தமிழக அரசின் முடிவில் மாற்றம்: லாரன்ஸ் நன்றி

By செய்திப்பிரிவு

தன்னார்வலர்கள் உதவி செய்யத் தடையில்லை என்று தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்கவே மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது மத்திய அரசு. இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பலர் உதவிகள் செய்து வருகிறார்கள். இந்த உதவிக்கு தமிழக அரசு ஏப்ரல் 12-ம் தேதி அன்று தடை விதித்தது.

இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். இந்தத் தடைக்கு சில யோசனைகளை முன்வைத்து, நீக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்தார். இதனிடையே, தடை விதிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்தது.

தமிழக அரசு மாற்றியுள்ள முடிவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குநர் லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

"கரோனா ஊரடங்கில் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவுவதில் தன்னார்வலர்களுக்கு எந்தத் தடையும் இல்லை என தமிழக அரசு தற்போது அறிவித்திருக்கிறது.

இந்த நல்ல அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கும், அதைப் பற்றித் தெளிவாக, நடைமுறை விளக்கம் தந்த காவல்துறை ஆணையருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

அரசைப் பொறுத்தவரை மக்களுக்கு கரோனா வைரஸ் பரவாமலும் தடுக்க வேண்டும், அதேநேரம் மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற பெரும் இக்கட்டான நிலை உள்ளது!

ஆகவே, தமிழக அரசினால் அறிவுறுத்திச் சொல்லப்படும் சமூக விலகலைக் கண்டிப்பாகப் பின்பற்றி, தன்னார்வலர்களும், என்னுடைய ரசிகர்கள் மற்றும் திருநங்கைகள், அபிமானிகள் உள்பட அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது!

நாம் மக்களுடைய பசிப்பிணியையும் போக்க வேண்டும். அதே சமயம் கரோனா வைரஸ் பரவாமலும் அரசின் அறிவுரைப்படி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில், இயலாத மக்களுக்கு இயன்றவரை உதவிடுங்கள். நானும் நமது தமிழக அரசின் சமூக விலகல் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்து, என்னால் முடிந்தவரை உதவி வருகிறேன்

அதைப்போலவே அனைவரும் உதவிடுவோம். கரோனாவை வென்றிடுவோம்! அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்".

இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE