கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைக்க எதிர்ப்பு: முன்னணி இயக்குநர்கள் வேதனை

By செய்திப்பிரிவு

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைக்க எதிர்ப்பு தெரிவித்ததிற்கு முன்னணி இயக்குநர்கள் வேதனை தெரிவித்திருக்கிறார்கள்.

சென்னையில் நேற்று (ஏப்ரல் 19) கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைப் பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினர். பின்னர் மருத்துவரின் உடல் காவல்துறை உதவியுடன் புதைக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரோனா நோய்த்தொற்று எதிர்ப்புப் போரில் முன் படைவரிசை வீரர்கள் எனப் போற்றப்படும் மருத்துவர்கள் மரணத்துக்கு மரியாதை தராமல் இதுபோன்ற விழிப்புணர்வு இல்லாத செயலில் ஈடுபடும் சிலரால் மனிதாபிமானம் சிதைக்கப்படுவதாகத் தலைவர்கள் பலரும், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களும் தங்களுடைய வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக இயக்குநர்கள் சிலர் வெளியிட்டுள்ள ட்வீட்கள்:

இயக்குநர் வெங்கட் பிரபு: அதே நாளில், ஒரு தினக்கூலி பணியாளரின் செயலை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டியிருந்தனர். இங்கு, இந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவர்களை அடிக்கின்றனர். ஒரு மனிதருக்கு இறுதிச் சடங்குகள் மரியாதையுடன் நடக்க வேண்டும் தானே?

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்: சில மக்கள், கிருமிகளை விட மிகப் பயங்கரமானவர்கள். மிகவும் வருத்தப்படுகிறேன். மன்னித்துவிடுங்கள் டாக்டர்.

இயக்குநர் ரத்னகுமார்: (இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ட்வீட்டைக் குறிப்பிட்டு) ஆம், வெறுப்பும், எதிர்மறை எண்ணமும் இப்போது கொண்டாடப்படுகிறது. மனிதம் செத்துவிட்டது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE