அழுததில்லை; நிறைய கத்தியிருக்கலாம்: மணிரத்னம்

படப்பிடிப்புத் தளத்தில் இதுவரை அழுததில்லை. ஆனால் நிறைய கத்தியிருக்கலாம் என்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால், பிரபலங்கள் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். அவ்வப்போது தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார்கள்.

இந்த ஊரடங்கில் முதன்முறையாக, மனைவி சுஹாசினியின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் இயக்குநர் மணிரத்னம். சுமார் ஒன்றரை மணிநேரம் இந்த நேரலை நிகழ்ந்தது.

இதில் எந்தவொரு கேள்வியையும் விடாமல் அனைத்துக் கேள்விகளுக்கும் மணிரத்னம் பதிலளித்தது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நேரலையில் ரசிகர் ஒருவர், "படப்பிடிப்பின்போது உணர்வுபூர்வமான காட்சிகளில் அழுதிருக்கிறீர்களா?" என்ற கேள்வியை மணிரத்னத்திடம் எழுப்பினார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக மணிரத்னம் கூறியதாவது:

"நான்தான் நடிகர்களை அழவைக்கிறேனே? நான் அழுவது எதற்காக? (சிரித்துவிட்டு) குழந்தை நடிகர்களுடன் பணியாற்றும்போது, அவர்கள் நடிப்பிலிருந்து விலகி அந்தத் தருணத்தில், கதாபாத்திரத்தில் வாழ ஆரம்பிப்பார்கள். அப்படி நடக்கும்போது அது எனக்கு அச்சத்தைத் தந்திருக்கிறது. கவலைப்பட்டிருக்கிறேன்.

படத்துக்காக அழுத்தமான ஒரு காட்சியில் நடித்துவிட்டு, அடுத்த நாள் அந்தக் குழந்தைக்கு எப்படி இருக்கும் என்று தெரியாது. இதைத்தாண்டி, நாம் நமது காட்சியைப் படம்பிடிக்கும்போது உணர்ச்சிவசப்படக்கூடாது என நினைக்கிறேன். ஏனென்றால் நம்முன் ஒரு வேலை இருக்கிறது, இந்த ஷாட் முடிந்தால் அடுத்த ஷாட் இருக்கிறது. எல்லாவற்றையும் எப்படி ஒருங்கிணைப்பது என யோசிக்க வேண்டும். எனவே, நான் அழுததில்லை. ஒருவேளை நான் நிறைய கத்தியிருக்கலாம்"

இவ்வாறு மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE