வாழ்வின் உயரத்துக்குச் செல்லவும் வாழ்க்கையின் துயரத்தைச் சொல்லவுமான குரல் அவருடையது. எட்டுத்திக்கெங்கும் கணீரென ஒலிக்கும் எட்டுக்கட்டைக்கு சொந்தக்காரர்... சீர்காழி கோவிந்தராஜன்.
தமிழ் சினிமாவின் ஆளுமைக்கெல்லாம் ஆஸ்தானக் குரல் என்றால் அது டி.எம்.எஸ். ஸின் சாக்லெட் குரல்தான். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், எஸ்.எஸ்.ஆர்., ஜெய்சங்கர் என்று ரவுண்டுகட்டு பாடியவர், பின்னாளில் கமல், ரஜினிக்கும் கூட பாடியிருக்கிறார். அப்பேர்ப்பட்ட டி.எம்.எஸ்.ஸுடன் சீர்காழி சேர்ந்து பாடிய பாடல்கள் ஏராளம். அந்தப் பாடல்களில், சீர்காழியாரின் குரல் மட்டும் தனித்தோங்கி ஒலிக்கும். அதனால்தான் சீர்காழி கோவிந்தராஜனை வெண்கலக்குரலோன் என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறது தமிழ் உலகம்.
’விநாயகனே... வினை தீர்ப்பவனே...’ என்று இவர் பாடலைக் கேட்டதுமே, அந்த பிள்ளையாரே வினை தீர்க்கக் கிளம்பிவிடுவார் என்பார்கள். அந்த அளவுக்கு தெய்வாம்சக் குரலுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்தார் சீர்காழி கோவிந்தராஜன்.
» மக்கள் ஊரடங்கு vs உயிரியல் பூங்காக்கள்: விலங்குகளுக்கும் இப்படித்தானே இருக்கும்?- நமீதா வருத்தம்
» பெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய் நிதியுதவி
அண்ணன் பிள்ளையாருக்கு மட்டுமா? தம்பி முருகனுக்கு ‘திருச்செந்தூரின் கடலோரத்தில்’ என்ற பாடலைக் கேட்க, அந்த செந்தூர் அலைகள் கரைக்கு வந்து காது கொடுத்துவிட்டுப் போகும். ’ஆறுபடை வீடுகொண்ட திருமுருகா’வுக்கு உருகாதார் எவருமில்லை.
ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் மட்டுமில்லாமல், எழுபதுகளில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் இவர் பாடிய பாடல், எம்ஜிஆர் கட்சிக்காரர்களின் திருப்பள்ளியெழுச்சி, காலர் டியூன், வைட்டமின் பூஸ்ட். தமிழகத்தில் எந்த ஊரில் இந்தக் கட்சியின் எந்த மாதிரியான விழா நடந்தாலும், ’நம் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்’ என்ற பாடல், அந்தக் கால ‘சங்கே முழங்கு’ என்ற பாடலுக்கு இணையான புத்துணர்ச்சிப் பாடல்.
’எதிர்நீச்சல்’ படத்தின் ‘வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்’ பாடலும் ‘ஆண்டுக்கு ஆண்டு சுபதினம்’ பாடலும் நமக்குள் தன்னம்பிக்கையைத் தூண்டி சுடர் விடச் செய்யும். சோர்வான தினத்தையும் சுபதினமாக்கிவிடும். அந்தக் காந்தக் குரல், கரையாத இரும்பையும் உருக்கியெடுத்துவிடும்.
‘அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையில் எனக்கு’ என்கிற சீர்காழியாரின் குரலைக் கேட்டால், அமுதும் வேண்டாம் தேனும் வேண்டாம் என்று சொல்லிவிடுவோம். ’படிக்காத மேதை’ படத்தில், எஸ்.வி.ரங்காராவும் சிவாஜியும் தங்களின் நடிப்பால் நம்மை மிரளவைத்து கதறடித்துவிடுவார்கள். போதாக்குறைக்கு, சீர்காழியும் சேர்ந்து கொண்டு, ‘எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நானென்றான்’ என்று பாடி அழவைத்துவிடுவார்.
’தட்டு தடுமாறி நெஞ்சம் கை தொட்டு விளையாட கெஞ்சும்’ என்ற பாடலில் கொஞ்சும் குரலால் நம் நெஞ்சம் தொடுவார். ஹைடெக் சாலையில் இருந்தாலும் கூட, ‘ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே’ என்ற இவரின் பாடலைக் கேட்டால், நம்மையெல்லாம் ஓடத்தில் ஏற்றிக்கொண்டு ஒரு ரவுண்டு அழைத்துச் செல்வார். அப்படியொரு மேஜிக் குரல் சீர்காழி கோவிந்தராஜனுடையது!
‘கர்ணன்’ படத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் கர்ணன் சிவாஜிக்காக நாம் அழுதுகொண்டிருப்போம். அப்போது கவியரசரின் குரல் நம்மை இன்னும் அழவைக்கும். நடிப்பையும் வரிகளையும் நமக்குள் கனெக்ட் செய்யும் குரலுக்கு உரியவராக, ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது...’ என்று பாடியிருப்பார். நாம் கைத்தட்டி அழுது கேட்டு மெய்ம்மறப்போம்.
‘நீர்க்குமிழி’ படத்தில், ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா’ என்கிற பாடல், மனிதர் உள்ளவரை, உள்ளம் தொட்டு உசுப்பும் பாடல். அவர் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் இன்னும் கனப்படுத்தி, நம்மை ரணப்படுத்தவல்லவை!
‘காதலிக்க நேரமில்லை, காதலிப்பார் யாருமில்லை’ என்றும் ‘காசிக்குப் போகும் சந்நியாசி’ என்றும் குஷியாகவும் குறும்பாகவும் பாடியிருக்கும் சீர்காழியின் குரல் தொட்ட உச்சத்துக்கு எல்லையே இல்லை.
சீர்காழி கோவிந்தராஜன் நினைவு நாள் இன்று (24.03.2020). இந்தநாளில் அவர் நினைவைப் போற்றுவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago