'சிப்பியிருக்குது முத்துமிருக்குது' பாடல் உருவான விதம்: கமல் வெளிப்படை

By செய்திப்பிரிவு

'சிப்பியிருக்குது முத்துமிருக்குது' பாடல் உருவான விதத்தை கமல் நேரலையில் பேசும் போது குறிப்பிட்டார்.

கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலைக் கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 2-ம் தேதி நடைபெற்றது.

இந்த நேரலைப் பேட்டியில், தனது பழைய படங்கள் நினைவுகள், அரசியல் வருகை, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் கமல்ஹாசன். இதில் தனது படங்களில் கடிதம் எழுதும் முறை அடிக்கடி வருவது குறித்தும், 'சிப்பியிருக்குது முத்துமிருக்குது' பாடல் உருவான விதம் குறித்து பேசியுள்ளார் கமல்

அந்தப் பகுதி:

விஜய் சேதுபதி:உங்கள் படங்களில் டைரி அல்லது கடிதம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். 'உத்தமவில்லன்', 'குருதிப் புனல்', 'அன்பே சிவம்', 'குணா' என எல்லா படங்களிலும் கடிதம் இடம்பெற்றிருக்கிறது. என்ன காரணம்?

கமல்: நானும் பாலச்சந்தர் அவர்களும் நிறைய கடிதம் பரிமாறிக் கொள்வோம். அது அனைத்தையும் பிரசுரிக்க முடியாது. வருத்தங்கள், கோபங்கள் என அதில் எல்லாம் இருக்கும். என் அப்பாவும் நிறைய கடிதங்கள் எழுதுவார்.மேலும் சினிமாவில் ஐயா கலைஞர், சிவாஜி அவர்கள், ஸ்ரீதர் அவர்கள் என அனைவரது காலத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வசனங்கள் குறைய ஆரம்பித்தன. எங்காவது மொத்த கருத்தையும் அப்படியே சொல்ல கடிதம் தான் சிறந்த வழி.

''அடுத்த விநாடி ஆச்சரியங்கள்.......'' (அன்பே சிவம்) என்பதை பேசும்போது சொன்னால் அவ்வளவு நன்றாக இருக்காது. ஆனால் நிஜமாக வசனத்தோடு சேர்ந்து வரும் கடிதம் என்பது 'குணா'வில் வருவதுதான். நான் உனக்கு எழுதும் கடிதத்தை நீயே எனக்கு எழுதிக் கொடு என்று சொல்வதுதான் எனக்குப் பிடித்திருந்தது.

விஜய் சேதுபதி: அது ஒரு அற்புதமான யோசனை சார். அந்தப் பாடலும் சரி, 'சிப்பியிருக்குது முத்துமிருக்குது' பாடலும் சரி, அழகான யோசனைகள்

கமல்: 'சிப்பியிருக்குது முத்துமிருக்குது' தோன்றியதற்கான காரணத்தை நான் சொல்கிறேன். அப்படி ஒரு சம்பவத்துக்கு நான் சாட்சியாக இருந்திருக்கிறேன்.

'அவர்கள்' படத்தை எடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு சூழலுக்கான பாடலுக்கு பாலச்சந்தரும், எம்.எஸ்.வியும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கவிஞர் கண்ணதாசன் வழக்கம் போல மதியம் தூங்கிவிட்டார். வர தாமதமாகிவிட்டது. இவர்கள் ரெண்டு பேருக்கும் என்ன சூழல், எப்படிப் பாடல் என்று தெரியும். கவிஞர் எதைப் பற்றியும் தெரியாமல், ஒரு காற்று போல உள்ளே வந்தார். தாமதமாகி விட்டது, கடைசி நிமிடத்தில் வந்துவிட்டாரே என எல்லோரும் பதட்டத்தில் இருந்தார்கள்.

'ஒண்ணும் பதறாதீங்க, சரியா வரும், நான் ஒரு சிகரெட் பிடிச்சிட்டு வந்துடறேன்' என்று சொல்லிவிட்டு கவிஞர் வெளியே சென்றார். அந்த ஐந்து நிமிடத்திலும் அவர் சிகரெட் தான் பிடித்தார். மீண்டும் உள்ளே வந்தார். இவர்கள் மெட்டை வாசித்துக் காட்டினார்கள். அதைக் கேட்டுவிட்டு

"அங்கும் இங்கும் பாதை உண்டு

இன்று நீ எந்தப் பக்கம்

ஞாயிறுண்டு திங்களுண்டு

உந்தன் நாள் என்ன நாளோ"

என்று உடனே அடுத்தடுத்து சொன்னார். இதையெல்லாம் நான் கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தேன். இதுதான் அப்படியே ('வறுமையின் நிறம் சிகப்பு' படத்தில்) வந்தது. ஒரு மெட்டைச் சொன்னதும் அதற்கு கவிஞன் வரிகளைச் சொல்லிப் பாடல் உருவாகும் மகிழ்ச்சி இருக்கிறது இல்லையா அது ஒரு காதல் தான் . நாயகன் நாயகிக்கு நடுவில் காதல் வந்துவிட்டது என்பதை இதை விட சுருக்கமாகச் சொல்லவே முடியாது. பாலச்சந்தரிடம் இதைச் சொன்னதும், 'ஆமால்ல, அப்படி ஒரு லவ் சீன் இருந்தா நல்லா இருக்கும்' என்று சொன்னார். அப்படி வந்ததுதான் 'சிப்பியிருக்கு முத்துமிருக்குது' பாடல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

மேலும்