'சகலகலா வல்லவன்' படத்தை நானும் திட்டியிருக்கிறேன்: கமல் வெளிப்படை

By செய்திப்பிரிவு

'சகலகலா வல்லவன்' படத்தை நானும் நண்பர்களுடன் இணைந்து திட்டியிருக்கிறேன் என்று கமல் குறிப்பிட்டார்.

கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலைக் கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 2-ம் தேதி நடைபெற்றது.

இந்த நேரலைப் பேட்டியில், தனது பழைய படங்கள் நினைவுகள், அரசியல் வருகை, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் கமல்ஹாசன். இதில் தனக்கும் பாலுமகேந்திராவுக்கும் இடையே ஆன நட்பு மற்றும் 'சகலகலா வல்லவன்' குறித்து கமல் பேசிய பகுதி:

விஜய் சேதுபதி கேள்வி - நீங்கள் நிறைய குருமார்கள் இருப்பதாகச் சொன்னீர்கள். ஆனால் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்பது நமது விருப்பம். வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்படாமல் இந்த ரசனை, இந்தப் பாதையில் நான் போக விரும்புகிறேன் என நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள் இல்லையா, அது எப்படி நடந்தது?

கமல்: எனக்கும் பாலுமகேந்திராவுக்கும் இடையே உருவான நட்பு, எனக்கும் அனந்துவுக்கும் இடையே உருவான நட்பு ஆகியவை ஒரு காரணம், பாலசந்தர் என்கிற மலை எனக்கு விளையாட நிறைய இடம் கொடுத்தார். 36 படங்களில் அவருடன் பணியாற்றினேன். பாலசந்தர் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும்போதே, தமிழ் சினிமாவை இன்னும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற கூட்டம் ஒன்று வந்தது, அவர்கள் புனே திரைப்படக் கல்லூரியில் படித்துவிட்டு வந்தவர்கள். பாலுமகேந்திரா அப்படிப்பட்டவர்தான்.

மலையாள சினிமாவில் நான் தொழில்நுட்பக் கலைஞனாக வேலைபார்த்தபோது அவரது பரிச்சயம் கிடைத்தது. எங்கள் நட்பு வளர வளர என்னை ஒரு நடிகனாக அவர் பார்க்க ஆரம்பித்தார். அப்போது ஒரு கட்டத்தில் அவரிடம், 'எல்லாவற்றையும் விட்டுவிடுகிறேன். நீங்கள் சிபாரிசு செய்யுங்கள், நான் புனே திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறேன்' என்று அவரிடம் சொன்னேன்.

"அதற்கு அவர், வேண்டாம், நீ இங்கு கால் வைத்துவிட்டாய். உனக்கு சந்தேகம் இருந்தால் என்னிடம் கேள்" என்றார். "எனக்கு ஒளிப்பதிவு கற்க வேண்டும்" என்றேன், "நான் சொல்லித் தருகிறேன்" என்றார்.

என் படத்தில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக இருந்தால், என் காட்சி இல்லாதபோது நான் எப்போதும் கேமரா பக்கம்தான் நின்று கொண்டிருப்பேன். நான், பரதன், பாலுமகேந்திரா மூன்று பேரும் கூட்டு, நட்பு.

அப்போது பாலுமகேந்திராவுக்கு வணிக சினிமாவின் மீது மிகப்பெரிய கோபம் இருந்தது. இப்படியே சென்றால் டெல்லி, படவிழா, கலைப்படம் என்றுதான் போக முடியும். இவர்களிடம் நான் பேசிக்கொண்டிருக்கும் போது, என் பிழைப்பைக் கெடுத்துவிடுவார்களோ என்ற பயமும் எனக்கு இருந்தது. நான் அவர்களிடம் விவாதம் செய்வேன். ஏனென்றால் எனக்கு சார்லி சாப்ளின் பெரிய உந்துதல் கொடுத்தவர். அவர் நகைச்சுவை, சீரியஸ் என இரண்டையும் செய்தவர். அப்படி ஏன் நாம் செய்யக் கூடாது. மக்களைச் சென்றடையும் படத்தைக் கொடுத்துவிடுவதில் என்ன அவமானம் என்று நான் பேசினேன்.

சினிமாவின் தரமும் குறையாமல், மக்களுக்கும் சென்றடைந்தால் என்ன என்று சொன்னால் அப்படியெல்லாம் முடியாது. கோடம்பாக்கத்துக்காரர்கள் உன்னைக் கவிழ்த்துவிடுவார்கள் என்றார் பாலுமகேந்திரா. ஆனால் நான் பேசியதைத் தான் அவரும் நானும் சேர்ந்து படமாக எடுத்தோம். அதுதான் 'மூன்றாம் பிறை'.

'சகலகலா வல்லவன்' படத்தை எல்லோரும் திட்டுவார்கள். பாலுமகேந்திரா கூட திட்டுவார். நண்பர்கள் திட்டியதில் எனக்கு அவமானமாகிவிட்டது. நானும் சேர்ந்து படத்தைத் திட்டியிருக்கிறேன். அப்புறம் யோசித்துப் பார்த்தேன். நான் அந்த வழியைத் தொடாமல் போயிருந்தால் என்னால் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தையே ஆரம்பித்திருக்க முடியாது.

ஏனென்றால், சினிமா என்பது டிக்கெட் போட்டு செய்யும் வியாபாரம்தானே. நான் தர்மத்துக்காக நடிக்கவில்லையே. தியாகய்யர் தஞ்சாவூர் வீதிகளில் ராமனைப் போற்றிப் பாடி யாசகம் பெற்றதைப் போல நான் செய்யவில்லையே? எனக்கு கார் வாங்க வேண்டும், டிக்கெட் விற்க வேண்டும் என்று ஆசை. எம்ஜிஆர், சிவாஜி போல ஆக வேண்டும் என்று ஆசை. அப்படி இருக்கும்போது மக்களை மகிழ்விக்க மாட்டேன் என்று ஏன் வீம்பு கொள்ள வேண்டும்.

மக்களுக்கு என் கலை புரியவில்லை என்றால் அவர்களை அந்தப் புரிதலைக் கொண்டு வரவேண்டுமே தவிர நான் தனியாக காட்டில் மகரிஷியாக உட்காரவும் முடியாது, சேற்றில் அவர்களுடன் உழன்று குளிக்காமலும் இருக்க முடியாது. அவர்களுக்கு நல்ல நண்பனாகவும், ஆசிரியனாகவும், விதூஷகனாகவும், கோமாளியாகவும் நான் மாற வேண்டும்.

இவ்வாறு கமல் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்