'ஆட்டோகிராஃப்' குறித்து மறக்க முடியாத சம்பவம்: இயக்குநர் சேரன் பகிர்வு

By செய்திப்பிரிவு

தனது 'ஆட்டோகிராஃப்' படம் தொடர்பாக மறக்க முடியாத சம்பவம் ஒன்றை இயக்குநர் சேரன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

2004-ம் ஆண்டு சேரன் இயக்கி, நடித்து, தயாரித்து வெளியான படம் 'ஆட்டோகிராஃப்'. இதில் கோபிகா, சினேகா, மல்லிகா, ராஜேஷ், இளவரசு உள்ளிட்ட பலர் சேரனுடன் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போதும் காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்போது கரோனா அச்சுறுத்தலால் அனைவருமே பழைய ஞாபகங்களை தங்களுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இதில் பலரும் தங்களுக்குப் பிடித்த படங்களுக்குச் சென்ற திரையரங்க டிக்கெட்டையும் சிலர் பகிர்ந்திருந்தனர்.

அப்படி ஒருவர் சென்னையிலுள்ள தேவி பாரடைஸ் திரையரங்கில் 'ஆட்டோகிராஃப்' பார்த்த டிக்கெட்டைப் பகிர்ந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இயக்குநர் சேரன் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்த டிக்கெட்டின் கதை: முதலில் தேவிகலாவில் (சிறிய தியேட்டர்) மட்டுமே திரையிட அனுமதி கிடைத்தது. இரண்டாவது வாரம் தேவிபாலாவிலும் இடம் கிடைத்தது. மூன்றாவது வாரம் தேவிபாரடைஸ் (பெரிய தியேட்டர்) சேர்ந்து மூன்றிலும் படம் ஓடியது.

நான்காவது வாரம் முதல் தேவியிலும் திரையிட்டார்கள். நான்கு திரையரங்கிலும் 'ஆட்டோகிராஃப்' மட்டுமே மூன்று வாரங்கள் ஓடியது. பின்னர் ஒவ்வொன்றாகக் குறைத்து 100 நாட்களுக்கு மேல் ஓடியது.. சிட்டியில் 'ஆட்டோகிராஃப்' திரையிட்ட நிறைய திரையரங்குகள் இதே முறையைப் பின்பற்றின. அது ஒரு மறக்கமுடியாத சம்பவம் என் வாழ்வில்".

இவ்வாறு இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE