அமிதாப் பச்சனின் விளம்பரம்: பிரபுவின் ஒத்துழைப்பால் பெப்சி தொழிலாளர்களுக்குக் கிடைத்த 2.70 கோடி ரூபாய்

By செய்திப்பிரிவு

அமிதாப் பச்சனின் விளம்பரத்தால் கிடைத்த பணத்தில், பிரபுவின் ஒத்துழைப்பால் பெப்சி தொழிலாளர்களுக்கு 2 கோடியே 70 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. படப்பிடிப்புகள் மூலம் தங்களுடைய வாழ்க்கையை ஒட்டி வந்த தினசரி தொழிலாளர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

தமிழ்த் திரையுலகில் பெப்சி தொழிலாளர்களுக்கு உதவ, பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் நிதியுதவியாகவும், பொருளுதவியாகவும் அளித்துள்ளனர். இதனிடையே, இந்திய அளவில் உள்ள சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வண்ணம் அமிதாப் பச்சன் குறும்படம் ஒன்றில் நடித்தார்.

'பேமிலி' என்ற பெயரில் உருவான இந்தக் குறும்படத்தில் ரஜினி, சிரஞ்சீவி, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் அமிதாப் பச்சனுடன் நடித்திருந்தனர். இதில் கிடைக்கும் பணத்தைத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கவுள்ளதாக அறிவித்தனர்.

தற்போது இதில் கிடைத்த தொகையில், பெப்சி தொழிலாளர்களுக்கு 2.70 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதனை அமிதாப் பச்சனிடம் பேசி பிரபு வாங்கிக் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக பெப்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"இனிய தமிழ்ப் புத்தாண்டு தினத்தில்‌ கரோனா ஊரடங்கு சட்டத்தால்‌ வேலை முடக்கப்பெற்று முற்றிலும்‌ வாழ்வாதாரம்‌ இழந்து நிற்கும்‌ நமது திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்கள்‌, தொழிலாளர்களுக்கு மற்றும்‌ ஒரு நிவாரணத்தை அறிவிக்கின்றோம்‌.

இந்திய சூப்பர்‌ ஸ்டார்‌ அமிதாப்பச்சன்‌ முயற்சியால்‌ மற்றும்‌ இளைய திலகம்‌ பிரபுவின் ஒத்துழைப்பால்‌ சோனி டிவி மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகிய இரு நிறுவனமும்‌ இணைந்து இந்திய திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்கள்‌, தொழிலாளர்களுக்காக சுமார்‌ 12 கோடி ரூபாய்‌ அளவில்‌ நிதி உதவி அளித்துள்ளனர். இதில்‌ நமது தமிழ்த் திரைப்படங்களில்‌ பணிபுரியும்‌ திரைப்பட த் தொழில்நுட்பக் கலைஞர்கள்‌, தொழிலாளர்களுக்காக ரூபாய்‌ 2 கோடியே 70 லட்சம்‌ ஒதுக்கப்பட்டுள்ளது.

அதாவது, 18,000 நமது சம்மேளன உறுப்பினர்களுக்கு தலா 1,500 பிக் பஜார் சூப்பர் மார்க்கெட்டின் கூப்பன் அனுப்பியுள்ளனர். இந்த கூப்பன் மூலம்‌ ஒரு உறுப்பினர்‌ 1,500 ரூபாய்க்கு உணவுப் பொருட்களை பிக் பஜார் சூப்பர் மார்க்கெட்டில் ஏப்ரல்‌, மே, ஜூன்‌ வரையில்‌ மாதா மாதம்‌ 500 ரூபாய்க்கோ அல்லது ஒரே முறை 1,500 ரூபாய்க்கோ அவர்கள்‌ விருப்பப்படி வாங்கிக் கொள்ளலாம்‌. உறுப்பினர்கள்‌, உறுப்பினர்‌ பெயர்‌, உறுப்பினர்‌ அங்கம்‌ வகிக்கும்‌ சங்கத்தின்‌ பெயர்‌, சங்கத்தின்‌ உறுப்பினர்‌ எண்‌, உறுப்பினரின்‌ ஆதார்‌ கார்டு எண்‌, உறுப்பினரின்‌ அலைபேசி எண்‌ ஆகியவற்றைச் சங்கங்களுக்கு அனுப்பி வைக்கவும்‌.

உறுப்பினர்கள்‌ இந்த ஊரடங்கு நேரத்தில்‌ கூப்பன் பெறுவதற்குச் சங்கத்திற்கோ, சம்மேளனத்திற்கோ நேரடியாக வர வேண்டிய அவசியம்‌ இல்லை. வாட்ஸ் அப் மூலமாகவோ குறுந்தகவல் மூலமாகவோ மேற்கண்ட விவரங்களை அனுப்பி வைத்தால்‌ உறுப்பினர்களுக்கு கூப்பன் உடன்‌ PIN NUMBER-ம் வாட்ஸ் அப் அல்லது குறுந்தகவல் மூலம் அனுப்பப்படும்

இவை இரண்டும்‌ இல்லாத உறுப்பினர்கள்‌ மட்டும்‌ நேரடியாக வந்து பெற்றுக்கொள்ள வேண்டும்‌. உறுப்பினர்கள்‌ வடபழனியில்‌ உள்ள பிக் பஜார் சூப்பர் மார்க்கெட்டிலோ அல்லது பாண்டி பஜாரில் உள்ள பிக் பஜார் சூப்பர் மார்க்கெட்டிலோ அவர்கள்‌ வசதிக்கேற்ப வாங்கிக்கொள்ளலாம்‌.

ஏப்ரல்‌ 20 வரை ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்துவதில்‌ மத்திய, மாநில அரசுகள்‌ மிக கடுமையாக இருப்பதால்‌ ஏப்ரல்‌ 21-க்கு பிறகு இந்தப் பொருட்களை வாங்கிக்கொள்வது நல்லது என சம்மேளனத்தின்‌ சார்பில்‌ உறுப்பினர்களுக்கு வேண்டுகோளை வைக்க விரும்புகிறோம்‌.

தமிழ்த் திரைப்படத் துறையில்‌ மிக கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்த நேரத்தில்‌ எங்களுக்கு உதவிய அமிதாப் பச்சனுக்கும்‌ துணை நின்ற இளைய திலகம் பிரபுவுக்கும்‌ நிதி உதவி வழங்கிய சோனி டிவி மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கும்‌ இந்தியத் திரைப்பட தொழிலாளர்க சம்மேளன கூட்டமைப்பான AIFEC-க்கும்‌ குறிப்பாக அதன்‌ செயலாளரான இயக்குநர்‌ உன்னிகிருஷ்ணனுக்கும்‌ தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள்‌ சம்மேளனத்தின்‌ சார்பில்‌ எங்கள்‌ மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்‌".

இவ்வாறு பெப்சி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE