ட்விட்டரில் யார் எதற்காக ட்ரெண்ட் ஆவார்கள் என்றே கணிக்க முடியாது. அவ்வப்போது ட்ரெண்ட் ஆகும் விஷயங்களில் சம்பந்தப்பட்டிருக்கும் பிரபலங்களுக்கே திடீரென்று நாம் ஏன் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் என்பது புரியாது. அந்த அளவுக்கு ட்விட்டர் வைரல் ட்ரெண்டிங் என்பது ஒரு புரியாத புதிர் விளையாட்டுதான்.
ட்ரெண்ட் ஆன சமுத்திரக்கனி
ஆனால் இந்த விளையாட்டால் சில நேரம் சுவாரஸ்யமும் கிடைப்பதுண்டு. விளையாட்டு வினையாகிப் போவதும் உண்டு. கடந்த ஆண்டு திடீரென்று வைரலான #prayfornesamani ஹேஷ்டேகை சுவாரஸ்யமான உதாரணமாகக் கொள்ளலாம். ஆனால் தற்போது நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனியை வைத்து உருவாக்கப்பட்ட ட்வீட்களும் மீம்களும் ட்ரெண்டாகி வருவது விளையாட்டு வினையான கதையாகிக் கொண்டிருக்கிறது. சமுத்திரக்கனியின் திரைப்படங்களை மட்டுமல்லாமல் அவருடைய பெயரை வைத்தும் உருவத்தை மார்ஃப் செய்து பயன்படுத்தியும் பல மீம்கள் வைரலாகப் பரவிவருகின்றன.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகை உலுக்கிவரும் வேளையில் இந்தியாவில் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கின்போது வீட்டில் வேலையில்லாமல் இருப்பது தொடர்பான மீம்களும் கரோனா பாதிப்பு தொடர்பான மீம்களும் சமூக வலைதளங்களில் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் கடந்த வாரம் சமுத்திரக்கனி பேசிய சில வசனங்களை வைத்து கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் சில மீம்கள் உருவாகப்பட்டதாகவும் அவற்றுக்கு எதிர்வினையாக சமுத்திரக்கனியைக் கிண்டலடிக்கும் மீம்கள் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது. முன்பே சொன்னதுபோல் மீம்கள் ட்ரெண்டாவதன் நதி மூலம் ரிஷி மூலத்தை வரையறுத்துக் கூற முடியாது. அது அவசியமும் இல்லை.
» சமூக இடைவெளி என்பது மனதுக்குள் நிரந்தரமாகிவிடுமோ என அச்சம்: விஜய் மில்டன்
» 'மங்காத்தா' படத்தின் அஜித் டாலர் ரகசியம்: வாசுகி பாஸ்கர் பகிர்வு
பொதுவாக சமூக வலைதளங்களில் மீம்களுக்கான மெட்டீரியலாக சினிமா பிரபலங்களும் அவர்கள் திரையில் தோன்றிப் பேசிய வசனங்களும், கொடுத்த எக்ஸ்பிரஷன்களும் மட்டுமே இருக்கின்றன. 90 சதவீதத்துக்கு மேற்பட்ட மீம்கள் இவற்றை வைத்தே உருவாக்கப்படுகின்றன. இந்த மீம்களால் திரைப்படங்களும் திரைப் பிரபலங்களும் பெருமைப்படுத்தப்படுவதும் உண்டு, கிண்டல் செய்யப்படுவதும் உண்டு. துரதிர்ஷ்டவசமாக சில நேரம் இந்தக் கிண்டல் நாகரிக எல்லைகளை மீறிவிடுவதுமுண்டு. சமுத்திரக்கனிக்கு தற்போது நடந்துகொண்டிருப்பதும் அதுதான்.
உழைப்பால் உயர்ந்தவர்
நடிகராகவும் இயக்குநராகவும் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் சமுத்திரக்கனி. இயக்குநர் திலகம் கே.பாலசந்தரின் சீடரான அவர், மிக எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்து பல ஆண்டுகள் கடின உழைப்பால் இன்று திரையுலகிலும் பொதுச் சமூகத்திலும் புகழ் பெற்றவராக மரியாதைக்குரியவராகத் திகழ்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்., கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு நடிகராக அவர் பெரிதும் விரும்பப்படுபவராக இருக்கிறார். அதேபோல் ஒரு இயக்குநராகவும் குறைந்த காலத்தில் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் அறியப்படுபவராக இருக்கிறார்.
அவர் இயக்கிய முதல் படமான 'உன்னைச் சரணடைந்தேன்' விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. ஆனால் 2009-ல் வெளியான ‘நாடோடிகள்’ ஒரு இயக்குநராக அவரை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது. அதற்கு முன்பாகவே 2008-ல் வெளியான ’சுப்பிரமணியபுரம்’ படத்தில் பாசாங்கு செய்து கவிழ்க்கும் வில்லனாக நடித்து ஒரு நடிகராக முத்திரை பதித்துவிட்டார். புதுமையான கதை. சுவாரஸ்யமான திரைக்கதை. அழுத்தமான வசனங்கள், நட்பின் மேன்மை குறித்தும் காதல் குறித்தும் காதல் திருமணங்கள் குறித்தும் சமூகத்துக்குத் தேவையான மிக முக்கியமான கருத்துகள் என ‘நாடோடிகள்’ பல வகைகளில் பாராட்டத்தக்கதாக அமைந்தது. இந்தப் படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி, வங்காளம் என ஐந்து மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
அடுத்தடுத்து அவர் இயக்கிய படங்களில் ‘போராளி’, ‘நிமிர்ந்து நில்’ போன்றவை கலவையான விமர்சனங்களைப் பெற்றன என்றாலும அவற்றையும் மோசமான படங்கள் என்று சொல்லிவிட முடியாது. 'போராளி' படத்தில் சக மனிதனுக்கு உதவுவதன் மேன்மையையும் ‘நிமிரிந்து நில்’ படத்தில் ஊழல் ஒழிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தியிருப்பார். அவர் நாயகனாக நடித்து இயக்கிய ‘அப்பா’ 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. புத்தி ஜீவி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இந்தப் படத்தை நிராகரித்தாலும் தனியார் பள்ளிகளின் கல்விக் கொள்கையைச் சாடிய இந்தப் படத்துக்கு பொதுச் சமூகம் வெற்றியை வாரி வழங்கியது.
விமர்சனங்கள் தேவைதான்
சமுத்திரக்கனியின் திரைப்படங்கள் அனைத்துமே மேம்பட்ட சமூக அக்கறையைப் பொதுநல நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளன. அவருடைய படங்களில் வசனங்களின் ஆதிக்கமும் பிரச்சாரத் தொனியும் அதிகரித்துவருகின்றன. அவருடைய இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான ‘நாடோடிகள் 2’ ஆணவக் கொலை உள்ளிட்ட பல சமூக அநீதிகளுக்கு எதிராகத் துணிச்சலான கருத்துகளைப் பேசியது என்றாலும் அது சுவாரஸ்யமான சினிமாவாகக் கைகூடவில்லை. அந்தப் படத்திலும் பிரச்சார உணர்வு அதிகமாக இருந்ததாக விமர்சிக்கப்பட்டது.
எந்த ஒரு கலைஞனுக்கும் படைப்பாளிக்கும் இது போன்ற விமர்சனங்கள் அவசியமானவை. விமர்சனங்கள்தான் அவர்களை உயரவைக்கும். சமுத்திரக்கனியும் இதை உணர்ந்தவராகவே இருப்பார். தன் மீதான விமர்சனங்களுக்கும் கேலி, கிண்டல்களுக்கும் அவர் எப்போதும் நிதானமிழந்து எதிர்வினையாற்றியதில்லை. அவர் தன் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்.
அவர் மீதான விமர்சனங்களைக் கண்ணியமான மொழியில் முன்வைக்கலாம். கிண்டலடிப்பதுகூட நாகரிக எல்லைகளுக்குள் நின்றுவிட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் தற்போது சமுத்திரக்கனிக்கு நடந்துகொண்டிருப்பது அறத்தையும் நாகரிக எல்லைகளையும் மீறியது. குறிப்பாக ஒருவரது பெயரை வைத்தும் உடலை மார்ஃப் செய்தும் மீம் போடுவது காழ்ப்பின் வெளிப்பாடு மட்டுமே. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வேறு யாருக்கும் இதுபோல் இனி நடக்கக் கூடாது. சமூக ஊடகப் பயனர்களும் மீம் கிரியேட்டர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
முக்கிய செய்திகள்
சினிமா
37 mins ago
சினிமா
54 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago