'இந்தியன்' வெளியாகி 24 ஆண்டுகள்: ஊழல் எதிர்ப்பு திரைப்படங்களின் பிரம்மாண்ட முன்னோடி

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

சில ஆண்டுகளுக்கு முன் அரசியல் பிரவேசம் செய்யப்போவதாக அறிவித்த கமல்ஹாசன் அறிவித்த கையோடு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும் தொடங்கிவிட்டார் அரசியலில் முழு கவனம் செலுத்த இருப்பதால் விரைவில் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தப் போவதாக அறிவித்திருந்தார். இதனால் மனமுடைந்திருந்த அவருடைய ரசிகர்களுக்கு மாபெரும் ஆறுதலாக அமைந்தது நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ‘இந்தியன் 2’ திரைப்படம் பற்றிய அறிவிப்பு.

லைகா தயாரிக்க ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக நடித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது கரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சூழலில் ‘இந்தியன் 2’ படத்தின் முதல் பாகமான ‘இந்தியன்’ படத்தை நினைவுகூர்வதற்கான தருணம் நமக்குக் கிடைத்துள்ளது. 24 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில்தான் (1996 மே 9) கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் ஆகிய இரண்டு மாபெரும் ஆளுமைகள் முதல் முறையாக இணைந்த, அவர்கள் இருவருடைய வாழ்விலும் முக்கியமான திரைப்படமாக அமைந்த ‘இந்தியன்’ வெளியானது.

பிரம்மாண்ட இயக்குநர் என்று அறியப்படும் ஷங்கர் இயக்கிய மூன்றாவது படம் இது. முதல் இரண்டு படங்களில் பாடல் காட்சிகளில் புதுமையான கிராஃபிக்ஸ்கள் உள்ளிட்டவற்றின் மூலமாக மட்டுமே ரசிகர்களை வாய்பிளக்க வைத்தார் ஷங்கர். பாடல்கள், படமாக்கம் ஆகியவற்றோடு கதையளவிலேயே பிரம்மாண்டத்தை உள்ளடக்கியிருந்த படம் ‘இந்தியன்’ சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தையும் மீண்டும் திரையில் உருவாக்கியிருந்தார்.

அன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் நிலையை ஒப்பிட்டால் இது வியக்கவைக்கும் இமாலய சாதனை. இந்தப் படமும் இதற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியும் வரவேற்பும் ஒரு திரைப் படைப்பாளியாக ஷங்கரின் இமேஜை வடிவமைத்ததில் முக்கியப் பங்காற்றின என்றால் அது மிகையில்லை.

கமல்ஹாசனுக்கு பல வகைகளில் முக்கியமான படம் ‘இந்தியன்’. இந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு மூன்றாம் முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. அதோடு முதல் முறையாக பிராஸ்தடிக் மேக்கப்பைப் பயன்படுத்தி 70 வயது முதியவராக இந்தப் படத்தில் நடித்திருந்தார். 42 வயது நடிகர், 70 வயது முதியவராகத் திரையில் தோன்றியபோது யாருக்கும் அவருடைய நிஜ வயது நினைவில்லை.

சேனாபதியாக நடித்தவர் கமல் என்று சொல்லியிருக்காவிட்டால் அது கமல் என்றே பலருக்கும் தெரிந்திருக்காது. அந்த அளவு பிராஸ்தடிக் மேக்கப் என்னும் தொழில்நுட்பத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்த இந்தப் படத்தின் மூலம் வித்திட்டார் கமல்ஹாசன்.

மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் சேனாபதியின் மகன் சந்துரு கதாபாத்திரத்தின் வழியாக எதிர்மறை குணாம்சங்கள் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கமல். வணிக ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது ‘இந்தியன்’. அதுவரை வெளியான தமிழ்த் திரைப்படங்களில் மிக அதிக வசூலைக் குவித்த படம் என்ற புகழைப் பெற்றது. அதன் மூலம் கமல் மாற்று முயற்சிகளில் ஈடுபடும் கலைஞன் மட்டுமல்ல வணிக வெற்றிகளைக் குவிக்கும் நட்சத்திர நடிகனும்தான் என்பது மீண்டும் நிரூபணமானது.

இவை தவிர 'இந்தியன்' படத்துக்கு மேலும் பல சிறப்புகள் உள்ளன.

• அரசு அலுவலகங்களில் விரவிக் கிடக்கும் ஊழலை எதிர்க்கும் படம். அதற்குப் பிறகு தமிழில் வெளியான பல ஊழல் எதிர்ப்புப் படங்களின் முன்னோடி.

• சுதந்திரப் போராட்ட காலகட்டத்தைக் காட்டி 1990-களின் இளைஞர்களுக்கு சுதந்திரப் போராட்டம் குறித்த அறிமுகத்தை ஏற்படுத்திய படம்.

• சுதந்திரப் போராட்ட காலகட்டத்தைக் கச்சிதமாக மீளூருவாக்கம் செய்த கலை இயக்குநர் தோட்டா தரணிக்கும் தேசிய விருது கிடைத்தது.

• இயக்குநர் ஷங்கரும் எழுத்தாளர் சுஜாதாவும் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம். இதற்குப் பின் சுஜாதா உயிரோடு இருக்கும்வரை ஷங்கர் இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் ( ‘ஜீன்ஸ்’ தவிர) வசனம் எழுதினார் சுஜாதா.

• கமல் படத்துக்கு முதன் முறையாக இசையமைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான். பாடல்கள் அனைத்தும் மிகப் பெரும் வெற்றி. இன்றளவும் ரஹ்மானின் சிறந்த ஆல்பங்களில் ஒன்றாக 'இந்தியன்' நிலைத்திருக்கிறது. வாலி, வைரமுத்துவின் பாடல் வரிகளும் பாடல்களின் எவர்க்ரீன் அந்தஸ்துக்கு வித்திட்டன.

• ’ரங்கீலா’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான இந்தி நடிகை ஊர்மிளா நடித்த ஒரே தமிழ்ப் படம். படத்தில் ‘அக்கடாங்கு நாங்க உட போட்ட’ பாடலில் இவருடைய நவீன ஆடைகளும் ஆட்டமும் ரசிகர்களை ‘அட’ போட வைத்தன.

• அந்தக் காலகட்டத்தில் மிக அதிக பொருட்செலவில் உருவான மிக அதிக வசூலைக் குவித்த தமிழ்த் திரைப்படம்.

• சேனாபதியின் மனைவியாகவும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையாகவும் நடித்திருந்தார் சுகன்யா. இவரும் பிராஸ்தடிக் மேக்கப்புடன் முதியவராக காண்பிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் நடிகைகள் பலர் இதுபோன்ற சோதனை முயற்சிகளுக்குத் தயங்குவார்கள்.

• தேசிய விருது மட்டுமல்லாமல் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றார் கமல்ஹாசன்.

இன்றும்கூட தொலைக்காட்சியில் எப்போது போடப்பட்டாலும் அதிக ரசிகர்களால் பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது ‘இந்தியன்’. யூடியூபிலும் அமேசான் பிரைமிலும் காணக் கிடைக்கிறது. வணிக வெற்றி, பரிசோதனை முயற்சிகள், தரமான ரசனைக்கு உகந்த படமாக அமைந்தது என தமிழ் சினிமா வரலாற்றில் ஒரும் முக்கிய அந்தஸ்தையும் பெற்றுவிட்ட ‘இந்தியன்’ எப்போதும் தமிழ் ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்