சூப்பர் ஸ்டார்களுக்கு சூப்பர் ஹிட் கொடுத்த எஸ்.பி.முத்துராமன்!  - இன்று எஸ்.பி.முத்துராமன் பிறந்த நாள்

By வி. ராம்ஜி

‘பணமும் பத்தா இருக்கணும்; குணமும் முத்தா இருக்கணும்’ என்று செட்டிநாட்டுப் பகுதிகளில் பழமொழி சொல்வார்கள். ஒரு படம், எடுத்தவருக்கும் வாங்கியவர்களுக்கும் லாபத்தைக் கொடுக்கணும்; பார்த்தவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கணும்’ என நினைத்துப் படம் இயக்கும் டைரக்டர்களின் வரிசையில் முக்கியமான இடம் அவருக்கு உண்டு. காரைக்குடிக்காரரான அவர்... இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.

ஏவிஎம் எனும் பிரம்மாண்டாமான கம்பெனி வளர்த்த குழந்தைகளில் எஸ்.பி.முத்துராமனுக்குத் தனியிடம் உண்டு. ‘களத்தூர் கண்ணம்மா’ கமலுக்கு முதல் படம். அதேபோல், எஸ்.பி.எம். சினிமா வாழ்க்கையில் முதல் படமாக அமைந்தது. அன்றைக்கு குழந்தை கமல்ஹாசனைத் தூக்கிக் கொஞ்சியவர், பின்னாளில் கமலின் திரை வாழ்வில் தூக்கி நிறுத்திய படங்கள் பலவற்றைக் கொடுத்தார்.

எடிட்டிங் பணி தொடங்கி புரொடக்‌ஷன் ஒர்க், உதவி இயக்குநர் என ஒரு திரைப்படத்தின் பல பணிகளை கற்றுக்கொண்டார். ’கனிமுத்து பாப்பா’ படத்தின் மூலமாக இயக்குநரானார். முத்துராமன்,ஜெய்சங்கர் என அந்தக் கால நடிகர்களை வைத்து இயக்கிய வேளையில், அதையடுத்து கமல், விஜயகுமார், ஸ்ரீகாந்த் என நடிகர்களைக் கொண்டும் இயக்கினார். கருப்பு வெள்ளை காலங்களில், ‘மயங்குகிறாள் ஒரு மாது’, ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’, ’யாருக்கு மாப்பிள்ளை யாரோ’ என இவர் இயக்கிய படங்களெல்லாமே, வலுவான கதையும் தெளிவான நடிப்பும் கொண்ட வெற்றிப் படங்களாக அமைந்தன.


எத்தனையோ படங்களில் நடித்த ஜெய்சங்கரின் முதல் வண்ணப்படம் ‘துணிவே துணை’. இந்தப் படத்தை இயக்கிய பெருமைக்குரியவர் எஸ்.பி.முத்துராமன். கமலையும் ரஜினியையும் வைத்து ‘ஆடுபுலி ஆட்டம்’, ரஜினியையும் சிவகுமாரையும் வைத்து ‘புவனா ஒரு கேள்விக்குறி’, பிறகு கமலை வைத்தும் ரஜினியை வைத்தும் தனித்தனியே மார்க்கெட் வேல்யூக்கள் கொண்ட படங்கள் என மிகப்பெரிய ரவுண்டு வந்தார்.

தன்னை வளர்த்து, வார்த்தெடுத்த ஏவிஎம் நிறுவனத்தில் கிருஷ்ணன் - பஞ்சு, ஏ.சி.திருலோகசந்தர் என்பவர்கள் ஆஸ்தான இயக்குநர்கள் என்று பேரெடுத்திருந்தார்கள். அவர்களுக்குப் பின்னர், அந்த ‘ஆஸ்தான’ பட்டத்துக்கு உரியவரானவர் எஸ்.பி.முத்துராமன் மட்டுமே! காலையில் கமலை வைத்து படமெடுத்துவிட்டு, மாலையில் ரஜினியை இயக்கினார். இவருக்கு ‘சகலகலா வல்லவன்’ கொடுத்தார். அவருக்கு ‘முரட்டுக்காளை’ தந்தார். ரஜினியை, ‘பாயும்புலி’யாகவும் காட்டினார். தம்பி, தம்பிக்காக வாழ்ந்து ஓடாய் தேயும் அண்ணனாக ‘ஆறிலிருந்து அறுபது வரை’ நாயகனாகவும் ஒளிரச் செய்தார். ‘தூங்காதே தம்பி தூங்காதே’ என்று கமலை வைத்து அட்டகாச ஆக்‌ஷனும் கொடுத்தார். பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தும் ‘உயர்ந்த உள்ளம்’ படத்தையும் வழங்கினார்.

‘கவரிமான்’ முதலான படங்களை சிவாஜியை வைத்தும் இயக்கினார். இன்னொரு ஆச்சரியப் பெருமையும் இவருக்கு உண்டு. ஏவிஎம்மின் ஆஸ்தான இயக்குநர் ஒருபக்கம்; பஞ்சு அருணாசலத்தின் பி.ஏ.ஆர்ட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பிலும் தொடர் இயக்குநர் என ஒருபக்கம்; இயக்குநர் கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரிக்கும் படங்களை இயக்கியது இன்னொரு பக்கம்... என ரவுண்டு கட்டி எத்தனையோ ஹிட் படங்களைக் கொடுத்த மிஸ்டர் எளிமை... எஸ்.பி.முத்துராமன்!

இன்றைக்கும் சூப்பர் ஸ்டார்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் கமலை வைத்து பத்துக்கும் மேற்பட்ட படங்களையும் ரஜினியை வைத்து 25 படங்களுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர்களின் இயக்குநர். நடிகர்களின் இயக்குநர். ரசிகர்களின் இயக்குநர்.
அமைதியே கேரக்டரெனக் கொண்டு வாழும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு இன்று பிறந்த நாள். அவரை மனதார வாழ்த்துவோம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்