2011-ல் வெளியான ‘ஆரண்ய காண்டம்’ வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் இளைஞர்கள். மற்றும், விமர்சகர்களின் பாராட்டுகளை வாரிக் குவித்தது. அந்தப் படத்தைத் திரையரங்கில் தவறவிட்டவர்களும் திரையரங்கில் பார்த்தபோது அதைப் புரிந்துகொள்ள முடியாதவர்களும் பின்பு தொலைக்காட்சியில் போட்டபோது அதன் மேன்மையைக் கொண்டாடினர். படம் வெளியாக சில ஆண்டுகளில் சமூக ஊடகங்களில் அந்தப் படத்தைப் பற்றி அடிக்கடி விவாதிக்கப்பட்டது. இதன் மூலம் ‘ஆரண்ய காண்டம்’ ஒரு கல்ட் (cult) அந்தஸ்தைப் பெற்றது. ஒரே ஒரு படத்தின் மூலம் மிகப் பெரிய புகழை எய்தியவர்கள் வரிசையில் வைக்கப்பட்டார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.
அவர் இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம் 'சூப்பர் டீல்கஸ்'. இடையில் அவர் சில படங்களில் திரைக்கதை பங்களிப்பு ஆற்றியிருந்தாலும் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஆரண்ய காண்டம்’ இயக்குநரின் அடுத்த படம் என்பது ஊடகங்களில் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. விஜய் சேதுபதி. சமந்தா, பகத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் என படத்தின் நட்சத்திரப் பட்டாளம் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு எகிற வைத்தது. இது தவிர மிஷ்கின், நலன் குமாரசாமி போன்ற இயக்குநர்கள் படத்தின் ஒவ்வொரு பகுதிக்கான கதையை எழுதியிருக்கிறார்கள் என்ற தகவல் வேறு சேர்ந்துகொண்டது. இவ்வளவு எதிர்பார்ப்புக்கும் பரபரப்புக்கும் இடையில் மார்ச் 29, 2019 அன்று ’சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் வெளியானது.
திரை விமர்சகர்களால் கொண்டாடப்பட்டாலும் சமூக ஊடகங்களில் இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. படத்தைக் கொண்டாடிய தரப்பும் படத்தால் கடுப்பான தரப்பும் பதிவுகளால் குவிக்கப் படம் வெளியாகிப் பல நாட்களுக்கு இதுவே விவாதப் பொருளாக இருந்தது. இது தவிர படத்தில் விஜய் சேதுபதி ஏற்று நடித்திருந்த திருநங்கை கதாபாத்திரம் சர்ச்சைக்குள்ளானது., அதன் மூலம் திருநங்கைகள் குறித்த தவறான கருத்துகள் திணிக்கப்பட்டிருப்பதாக திருநர் செயற்பாட்டாளர்கள் சிலர் கண்டனங்களைப் பதிவு செய்தனர். திருநங்கை கதாபாத்திரத்தில் அசல் திருநங்கையை நடிக்க வைக்காமல் ஒரு ஆண் நடிகர் நடித்திருப்பதும் விமர்சிக்கப்பட்டது. ஆனால் இந்த விமர்சனங்கள், விவாதங்களைத் தாண்டி’ தியாகராஜன் குமாரராஜாவின் முதல் படத்தைப் போலவே அவருடைய இந்தப் படமும் ஒரு அரிதான முக்கியமான சிறப்புகளைக் கொண்ட படம்தான் என்பதில் சந்தேகமில்லை.
» அதிகமான தொகைக்குச் சம்மதமா? - அக்ஷய் குமாரின் பதிலால் பெருமைப்பட்ட மனைவி
» சண்டைக் காட்சியில் நடிக்க மறுத்த கௌதம் மேனன்: பின்னணி என்ன?
கதைகளின் புதுமையான இணைப்பு
நான்கு வெவ்வேறு கதைகளை மாற்றி மாற்றிச் சொல்லி இறுதியில் அவற்றுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தும் திரைக்கதை அமைப்பு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இந்தக் கதைகளுக்கான இணைப்பு வெகு இயல்பாக இருந்தது. ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்குமான தொடர்பு அந்தக் கதைகளில் தோன்றிய கதாபாத்திரங்களுக்கு இறுதிவரை தெரியாது. உதாரணமாக விடலைச் சிறுவர்கள் தூக்கி எரியும் தொலைக்காட்சி பெட்டி சமந்தா, பகத் ஃபாசிலை மிரட்டிக்கொண்டிருக்கும் காவல்துறை அதிகாரியான பக்ஸ் மீது விழுந்து அவர் இறந்து போவார். அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியை யார் வீசியது என்று சமந்தா. பகத்துக்கும் தெரியாது. அது பக்ஸ் மீது விழுந்து அவர் இறந்துவிட்டார் என்று வீசிய அந்த விடலைகளுக்கும் தெரியாது. வெவ்வேறு கதைகளை உள்ளடக்கிய தொடர்கதையில் இதுபோன்ற தொடர்புபடுத்தல் மிகப் புதுமையானதும் சுவாரஸ்யமானதுமாகும்.
பாலியல் பட நடிகையும் மனுஷிதான்
திருநங்கை, பாலியல் திரைப்பட நடிகை, திருமணம் தாண்டிய பிறழ் உறவு கொள்ளும் இளம்பெண், பாலியல் படம் பார்ப்பதற்காக ஏங்கும் விடலைகள் ஆகியோரை மையக் கதாபாத்திரங்களாகக் கொண்டிருந்த இந்தப் படத்தில் துளிகூட விரசமோ ஆபாசமோ இருக்காது. இந்தக் கதாபாத்திரங்களை வைத்துப் பார்வையாளர்களிடம் மலினமான உணர்ச்சிகளைத் தூண்டும் உத்தியை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா அறவே தவிர்த்திருப்பார். அதே நேரம் இவர்கள் யாரும் புனிதப்படுத்தப்பட்டிருக்க மாட்டார்கள். எல்லோரையும் அவரவர் இயல்புடன் பதிவு செய்யப்பட்டிருப்பார்கள். ஆணாகப் பிறந்து திருமணம் செய்து குழந்தை பெற்ற பிறகு திருநங்கையாக மாறியவர் மீண்டும் தன் குடும்பத்துடன் சேர்வது. முன்னாள் காதலனுடன் உறவு கொண்ட மனைவியை அதனால் நேரும் ஆபத்திலிருந்து காப்பாற்றத் துடிக்கும் கணவன். தன் தாய் பாலியல் படங்களில் நடிப்பவர் என்று தெரிந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சிறுவன், அதற்குப் பிறகு பாலியல் படங்கள் பார்ப்பவர்கள் இருக்கும் சமூகத்தில் பாலியல் நடிகைகளும் இருக்கவே செய்வார்கள் என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வது என நவீன சிந்தனைகளை இந்தப் படத்தின் மூலம் விதைத்திருப்பார் தியாகராஜன் குமாரராஜா.
வரலாற்றில் முக்கிய இடம்
யுவன் ஷங்கர் ராஜாவின் அருமையான பின்னணி இசையோடு தக்க தருணங்களில் இளையராஜாவின் பாடல்கள் மற்றும் இசைத் துணுக்குகள் காட்சிகளின் தாக்கத்தைக் கூட்டும். ஒளிப்பதிவு, கலை, ஒலிப்பதிவு என அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் சிறப்பாக அமைந்திருக்கும். கதைக் களம், நிகழ்வுகளின் கால வரிசை ஆகியவற்றைத் தெளிவாகக் கூறாமல் இடம், காலம் ஆகிய அம்சங்களை உடைக்கும் திரைக்கதை உத்தியை தன் இரண்டு படங்களிலும் பயன்படுத்தியிருந்தார் தியாகராஜன் குமாரராஜா.
கதை, திரைக்கதை உத்தி, படமாக்கம், தொழில்நுட்ப அம்சங்கள் என அனைத்து தளங்களில் பல வித்தியாசமான புதுமையான விஷயங்களை முன்னெடுத்த ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்துக்குத் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய இடம் உண்டு.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago