தன் நிறுவன படங்களின் ஊழியர்களுக்கு தொடர் சம்பளம்: விஷ்ணு விஷாலுக்கு குவியும் பாராட்டு

By செய்திப்பிரிவு

கரோனா அச்சுறுத்தலிலும் தான் தயாரித்து வரும் படங்கள் அனைத்திற்குமே சரியாக சம்பளம் கொடுத்து வருகிறார் விஷ்ணு விஷால்

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து, தயாரித்து வரும் படம் 'எஃப்.ஐ.ஆர்'. இன்னும் இதன் படப்பிடிப்பு முடிவடையவில்லை. கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து முரளி கார்த்திக் இயக்கத்தில் 'மோகன் தாஸ்' என்னும் படத்தில் நாயகனாக நடித்து தயாரிக்கவுள்ளார். இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' இயக்குநர் செல்லா இயக்கத்தில் உருவாகும் படத்தையும் தயாரித்து நடிக்கவுள்ளார்.

தற்போது கரோனா அச்சுறுத்தலால் வெள்ளித்திரை சம்பந்தப்பட்ட எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை. இதனால் உதவி இயக்குநர்கள், பணியாளர்கள் தொடங்கி பலரும் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஆனால், விஷ்ணு விஷால் நிறுவனத்தில் பணிபுரிபவர்களோ கடும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

என்னவென்றால், தனது மூன்று படங்களிலும் பணிபுரியும் அனைவருக்குமே தொடர்ச்சியாக சம்பளம் கொடுத்து வருகிறார் விஷ்ணு விஷால். இந்தச் சமயத்தில் தான் அனைவருக்குமே சம்பளம் தேவைப்படும் என்று கூறி அனைவருக்குமே முழுச் சம்பளத்தையும் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திரையுலகைப் பொறுத்தவரைப் பணி செய்தால் மட்டுமே சம்பளம் என்று இருந்த நிலையிருப்பதை மாற்றி, அனைவருக்குமே விஷ்ணு விஷால் சம்பளம் கொடுத்துள்ளார். இந்தத் தகவலை இயக்குநர் அருண் வைத்தியநாதன் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டார். இதனைத் தொடர்ந்து பலரும் விஷ்ணு விஷாலுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE