சிம்ரன் பிறந்த நாள் ஸ்பெஷல்: நடனத்தால் அசத்தியவர்; நடிப்பால் உருக வைத்தவர்

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமா வரலாற்றில் டி.ஆர்.ராஜகுமாரி, பானுமதி, பத்மினி, சாவித்திரி, சரோஜா தேவி என உச்ச நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்த நடிகைகளின் பட்டியல் மிகப் பெரியது. 1980களில் ரேவதி, ராதிகா, அம்பிகா, ராதா, மாதவி, நதியா, ரேகா, சீதா எனப் பல நடிகைகள் தம் திறமையை வெளிப்படுத்திக் கோலோச்சிக் கொண்டிருந்தனர். 1990களிலும் ரசிகர்களால் கோயில் கட்டப்பெற்ற முதல் இந்திய நடிகையான குஷ்பு, மீனா, ரோஜா, சங்கீதா, சங்கவி எனப் பல நடிகைகள் போட்டிப் போட்டுக்கொண்டிருந்தனர்.

ஆனால் இதே 90களில்தான் கதாநாயகனை மட்டும் முன்வைக்கும் சூப்பர் ஹீரோ வகை மசாலா திரைப்படங்கள் அதிகரிக்கத் தொடங்கின. கதாநாயகிகள் அழகுப் பதுமைகளாகவும் கவர்ச்சி கன்னிகளாகவும் சுருங்கத் தொடங்கினர். கவர்ச்சிப் பாடல்களுக்கு என்று தனி நடிகைகள் இருந்த காலம் மறைந்து முன்னணி கதாநாயகிகளே கவர்ச்சிப் பாடல்களில் தோன்றத் தொடங்கினர்.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் நடிப்புத் திறமை கொண்ட நடிகைகளுக்கான பெருமையை மீட்டெடுத்தவர்தான் சிம்ரன். பத்தாண்டுகளுக்குக் குறைவான காலமே முன்னணிக் கதாநாயகியாக வலம் வந்தார் என்றாலும் அழகு, கவர்ச்சி ஆகியவற்றைத் தாண்டி நடிப்புத் திறமையிலும் நடனத்திலும் அவரை மிஞ்ச ஆளில்லை என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்களின் ஏகோபித்த மரியாதையையும் ஆதரவையும் பெற்றவராக இருந்தார்.

1976 ஏப்ரல் 4 அன்று மும்பையில் ஒரு பஞ்சாபிக் குடும்பத்தில் பிறந்தவர் சிம்ரன். அவரது இயற்பெயர் ரிஷிபாலா. 1990களில் தொடக்க ஆண்டுகளிலும் தூர்தர்ஷனின் மெட்ரோ சேனலில் புகழ்பெற்ற ‘சூப்பர் ஹிட் முகாபுலா’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பாலிவுட்டின் கவனத்தை ஈர்த்தார். 1995இல் வெளியான அவரது முதல் படம் ’சனம் ஹர்ஜாய்’ வந்த சுவடே தெரியாமல் போனது. 1996 இறுதியில் வெளியான ‘தேரே மேரே சப்னே’ அவரது முதல் வெற்றிப் படம். இடையில் மலையாளத்தில் மம்மூட்டியுடன் ‘இந்திரபிரஸ்தம்’, கன்னடத்தில் ஷிவ் ராஜ்குமாருடன் ‘சிம்ஹடா மாரி’ எனப் பல மாநிலங்களில் பயணித்தே தமிழ்த் திரையிலும் தமிழர்களின் நெஞ்சங்களிலும் நிலைகொண்டார்.

ஒரே ஆண்டில் நான்கு படங்கள்

1997 ஜூலை 4 அன்று வசந்த் இயக்கிய ‘நேருக்கு நேர்’, சபா இயக்கிய ‘வி.ஐ.பி; ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இரண்டுமே இரண்டு நாயகர்கள்- நாயகியரைக் கொண்ட படங்கள், இரண்டிலுமே சிம்ரன் நாயகியரில் ஒருவராக நடித்திருந்தார். இவ்விரண்டு படங்களிலுமே பாடல்கள் சூப்பர் ஹிட். குறிப்பாக ‘நேருக்கு நேர்’ படத்தில் தேவா இசையில் ‘மனம் விரும்புதே உன்னை’, ‘எங்கெங்கே எங்கெங்கே’ என சிம்ரனுக்கான இரண்டு பாடல்களையும் இன்றும் ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ‘வி.ஐ.பி’ படத்திலும் ‘மின்னலொரு கோடி’ பாடலும் அத்தகையதே. கூடுதலாக அந்தப் பாடலில் சிம்ரனின் தோற்றப் பொலிவும் நடனமும் கோடி மின்னல்கள் தோன்றி மறைவதன் பரவசத்தை இளம் ரசிகர்களுக்கு அளித்தன. அதே ஆண்டு வெளியான ’ஒன்ஸ் மோர்’, ‘பூச்சூடவா’, படங்கள் சிம்ரனைக் கவனிக்க வைத்தன.

நடிக்கத் தெரிந்த நடிகை

1998இல் ‘அவள் வருவாளா’, ‘நட்புக்காக’ ’கண்ணெதிரே தோன்றினாள்’ எனத் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தார் சிம்ரன். அடுத்த ஆண்டில் விஜய்யுடன் ‘துள்ளாத மனமும் துள்ளும்’, அஜித்துடன் ‘வாலி’ என மிகப் பெரிய வெற்றிபெற்ற இரண்டு படங்களும் சிம்ரனின் திரை வாழ்வில் முக்கியமான படங்களாகின. ’துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் பார்வையை இழந்த பெண்ணாக மிகக் கச்சிதமாக நடித்திருப்பார். ‘வாலி’யில் கணவனுடைய அண்ணனின் மோகத்துக்குக் கணவனின் அப்பாவித்தனத்துக்கும் இடையில் சிக்கிய ஒரு இளம் பெண்ணின் தவிப்பை, வேதனையை அவ்வளவு சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். இந்த இரு படங்களும் சிம்ரனின் அபாரமான நடிப்புத் திறனைப் பறைசாற்றின.

2004இல் திருமணமாகும் வரை புகழின் உச்சியிலிருந்தார் சிம்ரன். கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் (ஒரு மலையாளப் படம்), மாதவன், பார்த்திபன், முரளி என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்தார். முன்னணிக் கதாநாயகியாக இருந்தபோதே ‘பார்த்தேன் ரசித்தேன்’ திரைப்படத்தில் வில்லியாக நடித்துப் புகழ்பெற்றார். அந்தப் படத்தின் மையமே அவரது கதாபாத்திரம்தான். அதை உணர்ந்து வெகு சிறப்பாக நடித்துப் படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

பாலசந்தர், மணிரத்னம் போன்ற புகழ்பெற்ற இயக்குநர்கள் அவரது நடிப்புத் திறமையைக் கண்டுகொண்டு தம் படங்களில் அவரை நடிக்க வைத்தனர். மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் மூன்று குழந்தைகளின் தாயாக மிகையற்ற உணர்வுபூர்வமான நடிப்பை வழங்கியிருப்பார். குடும்ப பாரத்தைச் சுமக்கும் இளம் பெண் (’பிரியமானவளே’), கணவனை இழந்த இளம் பெண் (‘12பி’) என சிம்ரனின் நடிப்புத் திறமை வெளிப்பட்ட படங்களில் பட்டியல் பெரிது.

அசாத்திய நடன அசைவுகள்

செவ்வியல் நடனம் முதல் குத்தாட்டம் வரை அனைத்து வகையான நடனங்களிலும் பட்டையைக் கிளப்புபவராக இருந்தார் சிம்ரன். இவற்றுக்கிடையே இடுப்பை வளைத்தும் ஆடுதல், அரிய நடன அசைவுகளை அனாயாசமாகச் செய்துகாட்டுதல் ஆகியவை அவரது தனிச் சிறப்புகளாக இருந்தன. ‘தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானா’ (எதிரும் புதிரும்), ‘ஆல்தோட்ட பூபதி நானடா’ (யூத்) பாடல்கள் மூலம் அசாத்திய நடனத்தால் ரசிகர்களை சிம்ரன் கட்டிப்போட்டார்.

இவ்வளவு திறமைகள் இருந்தும் முன்னணி நட்சத்திரமாக இருந்தபோதே திடீரென்று 2004இல் திருமணம் செய்துகொண்டு திரைப்படங்களிலிருந்து விலகிவிட்டார். ஆனாலும் அந்த ஆண்டு ரஜினிகாந்துடன் நடிப்பதற்கான வாய்ப்பு அவரைத் தேடிவந்தது. ஆம் 2005இல் வெளியாகி 800 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த ‘சந்திரமுகி’ படத்தில் சந்திரமுகியாக நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் சிம்ரன்தான். அப்போது அவர் கருத்தரித்திருந்ததால் நடனக் காட்சிகளில் நடிப்பது ஆபத்து என்று கருதி அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டது அவருக்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் பேரிழப்புதான்.

சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த சிம்ரனுக்குக் குணச்சித்திர வேடங்களையும் வில்லி வேடங்களையும் மட்டுமே கொடுத்துவருகிறது தமிழ் சினிமா. அதிலும் ‘வாரணம் ஆயிரம்’ போன்ற ஒரு சில படங்களே அவருடைய ஆளுமைக்கு நியாயம் செய்தவை. 2019இல் வெளியான ‘பேட்ட’ படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்ததில்லை என்ற குறை நீங்கியது. அதோடு அந்தப் படத்தில் மிக அழகாகவும் இளமையாகவும் தோன்றினார் சிம்ரன்.

இன்னும் நிறைய வேண்டும்

சிம்ரனின் திரை வாழ்க்கை முடிந்துவிடவில்லை. அதுவும் ரசனை மாற்றம், பெண்களை மையப்படுத்திய கதைகளுக்கான வரவேற்பு அதிகரித்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் சிம்ரனைச் சிறப்பாக பயன்படுத்தி மறக்க முடியாத படைப்புகளை வழங்க ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அதைச் செய்வது நம் திரைப் படப்பாளிகளின் கைகளில்தான் உள்ளது.

சிம்ரனின் பிறந்த நாளான இன்று அவருக்கு இன்னும் நிறைய நல்ல கதாபாத்திரங்கள் அமைய வேண்டும். ரசிகர்கள் மனதில் அவர் எப்போதும் நீங்கா இடம்பிடித்திருக்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்