'லொள்ளு சபா' நிகழ்ச்சி வளர்ந்த கதை குறித்தும், சந்தானத்தின் மெனக்கிடல் குறித்து இயக்குநர் ராம்பாலா அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
ஒளிபரப்பான 15 வருடங்கள் கழித்து, பிரபல நகைச்சுவை நிகழ்ச்சியான 'லொள்ளு சபா' தற்போதைய ஊரடங்கு சமயத்தில் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்நேரத்தில் அந்நிகழ்ச்சியின் இயக்குநர் ராம்பாலாவோடு உரையாடினோம். அவர், சந்தானம் பிரபலமாகாத, ரூ.1,500 சம்பளத்துடன் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த அந்த நாட்களுக்கு நம்மை அழைத்துச் சென்றார்.
ஒரு புதிய நிகழ்ச்சிக்கான 4 பக்க அறிமுகம் எழுதப்பட்டது. தொலைக்காட்சிகளில் முதல் முறை அப்படி ஒரு நிகழ்ச்சிக்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தங்களது டிஆர்பி எண்ணிக்கையை அதிகரிக்க முயன்று கொண்டிருந்த ஒரு சேனலிடம் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. அந்த யோசனை மிகவும் அசலானதாக, பயங்கர நகைச்சுவையாக இருந்து, சேனலிடமிருந்து அதற்கு ஒப்புதல் கிடைத்தது. ஆனால் அந்த நேரத்தில் இந்த முடிவு இரண்டு பக்கமும் கூரான கத்தியைப் போலவே பார்க்கப்பட்டது. ஏனென்றால் அந்த நிகழ்ச்சி எப்படி வரும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை.
எந்த பிரபல முகங்களும் இல்லை, விளம்பரங்கள் இல்லை, ஏன் விரைவில் என்ற ஒரு விளம்பரம் கூட ஒளிபரப்பாகவில்லை. ஆனால் ஒருவழியாக நிகழ்ச்சி வந்தபோது, அதன் தனித்துவமான நகைச்சுவையில் ரசிகர்களைச் சிரிக்க வைத்தது. நையாண்டி, ஸ்லாப்ஸ்டிக், முகம் சுளிக்க வைக்கும் சில வரிகள் என அந்த நகைச்சுவை இருந்தது.
» திரையுலகை விட்டு விலகுகிறாரா? - விக்ரம் தரப்பு விளக்கம்
» ஏழை மக்களுக்காக நாள்தோறும் 2000 உணவுப் பொட்டலங்கள் வழங்கும் அமிதாப் பச்சன்
வழக்கமாக அழவைக்கும் தொடர்களைப் பார்த்துக் கொண்டிருந்த குடும்பங்கள் கூடாரம் மாற்றி இந்த நிகழ்ச்சியின் கூட்டாளியாயினர். தேநீர் நேரத்தில் நண்பர்களுக்கு நடுவில் இந்த நிகழ்ச்சி பேசுபொருள் ஆனது. நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கான மாதிரியாக 'லொள்ளு சபா' ஆனது. பல வருடங்கள் கழித்து, மீம் க்ரியேட்டர்களுக்குப் பொக்கிஷமாக ஆனது. ஒரு பிரம்மாண்ட கல்ட் நிலையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றது.
"இன்று போல அந்நாட்களில் விளம்பரங்கள் கிடையாது. மக்களுக்கு இப்படி ஒரு நிகழ்ச்சி வருவது பற்றித் தெரிந்திருக்கவில்லை. நான் எடுத்த படங்களைப் போலவே 'லொள்ளு சபா'வும் வாய் வார்த்தை மூலமாகத்தான் பிரபலமானது" என்கிறார் ராம்பாலா. லொள்ளு சபாவை உருவாக்கி இயக்கியவர். சந்தானம், ஜீவா, சுவாமிநாதன், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களின் எதிர்காலத்தை வடிவமைத்தவர்.
ராம நாராயணன், பாக்யராஜ் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருந்த ராம்பாலா, விஜய் டிவியில் திரைக்கதைக்கான ஆலோசகராக பணியில் சேர்ந்தார். அப்போது விஜய் டிவி யுடிவியின் நிறுவனமாக இருந்தது. ஸ்டார் குழுமம் வாங்கியிருக்கவில்லை. ராம்பாலா, நிகழ்ச்சிகளின் திட்டமிடலுக்கான தலைவர் பிரதீப் மில்ராய் பீட்டரிடம் 'லொள்ளு சபா' யோசனையைச் சொல்ல அவர் சொன்ன யோசனை பிடித்ததால், சரி என்றார்.
அதே நேரத்தில் ராம்பாலா ஒரு காலைப் பொழுதில் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் பல்வேறு உப நிகழ்ச்சிகள், வெவ்வேறு வகையில் பிரிக்கப்பட்டிருந்தன. முதலில் இதில் ஒரு இரண்டு நிமிட சிறு நிகழ்ச்சியாகத்தான் 'லொள்ளு சபா' ஆரம்பமானது. சினிமா மற்றும் அரசியலை நையாண்டி செய்தார்கள். ஆனால் அது ஒளிபரப்பாகவே இல்லை.
"அப்போதைய சேனலின் தலைவர் சுரேஷ் ஐயர், அந்த இரண்டு நிமிட நிகழ்ச்சியை அரை மணி நேர நிகழ்ச்சியாக மாற்றச் சொல்லி எனக்கு ஊக்கம் தந்தார். அப்படித்தான் 'லொள்ளு சபா' ஆரம்பமானது. மேலும் எனக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. பிரச்சினைகள் நீண்ட நாட்கள் கழித்துத்தான் வர ஆரம்பித்தன. அதைப் பற்றி பிறகு சொல்கிறேன்" என்கிறார் ராம்பாலா.
நிகழ்ச்சியின் வடிவம் மிகவும் எளிமையானது. பிரபலமான தமிழ் சினிமாவை நக்கல் நையாண்டி செய்யும் ஒரு நிகழ்ச்சி. எந்த பெரிய நடிகராக இருந்தாலும் சரி, அவர் எந்த அந்தஸ்தில் இருந்தாலும் சரி, அவரைக் கலாய்ப்பது. இது ராம்பாலாவுக்கு எளிதாக இருந்தது. ஏனென்றால் அவர் கல்லூரி நாட்களிலிருந்தே எதைப் பற்றியும், நக்கல் செய்பவர். கலாய்த்து மற்றவர்களைக் கடுப்பேற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இப்படி இயல்பிலேயே நகைச்சுவை உணர்வுடன் இருப்பது பற்றி ராம்பாலா, "எப்போது ஒரு படத்தைப் பார்த்தாலும் அதைப் பற்றி ஒன்றிரண்டு விஷயங்களைக் கலாய்க்க ஆரம்பிப்பேன். இதை நானே சொன்னால் தற்புகழ்ச்சியாகத் தெரியும். என் நண்பர்களிடம் நீங்கள் கேட்டால் நான் எப்படி மற்றவர்களைக் கலாய்ப்பேன் என்று உங்களுக்குக் கதை சொல்வார்கள். எனது கல்லூரியில் கந்தசாமி என்ற பேராசிரியர் என்னை டைரக்ட்-டக்கரே என்று அழைப்பார்" என்று நினைவுகூர்கிறார்.
ஆனால், 'லொள்ளு சபா' நினைத்ததைப் போல அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. முதல் ஒரு சில பகுதிகள் கத்தியில் நடப்பதைப் போல இருந்தது. ஆனால் ஒவ்வொரு பகுதிக்கும் ஸ்க்ரிப்ட் எழுதியது படப்பிடிப்பை விட எளிதாக இருந்தது என்கிறார் ராம்பாலா. "நாங்கள் என்றுமே எங்களைத் தீவிரமாக எடுத்துக் கொண்டதில்லை. எந்த ஒரு காட்சிக்கும் நாங்கள் உட்கார்ந்து மூளையைக் கசக்கியதில்லை. அதுதான் எங்கள் நிகழ்ச்சியின் வெற்றி என்று நினைக்கிறேன். இப்போது (பெரும்பாலான) நகைச்சுவை சிரிக்க வைப்பதில்லை. அதற்குக் காரணம் அவை கடுமையாக யோசித்து எழுதப்படுகின்றன".
இதற்கு எடுத்துக்காட்டாக, ஆரம்ப நாட்களில் 'நாயகன்' படத்தின் 'லொள்ளு சபா' வடிவத்தைக் காட்டுகிறார். அது எப்படி உருவானது என்பது அவருக்கு இன்னமும் நினைவில் உள்ளது. ஏனென்றால் அப்போதுதான் பாலாஜியும் சந்தானமும் இவரது குழுவில் சேர்ந்தார்கள். (சந்தானம் ஆரம்பத்தில் சற்றுக் கஷ்டப்பட்டார். ஆனால், அவருக்கு நான் பயிற்சி தந்தேன். அவரது டைமிங் யாருக்கும் வராது)
ஒவ்வொரு படத்திலிருந்தும், அந்தப் படத்தின் கதையைப் புரிய வைக்கும் 5-6 முக்கியக் காட்சிகளை எடுத்து அதை 'லொள்ளு சபா'வுக்காக மாற்றுவார். உதாரணத்துக்கு 'வானத்தைப் போல' படத்தில் தன் தம்பிகள் மழையில் நனையக் கூடாது என்பதற்காக தானே அவர்களை மறைத்து மழையைத் தாங்குவார் விஜயகாந்த். இந்தக் காட்சி உணர்ச்சிகரமானது. ஆனால் பார்க்கும்போது சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. எனவே இது போன்ற காட்சிகளைத் தேர்ந்தெடுத்தோம் என்கிறார் ராம்பாலா.
'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் நகைச்சுவை மட்டுமல்ல, 'கடலோரக் கழுதைகள்', 'சிந்து by ரவி', 'மசாலா வாசனை', 'சப்பமூக்கி' என அவர்கள் மாற்றிய படத்தின் தலைப்புகளும் பிரபலமாயின. ராம்பாலா மனதில் உதித்த பெயர்கள் தலைப்புகளாக வைக்கப்பட்டன. ஒரு முறை ஒரு பகுதிக்குப் பெயர் எதுவும் தோன்றவில்லை என்பதால் 'பேரு வெக்க தெரிலீங்கோ' என்று பெயர் வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பு இருந்ததால் முக்கியமான இரவு 9 மணி 'லொள்ளு சபா'வுக்காக ஒதுக்கப்பட்டது. இது குறித்து ராம்பாலா, "எங்கள் கனவில் கூட இந்த நிகழ்ச்சி இவ்வளவு பெரிய வரவேற்பை மக்களிடம் பெறும் என்று நினைக்கவில்லை. இதில் இன்னொரு நகைச்சுவை என்னவென்றால் டிஆர்பி எவ்வளவு வந்ததென்று எங்களுக்குத் தெரியாது. எங்கள் சம்பளம் பற்றி மட்டுமே நாங்கள் கவலைப்பட்டோம்" என்கிறார்.
இந்த பணப் பிரச்சினை ஆரம்பத்தில் பெரும் பிரச்சினையாக இருந்திருக்கிறது. முதலில் விஜய் டிவி தரப்பிலிருந்து பெரிய அளவில் நிதி உதவி கிடைக்கவில்லை என்று சொல்லும் ராம்பாலா, 20 ரூபாய் கொடுத்து 'பாட்ஷா' விசிடி வாங்க அவரும் சந்தானமும் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதைச் சொல்கிறார்.
"வேலை முடிய அதிகமாக அலைவோம். யூகி சேது அப்போது உலகக்கோப்பைக்காக ஒரு நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தார். 'பாட்ஷா' விசிடி வாங்க அந்த ஸ்டுடியோவுக்குச் சென்று பணத்துக்காகக் காத்திருந்தோம். நானும் சந்தானமும் நள்ளிரவு படத்தைப் பார்த்து முக்கியமான காட்சிகளை எழுதி வைத்து அடுத்த நாள் படப்பிடிப்புக்குச் செல்வோம்".
நிகழ்ச்சி பிரபலமான பிறகே நிதி ஒழுங்காக வர ஆரம்பித்தது. அதுவரை பட்ஜெட், தயாரிப்பில் சில கட்டுப்பாடுகள் இருந்தன. ஒரு பகுதிக்கு ரூ.25,000 மட்டுமே அதிகபட்சமாகக் கொடுக்கப்பட்டது. இது நிகழ்ச்சியின் புகழ் உச்சத்தில் இருக்கும்போது ரூ.1 லட்சம் என்ற அளவிலிருந்தது.
"நான் பட்ஜெட் பற்றி எப்போதும் எச்சரிக்கையாக இருப்பேன். 15,000க்குள் ஒரு பகுதியை முடித்துவிடுவேன். நிகழ்ச்சி பிரபலமாக இருந்தாலும் எங்களுக்குச் சம்பளம் மிகக் குறைவு. சந்தானம் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும்போது ரூ.1,500 வாங்கிக் கொண்டிருந்தார். சுவாமிநாதனுக்கு ரூ.1000, மனோகருக்கு ரூ.500 இருந்திருக்கும்" என்று சிரிக்கிறார் இயக்குநர் ராம்பாலா.
- எஸ். ஸ்ரீவட்சன் (தி இந்து, ஆங்கிலம்), தமிழில் கார்த்திக் கிருஷ்ணா
முக்கிய செய்திகள்
சினிமா
14 mins ago
சினிமா
48 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago