சிவாஜியைப் பேட்டி எடுத்த கமல்: ஒரு சுவாரசிய நிகழ்வு

By செய்திப்பிரிவு

'தங்கச்சுரங்கம்' படப்பிடிப்பில் சிவாஜியைப் பேட்டி எடுத்த நிகழ்வை நினைவு கூர்ந்துள்ளார் கமல்ஹாசன்.

கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலைக் கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 2-ம் தேதி நடைபெற்றது.

இந்த நேரலைப் பேட்டியில், தனது பழைய படங்களின் நினைவுகள், அரசியல் வருகை, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் கமல்ஹாசன். இதில் தனக்கும் சிவாஜிக்கும் இடையே நட்பு, உரையாடல் குறித்துப் பகிர்ந்துள்ளார் கமல்.

அந்தப் பகுதி:

விஜய் சேதுபதி: சிவாஜிக்கும் உங்களுக்கும் நடந்த சுவாரசியமான உரையாடல்?

கமல்: கவிதையாகவே ஒன்று எழுதிவைத்திருந்தேன். மறந்துவிட்டது. நான் அவரது பெரிய ரசிகன். அதிகப்பிரசங்கித்தனமாக அவரிடம் ஒரு பேட்டி கேட்டுவிட்டேன். அவர் 'தங்கச்சுரங்கம்' என்று ஒரு படத்தில் நடித்திருந்தார். எம்ஜிஆர் போல தொப்பி போட்டுக்கொண்டு, கிணற்றில் இறங்கியெல்லாம் பாடி ஆடுவதைப் போல அந்தப் படத்தில் வரும். அதைப் பற்றிக் கேட்கும்போது மரியாதையாகக் கேட்டிருக்கலாம். ஆனால் நான், அந்தக் கிணற்றில் யார் உங்களைத் தள்ளினார்கள் என்று கேட்டேன்.

"நானாகத்தான் விழுந்தேன். ஆனால் அது உனக்குப் புரியவில்லை. சினிமா வியாபாரம் புரியும்போது உனக்குப் புரியும். உன்னையும் யாராவது தள்ளிவிடுவார்கள், அல்லது நீயாக குதிப்பாய் பார்" என்றார்.

விஜய் சேதுபதி:அப்படி நீங்கள் எப்போது முதலில் கிணற்றில் குதித்தீர்கள்?

கமல்: 'சகலகலா வல்லவன்' தான். ஏனென்றால் சொல்லி அடித்து, குதித்து, நீச்சலடித்து, வெளியே வரும்போது தலைமுடி வாரிக்கொண்டு வேறு ஆளாக வந்தேன். நான் அதை வெறுக்கிறேன் என எல்லோரும் நினைப்பார்கள். நல்ல சினிமா எடுக்க நினைக்கும்போது எதற்கு வணிக சினிமா என எனக்கும் கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது.

"இது 'கல்யாணராமன்' கிடையாது. கதை கதை என்று கேட்டுக்கொண்டிருக்காதே. கதாபாத்திரம் எப்படி நடிப்பது என்றெல்லாம் கேட்காதே. கிராமத்து ஆளா, குடுமி வைத்துக் கொள். மற்றபடி பாட்டு, சண்டை என அப்படித்தான் படம் போகும்" என்றார். கதை என்று கேட்டால் பெரிய இடத்துப் பெண் தானே என்றார்.

பெரிய இடத்துப் பெண்ணின் பாரப்பா பழனியப்பாதான் சகலகலா வல்லவனின் கட்டை வண்டி கட்டை வண்டி. நீங்கள் இப்போது பார்த்தாலும் இரண்டு படங்களும் அப்படியே இருக்கும். தயாரிப்பாளர்களுக்கு, இயக்குநருக்கு என எல்லோருக்கும் தெரியும். நான் மட்டும்தான் சிணுங்கிக் கொண்டே இருப்பேன்.

என்னை அவர்களுக்குக் குழந்தையிலிருந்து தெரியும். என் சந்தோஷத்துக்கு ஏதாவது ஆட விடுங்கள் என்றார் தயாரிப்பாளர். அப்படித்தான் நான் இளமை இதோ இதோ பாடலில் பைக் ஓட்டி, ஹாப்பி நியூ இயர் சொல்வது என்றெல்லாம் செய்தேன். என் போக்கில் விட்டுவிட்டார்கள் என்பதால், கண்ணாடியெல்லாம் உடைத்து அடிபட்டுக் கொண்டேன். அதற்கு எம்ஜிஆர் கூட என்னை அழைத்துத் திட்டினார்.

இவ்வாறு கமல் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE