எல்லோருக்கும் பிடித்த கேரக்டர் என்றும் வெற்றி பெறும் கதாபாத்திரம் என்றும் ஒருவிஷயத்தைச் சொல்லுவார்கள் சினிமாவில். ஹீரோ அப்பாவி என்று கதை வைத்தால், அந்த அப்பாவித்தனத்தை வைத்துக்கொண்டு காமெடியும் பண்ணலாம், செண்டிமெண்ட் காட்சிகளும் வைக்கலாம் என்பது திரைக் கதாசிரியர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. எம்ஜிஆர் - சிவாஜி காலத்திலிருந்தே, கமல் -ரஜினி காலத்திலும் கூட ஹிட்டடித்த ‘அப்பாவி’ விஷயம் அதேகாலகட்ட நடிகர்களுக்கும் வந்தது. ஹிட்டடித்தது. அப்படி ஹிட்டடித்த நடிகர்களில் மிக முக்கியமானவர் பிரபு. மிக மிக முக்கியமான படம்... ‘சின்னதம்பி’.
பிரபு மாதிரி ஒருமாஸ் ஹீரோ. குஷ்பு மாதிரி க்யூட் பேபி ஹீரோயின். காமெடியில் அதகளம் பண்ண கவுண்டமணி. அத்தனைப் பாடல்களையும் மிகப்பெரிய ஹிட்டாக்கிக் கொடுப்பதற்கு இளையராஜா. இதுபோதுமே... ஒரு படத்தை வெற்றிப் படமாக்குவதற்கு என்றிருந்ததுதான் எண்பதுகளின் காலம். தொந்நூறுகளின் காலம். ஆனாலும் அழகாக ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அதற்கு இன்னும் அழகாக திரைக்கதை அமைத்து, இன்னும் இன்னும் அழகாகப் படமாக்கி இயக்கினார் இயக்குநர் பி.வாசு.
அப்பாவி சின்னதம்பி பிரபுதான் கதையின் நாயகன். அவரின் நடிப்பும் சிரிப்பும் மேனரிஸமும் அச்சுஅசல் அப்பாவித்தனத்தை நமக்குக் காட்டிவிடும். அண்ணன்களால் பொத்திப் பொத்தி வளர்க்கப்படும் ஹீரோயின் குஷ்பு. ஆண்கள் எவரும் நுழையாத அந்த வீட்டுக்குள் நுழைந்து எல்லோருக்கும் பிடித்தமானவராக இருக்கும் ஒரே ஆண்... சின்னதம்பிதான்.
அவன் அப்பாவி என்பதாலேயே அதிக சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. தங்கையுடன் பழகவும் பேசவும் அனுமதிக்கப்படுகிறது. அப்பாவியின் முக்கியமான ப்ளஸ் பாயிண்ட்... மிக நன்றாகப் பாடுவான் என்பது. அவன் பாடினால், துக்கங்கள் பறந்தோடும். தூக்கம் வராமல் அழும் குழந்தை கூட தூங்கிப் போகும். அப்பேர்ப்பட்ட பாட்டுக்காரன், குஷ்புவின் மனதில் இடம்பிடிக்கிறான். தன்னையும் அறியாமல், அவனை நேசிக்கிறாள். ஒருகட்டத்தில், தாலி கட்டச் சொல்கிறாள். தாலின்னா என்ன என்றே தெரியாமல் கட்டுகிறான் சின்னதம்பி.
கொஞ்சம் கொஞ்சமாக பிரபு - குஷ்பு காதல் அண்ணன்மார்களுக்கு தெரியவருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தான் தாலிகட்டியதும் கல்யாணம் பண்ணியதும் சின்னதம்பிக்குத் தெரியவருகிறது. இறுதியில் என்ன... என்பதுதான் படத்தை திகுதிகுவாக்கிய க்ளைமாக்ஸ்.படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை, அப்படியே நம்மைக் கட்டிப்போட்டு வைப்பதுதான் பி.வாசுவின் திரைக்கதை பாணி.
படத்தில் கவுண்டமணி வரும்போதெல்லாம் கைத்தட்டினார்கள் ரசிகர்கள். ‘தூளியிலே ஆட வந்த’, ‘அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்’, ’போவோமா ஊர்கோலம்’, ’அட உச்சந்தலை உச்சியிலே’, ‘குயிலைப் புடிச்சு கூண்டில் அடைச்சு’, ‘நீ எங்கே என் அன்பே’... என்று எல்லாப் பாடல்களும் அந்த வருடத்தின் மெகா ஹிட். இந்தப் படத்தில் ஆறு பாடல்கள். மொத்தம் ஏழு டியூன் போட்டுக் கொடுத்தாராம் இளையராஜா. ‘எது வேணாமோ அந்த டியூனைத் தவிர மத்தத்தை எடுத்துக்கோ வாசு’ என்றாராம். ஒன்றுக்கு ஐம்பது முறை கேட்டுவிட்டு, ஒரு டியூனை ஒதுக்கிவைத்து, ‘இது வேணாம்ணே’ என்றார் பி.வாசு. ‘என்னய்யா நீ... இந்த வருஷத்தோட சூப்பர் ஹிட் பாட்டையே வேணாம்னு சொல்லுறியே. அது இருக்கட்டும்’ என்று பாட்டைப் போட்டுக்கொடுத்தார் இளையராஜா. அதுதான் ‘போவோமா ஊர்கோலம்’.
1991-ம் ஆண்டு, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் 12-ம் தேதி வெளியானது ‘சின்னதம்பி’. குறைந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டு, மிகப் பெரிய ப்ளாக்பஸ்டர் வசூலைக் குவித்த படம் இது. திரையிட்ட எல்லாத் தியேட்டர்களிலும் முதல் 40 நாட்களுக்கும் மேலாக, ஹவுஸ்புல் போர்டு பார்த்து திரும்பிய ரசிகர்கள்தான் அதிகம். அனைத்துத் தியேட்டர்களிலும் வெள்ளிவிழாவையும் 200 நாட்களையும் 250 நாட்களையும் கடந்து ஓடி, வசூலில் புதிய சாதனைகளைப் படைத்த ‘சின்னதம்பி’, தமிழ் சினிமாவில் மறக்கவே முடியாத படங்களில் ஒன்று!
» பிரஸ்டீஜ் பத்மநாபனுக்கு ரிடையர்டே இல்லை! ‘வியட்நாம் வீடு’க்கு 50 வயது
» 'அலைபாயுதே' வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு: மாதவன் நெகிழ்ச்சி
பிரபு, குஷ்பு, மனோரமா, ராதாரவி, கவுண்டமணி என எல்லோரின் நடிப்பும் அமர்க்களம். இதில் சின்னவயது பிரபுவாக, பி.வாசுவின் மகன் சக்தி பிரஷாந்த் ‘தூளியிலே ஆடவந்த...’ பாட்டுக்கு நடித்திருப்பார்.
அப்போதெல்லாம் செகண்ட் ரிலீஸ் உண்டு. அங்கேயும் சக்கைப் போடு போட்டது. பின்னர் மூன்றாவது நான்காவது ரிலீஸ் என இணைந்த 202 வது நாள் போஸ்டருடன் கிராமங்களில் உள்ள திரையரங்கிலும் கூட்டம்கூட்டமாய் வந்து பார்த்தார்கள் ரசிகர்கள். ஹவுஸ்புல் போர்டு மாட்டியதை வினோதமாகப் பார்த்தார்கள் கிராமத்து ரசிகர்கள்.
இந்தப் படத்துக்குப் பிறகு, பிரபு - குஷ்பு ஜோடி, பொருத்தமான ஜோடி என்றும் ராசியான ஜோடி என்றும் கொண்டாடப்பட்டது. பி.வாசுவின் படங்களென்றால், போரடிக்காம இருக்கும்; பாட்டெல்லாம் பட்டையைக் கிளப்பும் என்று அவர் படங்களை விரும்பித் திரும்பிப் பார்த்தார்கள் ரசிகர்கள்.
‘சின்னதம்பி’ வெளியாகி 29 வருடங்களாகின்றன. அவ்வளவு சீக்கிரமாக, அப்பாவி சின்னதம்பியை மறந்துவிடமுடியாது. மறக்கவும் மாட்டார்கள் ரசிகர்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago