ளிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பல்வேறு சமூக வலைதளங்களில் இந்தப் பாடல்களுக்கு நடனமாடி பலரும் பதிவேற்றியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கைகளை இழந்த மாற்றுத்திறனாளி ஒருவர் ‘வாத்தி கம்மிங்’ பாடலின் இசையை வாசிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வந்தனர்.

இதற்கு அனிருத்தும் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனிடையே, இந்த வீடியோ தொடர்பாக ராகவா லாரன்ஸ் "இது தான்சேன். எனது மாற்றுத் திறனாளி குழுவில் இருப்பவர். இந்த ஊரடங்கு சமயத்தில் 3 நாட்கள் பயிற்சி செய்து 'மாஸ்டர்' படத்தின் ஒரு பாடலை வாசித்திருக்கிறார். இவரது கனவே அனிருத் அவர்களின் இசையில் ஒரு சிறு பகுதி வாசிக்க வேண்டும் என்பதும், விஜய் அவர்கள் முன்னிலையில் இதை வாசிக்க வேண்டும் என்பதுதான்" என்று தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

தற்போது, இதற்கு விஜய் - அனிருத் இருவருமே சம்மதம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"உலகில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். என்னுடைய அம்மாவுக்காக நான் கோயில் கட்டி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. உலகில் உள்ள அனைத்து அம்மாக்களுக்கும் அந்த கோயிலை நான் சமர்ப்பிக்கிறேன். நான் கடவுளை வெளியே தேடிக் கொண்டிருந்தேன், ஆனால் அந்த கடவுள் என் அம்மாவுக்குள்ளும், பிறரது பசியிலும்தான் இருக்கிறார் என்பதை பிறகுதான் புரிந்து கொண்டேன். தன் தாயை மகிழ்ச்சியாக வைத்து, பிறரது பசியை போக்குபவர்கள் வாழ்க்கையில் தோற்றுப் போவதே இல்லை. அன்னையர் தின வாழ்த்துகள்.

இந்த அன்னையர் தின நாளில் ஒரு நல்ல செய்தி. என்னுடைய மாற்றுத்திறனாளிகள் குழுவில் இருக்கும், 'மாஸ்டர்' பாடலை வாசித்த தான்சேன் என்ற இளைஞர் குறித்து பதிவிட்டு அனிருத் மற்றும் நண்பன் விஜய்க்கும் வேண்டுகோள் வைத்திருந்தேன்.

நேற்று இரவு நண்பன் விஜயிடம் பேசினேன். ஊரடங்கு முடிந்ததும் அந்த இளைஞரை அழைத்து வந்து தன் முன்னால் வாசித்துக் காட்ட சொன்னார். அதே போல அனிருத்தும் அந்த இளைஞருடைய விருப்பத்திற்கேற்ப தன்னுடைய இசையில் அவரை வாசிக்க வைப்பதாக கூறியுள்ளார். அந்த இளைஞரின் கனவை நனவாக்கிய நண்பன் விஜய்க்கும் அனிருத்துக்கும் என்னுடைய மிகப்பெரிய நன்றி. சேவையே கடவுள்"

இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE