தமிழ்த் திரையுலகில் வெங்கட் பிரபு இயக்குநராக அறிமுகமான படம் 'சென்னை 28'. எஸ்.பி.சரண் தயாரித்த இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஜெய், சிவா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, சம்பத் ராஜ், இளவரசு, விஜயலட்சுமி என ஒரு பெரிய பட்டாளமே இந்தப் படத்தில் நடித்தனர். யுவன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்த இந்தப் படத்துக்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்தப் படம் வெளியாகி இன்றுடன் (ஏப்ரல் 27) 13 ஆண்டுகள் முடிந்துள்ளன. இதனை முன்னிட்டு இணையத்தில் பலரும் இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள். 13 வருடங்கள் ஆகிவிட்டதை ஒட்டி, இயக்குநர் வெங்கட் பிரபுவைக் கொஞ்சம் நினைவலைகளைக்கு அழைத்துச் சென்றோம்.
பட வெளியீட்டுக்குப் பட்ட கஷ்டங்கள்
» வாக்குமூலம் அளிக்க வேண்டும்: கனிகா கபூருக்கு காவல்துறை நோட்டீஸ்
» 'சென்னை 28' பார்த்துவிட்டு பாரதிராஜா எழுதிய கடிதம்; நினைவுகூர்ந்த வெங்கட் பிரபு
'சென்னை 600028' படத்தை விற்பதற்காக நிறைய பேருக்குப் போட்டுக் காட்டினோம். பெரிய நிறுவனங்கள் எல்லாம் பொறுப்பே இல்லாத படம் என்று சொல்லிவிட்டார்கள். பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஒரு பெரிய குழுவுடன் வந்து பார்த்துவிட்டு, எங்களுடைய நேரத்தை வீணடித்துவிட்டீர்கள் என்றார்கள். 'பிடிக்கல என்று சொல்லிட்டாங்கடா என்னடா பண்றது' என்று தயாரிப்பாளர் சிவா சார் கேட்டார். தயாரிப்பாளர் சரண் 'சென்னை 28' படத்தைப் பிரித்துப் பிரித்து விற்றார். நாயகர்கள் இல்லை, புதிய இயக்குநர், வழக்கமான கதையுமே கிடையாது, ரசிகர்களுக்குப் பிடிக்குமா பிடிக்காதா தெரியாது. இப்படி நிறைய விஷயங்களுக்கு இடையே தயாரிப்பாளர் சரண் முழுமையாக ரிஸ்க் எடுத்தார். எங்களையும் நம்பி நிறைய புதிய விநியோகஸ்தர்கள் வந்து படத்தை வாங்கினார்கள்.
படம் வெற்றியடைந்தவுடன், ப்ரமிட் சாய்மீரா நிறுவனம் "எங்களுடைய கணிப்பு தவறு. இப்போது படத்தை மொத்தமாக ஒரு விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறோம்" என்றார்கள். ஆனால், சரண் "ரிஸ்க் எடுத்து வெளியிட்டுவிட்டோம். என்ன பண்ணுகிறதோ அது நமக்கே இருக்கட்டும்" என்று சொல்லி மறுத்துவிட்டார்.
அப்பாவுக்கு 'கரகாட்டக்காரன்'; எனக்கு 'சென்னை 28'
'சென்னை 28' படம் பெரிய வெற்றி பெறும், இந்த மாதிரி நடக்கும் என்று நம்பிக்கை எல்லாம் இல்லை. புதுசா ஒரு விஷயம் பண்ணலாம் என்று முயற்சி செய்தோம். இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்தது கண்டிப்பாக கடவுளுடைய அனுக்கிரகம்தான். எல்லாப் படங்களிலும் அனைவருமே உழைக்கிறார்கள். நமது படத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுதான் ஆசை. அது நடக்கும் போது, அதை விடப் பெரிய அங்கீகாரம் இருக்கவே முடியாது. இத்தனை வருடங்கள் கழித்து இன்னும் கொண்டாடப்பட்டு வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. 'நீ எடுத்ததிலேயே சிறந்த படம் 'சென்னை 28' தான்' என்று இப்போது வரை சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் ரொம்ப ஆராயக்கூடாது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எங்கப்பாவின் 'கரகாட்டக்காரன்' ரொம்பப் பிடிக்கும், அதே மாதிரி என் படங்களில் 'சென்னை 28' பிடிக்கும்.
கதைக்களத்தின் பின்னணி
யாரிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரியாத காரணத்தால், எனக்கு சினிமா ஃபார்முலா எல்லாம் தெரியாது. யாரிடமாவது பணிபுரிந்திருந்தால் சினிமா இப்படித்தான் செய்ய வேண்டும் என நினைத்திருக்கலாம். சினிமாவைக் கற்றுக்கொண்டதே, சினிமாவைப் பார்த்துதான். நிறையப் பேர் நாவலிருந்து, பக்கத்து வீடுகளில் சொல்லும் கதைகளிலிருந்து, வாழ்க்கையில் நடந்த கதைகளிலிருந்து என இன்ஸ்பயர் ஆகி படம் பண்ணுவார்கள். நான் சினிமா பார்த்து இன்ஸ்பயர் ஆகி சினிமா பண்றேன்.
ஒரு கதையை வித்தியாசமாக எப்படியெல்லாம் சொல்லலாம் என்றுதான் யோசிப்பேன். நிறையப் படங்களில் நாயகனுக்கு நண்பனாக நடித்திருப்பேன். எப்போதுமே நாயகர்கள் மட்டும்தான் ஐடியா சொல்வார்கள், அதற்கு நாங்கள் 'நீ சொல்வது கரெக்ட் மச்சான்' என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி எந்தவொரு குழுவினரையும் நிஜத்தில் காண முடியாது. எந்தவொரு நண்பர்கள் குழுவிலும் நாயகன் என்று ஒருவர் இருக்கவே மாட்டார். அனைவருமே பேசுவார்கள், ஐடியாக்கள் சொல்வார்கள். அனைவருக்குமே ஒரு வாழ்க்கை, ஒரு பின்னணி இருக்கும். அதைப் பிரதிபலிக்கலாமே என்று விஷயத்தில் தான் 'சென்னை 28' படம் பண்ணினேன். அது மக்களுக்குப் பிடித்துவிட்டது.
தொடர் பாகங்களின் திட்டம்
இப்போதே 'சென்னை 28' படத்தில் நடித்த பசங்களுக்கு வயதாகிவிட்டது. இனிமேல் அவர்களால் கிரிக்கெட் விளையாட முடியுமா என்றே தெரியவில்லை. 3-ம் பாகத்துக்கு நல்லதொரு களம் கிடைத்தால் பண்ணுவேன். முன்பு, 'சென்னை 28' படத்தைத் தொடர்ச்சியாகப் பண்ணலாம் என்பதுதான் ஐடியா. ஆங்கிலத்தில் கால்பந்து ஆட்டத்தை மையமாக வைத்து 'கோல்' என்ற படம் உண்டு. சாதாரண ஒருவன் ஒரு கால்பந்தாட்ட அணியில் இணைந்து விளையாடுவான். அவன் ஒரு தீவிரமான கால்பந்தாட்ட வெறியன். அவனுடைய ஒவ்வொரு பயணத்தையும் படமாகச் செய்திருப்பார்கள். அந்த மாதிரி பண்ணலாம் என்றுதான் எனக்கும், சரணுக்கும் ஐடியாவாக இருந்தது.
'சென்னை 28', 'சென்னை 28 இரண்டாவது இன்னிங்கிஸ்', 'சென்னை 28 தி பைனல்ஸ்' என்று மூன்று பாகங்களாகப் பண்ணலாம் என்று முடிவு பண்ணினோம். ஆனால், அனைவருடைய சூழ்நிலைகள் வெவ்வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டது. நீண்ட நாட்கள் கழித்து 'சென்னை 28' 2-ம் பாகம் ஐடியா வந்ததால் நானும், சரணும் சேர்ந்து தயாரித்து வெளியிட்டோம். அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடித்த பசங்களுக்கு மட்டுமே அதன் நினைவுகள் புரியும். சாலையில் கிரிக்கெட் விளையாடியவர்கள் மட்டுமே அதை உணர முடியும்.
மறக்க முடியாத பாராட்டுகள்
அஜித் சார் ப்ரீமியரில் ரொம்ப என்ஜாய் பண்ணிப் பார்த்தார். மாயாஜால் திரையரங்கில் யாருக்கும் தெரியாமல் போய் பார்த்துவிட்டு, போன் பண்ணி நீண்ட நேரம் விஜய் சார் பாராட்டினார். சிம்பு சார் படத்தைப் பார்த்துவிட்டு 'சான்ஸே இல்லை சார்' என்று பாராட்டி, மதுரை ஏரியாவை விற்றுக் கொடுத்தார். 100-வது நாள் விழாவை இப்போது வரை மறக்கவில்லை. கே.பி.சார், பாரதிராஜா சார் இருவரும் எனக்கு எழுதிய கடிதத்தைப் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். ஒட்டுமொத்தத் திரையுலகினரிடமிருந்து பயங்கரமான பாராட்டு கிடைத்தது.
ரஜினி சார் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, க்ளைமாக்ஸ் காட்சிக்கு அவர் எப்படி ரியாக்ட் பண்ணுகிறார் என்று பார்த்துக் கொண்டே இருந்தோம். க்ளைமாக்ஸில் ஜெயித்துவிடுவார்களா, தோற்றுவிடுவார்களா என்று பயங்கர பதற்றத்துடன் பார்த்தார். படம் முடிந்து வெளியே வந்து, நடித்த பசங்க தொடங்கி அனைவரையும் பாராட்டினார்.
100-வது நாளில் வேற லெவலில் பாராட்டிவிட்டார். இப்போது பார்த்தால் கூட அது பயங்கரமாக இருக்கும். " 'லகான்' படத்தை ரஜினி சாரை வைத்து தமிழில் ரீமேக் பண்ண, பெரிய இயக்குநரிடம் போய் பேசியிருக்கிறார்கள். அந்தப் படத்தை நான் பார்த்துவிட்டு, இதை இயக்கவேண்டும் என்றால் ரொம்ப திறமையான ஒரு இயக்குநர் வேண்டும். ஆகையால் விட்டுவிடலாம் என்று ட்ராப் பண்ணிவிட்டோம். 'சென்னை 28' பார்த்தவுடன் அந்த 'லகான்' தமிழ் ரீமேக்கை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கியிருக்கலாம் என நினைத்தேன்" என்று பேசினார்.
இதை விட ஒரு பெருமையான விஷயம் என்ன இருக்கு சொல்லுங்கள்? என்றார் வெங்கட் பிரபு.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago