தற்போதுள்ள சூழலுக்கு யார் காரணம் என்பதை விளக்கி, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் வெளியீடாகத் திரைக்கு வர இருந்தது. ஆனால், அமேசான் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியதால், நேரடியாக டிஜிட்டலில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால், திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகாது.
இந்த முடிவால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் 2டி நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்தையும் வெளியிடுவதில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
» கரோனா ஊரடங்கால் அவதியுறும் மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு ரூ.25,000: லாரன்ஸ் நிதியுதவி
» தயாரிப்பாளர்களுக்கு உதவக் கடிதம் எழுதிய கே.ராஜன்: உடனடியாக முன்வந்த ரஜினிகாந்த்
"செயலாளர் பன்னீர்செல்வம் வீடியோவுக்கு அனைவரும் கருத்து தெரிவித்திருந்தீர்கள். நானும், செயலாளரும் அனைவரிடமும் பேசிப் பார்த்தோம். சரியான பதில் சொல்லாத காரணத்தால்தான், பன்னீர்செல்வம் வீடியோ வெளியிட்டார். அது அவருடைய கருத்து மட்டும் அல்ல. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் கருத்து.
என்னிடம் நிறைய தயாரிப்பாளர்கள் பேசினார்கள். பலரும் நாங்கள் பணம் போட்டுப் படம் எடுத்துள்ளோம், எப்படி நீங்கள் கொடுக்கக் கூடாது என்று சொல்லலாம் என்றார்கள். நாங்கள் கொடுக்கக் கூடாது என்று சொல்லவே இல்லை. உங்களுக்கு எப்படி வியாபார சுதந்திரம் இருக்கிறதோ, அதே மாதிரி நாங்களும் முதலீடு போட்டுதான் திரையரங்குகளைக் கட்டியிருக்கிறோம். உங்களுக்கு இருக்கும் சுதந்திரம் எங்களுக்கு இல்லையா?
எங்கள் திரையரங்கில் என்ன படம் போட வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். ஒரு படம் வேண்டாம் என்று நாங்கள் முடிவெடுத்தால், அதை வேண்டும் என்று எங்களைக் கட்டாயப்படுத்த முடியாது. தயாரிப்பாளர்களுக்குச் சுதந்திரம் இருப்பதுபோல், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சுதந்திரம் இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு மட்டும்தான் சுதந்திரம் இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள்.
2 மாதம் லாக் டவுன் ஆகிவிட்டது. இன்னும் எத்தனை மாதங்கள் ஆகும் எனத் தெரியவில்லை. லாக் டவுன் முடிந்தவுடன் நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுகூடி, நாம் இனிமேல் எப்படித் தொழில் செய்வது என்று பேசுவோம். நடிகர்கள் சம்பளம் என்பதை மட்டுமே பேசி வருகிறார்கள். ரோகிணி திரையரங்கில் பணிபுரியும் பணியாளர்கள் சம்பளம் ஒரு மாதத்துக்கு 35 லட்சம் முதல் 40 லட்சம் வரை வரும். என்னுடைய திரையரங்கிலேயே 28 லட்சத்திலிருந்து 30 லட்சம் வரை வருகிறது. கரண்ட் பில், சுகாதாரம் என நிறைய இருக்கிறது. 3 மாதம் லாக் டவுனில் 1 கோடியிலிருந்து ஒன்றரை கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. தயாரிப்பாளர்கள் எத்தனை பேருக்கு சம்பளம் கொடுக்கிறீர்கள். வட்டி கட்டுகிறோம் என்கிறீர்கள். நீங்களே கரோனா லாக் டவுன் காலத்துக்கு வட்டி கொடுக்க மாட்டோம் என்று உங்கள் வாட்ஸ் அப் குரூப்பில் போடுகிறீர்கள். நாங்கள் எல்லாம் கையிலிருந்து பணத்தைச் செலவு செய்ய வேண்டும்.
கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் திரையரங்க உரிமையாளர்கள் கூடிப்பேசி நமது கோரிக்கைகளை தமிழக முதல்வர், செய்தித்துறை அமைச்சரிடம் எடுத்துரைப்போம். அதை அவர்கள் செய்து கொடுத்தால் மட்டுமே நாம் தொழில் பண்ண முடியும். இப்போது ஆபரேட்டர் கிடையாது. ஆகையால் பரீட்சை முறை வேண்டாம், இப்போது அனைத்துமே டிஜிட்டலாகிவிட்டது என்று சொல்லியிருக்கிறோம். ஆனால் அந்த உத்தரவைக் கூட நம்மால் வாங்க முடியவில்லை.
லைசென்ஸ் ஆபரேட்டர் முறையை ரத்து செய்ய வேண்டும். சின்ன திரையரங்குகளைப் பெரிய திரையரங்குகளாக மாற்றுவதற்கு எளிமையான வழிமுறை பண்ண வேண்டும். திரையரங்க லைசென்ஸ் வருடத்துக்கு ஒருமுறை நம்மால் புதுப்பிக்கவே முடியவில்லை. மற்ற எந்தவொரு கட்டிடத்துக்கும் அப்படி கிடையாது. நமக்கு மட்டும்தான் அபப்டி வைத்திருக்கிறார்கள். அதேபோல் கரோனா பிரச்சினை முடிந்தவுடன் நம்மால் உள்ளாட்சி வரியைக் கட்டவே முடியாது. சுமார் 5 பிரச்சினைகளை அரசாங்கத்திடம் பேசி அவர்கள் ஒப்புக் கொண்ட பிறகு திரையரங்குகளைத் திறந்தால் போதும். அரசாங்கம் நமக்கு உறுதுணையாக இருப்பதால், செய்து கொடுப்பார்கள் என நாமும் நம்புவோம்.
சின்ன படங்களை நீங்கள் போடுவதில்லை, அமேசான் வாங்க ஆரம்பித்துவிட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு முன்னணி நாயகியின் படத்தை வாங்கியிருக்கிறார்கள். அந்த நாயகி எப்படி முன்னணி நாயகியானார், திரையரங்கம் மூலம் தானே. ஒவ்வொரு நாயகனும் எப்படி முன்னணிக்கு வருகிறார்கள் என்பதை மறந்துவிட்டார்களா?. அவர்கள் ஏறி வந்த ஏணியை மறந்துவிட்டார்கள். 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர்கள் இன்று 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவது எப்படி சாத்தியமானது? முன்பு விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கி வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வியாபாரம் நன்றாகத்தான் இருந்தது.
ஒரு உதாரணம் சொல்கிறேன். 'அண்ணாமலை' படத்துக்குத் தனது சம்பளமாக வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு விநியோக உரிமையை வாங்கினார் ரஜினிகாந்த். உடனே தயாரிப்பாளர்கள் கொந்தளித்துவிட்டார்கள். அப்போது நான் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராக இருந்தேன். "நல்ல விஷயம் தானே. படம் நன்றாக ஓடினால் நல்ல சம்பளம், ஓடவில்லை என்றால் குறைவான சம்பளம் தானே" என்றேன். இது ஒரு மோசமான முன்னுதாரணம் என்றார்கள். ஆனால், இன்று 'தர்பார்' படத்துக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, இந்தி மற்றும் வெளிநாட்டு உரிமை என அத்தனையும் சேர்த்து சம்பளமாகக் கொடுத்துள்ளனர்.
வியாபாரம் விரிவடைந்து கொண்டே போகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 35 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அத்தனை பேரும் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். சுமார் 4,500 திரையரங்குகள் நல்லபடியாக ஓடிக் கொண்டிருந்தன. காரணம், அன்றிருந்த ஹீரோக்கள் அத்தனை பேரும் 8 - 10 படங்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். திரையரங்குகளுக்கு மக்களைக் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருந்தார்கள்.
எப்போது திரையரங்குகள் மூட ஆரம்பித்தது என்றால், ஒவ்வொரு ஹீரோவும் பெரிய சம்பளம் வாங்கிக் கொண்டு 1 வருடத்துக்கு ஒரு படத்தில் நடித்ததினால் நடிகர்கள் இல்லாத படங்களுக்கு மக்கள் வருவதில்லை. இதனால் திரையரங்குகளை மூடும் சூழல் உருவானது. இப்போது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும்தான் நடிகர்கள் கால்ஷீட் தருகிறார்கள். அப்படியென்றால் தயாரிப்பாளர்கள் எங்கு போவது? இப்படியான சூழல் மாற யார் காரணம்? நாளை செவ்வாய் கிரகத்தை விற்ற பணம் தயாரிப்பாளர்களுக்குக் கிடைத்தால் கூட நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும்தான் சம்பளம் கொடுக்கப் போகிறீர்கள். நீங்கள் சம்பாதிக்கப் போவதில்லை, எங்களையும் சம்பாதிக்க விடப்போவதில்லை.
எத்தனை திரையரங்க உரிமையாளர்கள் சம்பாதித்துவிட்டார்கள். சுமார் 20% பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரையரங்குகள் மட்டுமே நல்லபடியாக வசூலாகிக் கொண்டிருக்கிறது. 1,000 திரையரங்குகளில் 700 திரையரங்குகளுக்குப் போட்ட பணம் கூட திரும்ப வருவதில்லை. திரையரங்கை மூடிவிட்டால் கேவலமே என்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கண்டிப்பாக எங்களுடைய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முறை நிச்சயமாக நல்லதொரு முடிவு எடுப்போம். அதேபோல் கரோனா ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறக்கும் போது டிஜிட்டலில் 100 நாட்களுக்குப் பிறகு வெளியிடுவோம் என்று உத்தரவாதம் கொடுக்கும் படங்களை மட்டும் திரையிட்டால் போதும். அதேபோல் சுதந்திரம் என்று பேசுகிறார்கள். எங்களுக்குச் சுதந்திரமே கிடையாது. திரையரங்கம் கட்டித் திறக்கும்போதே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுகிறோம். தணிக்கை செய்யப்பட்ட படங்கள் மட்டுமே ஒளிபரப்ப முடியும். எங்களுக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது?
தயாரிப்பாளர்கள் அவர்களுடைய தரப்பில் சொல்லிக்கொண்டு இருக்கட்டும். நாம் நம்முடைய மீட்டிங்கில் பேசி முடிவு எடுத்த பிறகுதான் திரையரங்குகளைத் திறக்கப் போகிறோம்".
இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago