ரஜினி, கமல் போல விசுவும் ஒரு உச்ச நட்சத்திரம் தான்: இயக்குநர் வசந்த பாலன் புகழாஞ்சலி

By செய்திப்பிரிவு

ரஜினி, கமல் போல விசுவும் ஒரு உச்ச நட்சத்திரம் தான் என்று விசுவின் மறைவு தொடர்பாக இயக்குநர் வசந்த பாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

திரையுலகில் பல்வேறு வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவரும், பல படங்களுக்கு கதாசிரியராக பணிபுரிந்த விசு நேற்று (மார்ச் 22) மாலை காலமானார். அவருக்கு வயது 74. அவரது இறுதிச்சடங்கு இன்று (மார்ச் 23) மதியம் முடிவுற்றது. விசுவின் மறைவு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

விசுவின் மறைவு குறித்து இயக்குநர் வசந்த பாலன் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

'மணல் கயிறு' திரைப்படத்தைத் தரை டிக்கெட்டில் விருதுநகரில் இருந்த நாராயணஸ்வாமி திரையரங்கில் (இன்று நாராயணஸ்வாமி திரையரங்கு இல்லை இருபது வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டு வணிக வளாகமாக மாறிவிட்டது) பார்த்து வயிறு வலிக்கச் சிரித்துச் சிரித்து, இரவெல்லாம் நினைத்து நினைத்துச் சிரித்து ரசித்து உருண்டேன்.

அன்றிலிருந்து நான் விசு அவர்களின் பெரிய விசிறி. 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தை பத்து தடவைக்கு மேல் கண்டு ரசித்திருக்கிறேன். அந்த திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி எனக்கு இப்போதும் பிடிக்கும். திரைக்கதை வல்லுநர்கள் பலரும் அந்த கிளைமாக்ஸ் காட்சியை வியப்பார்கள்.

உடைந்த போன கூட்டுக் குடும்பத்தைக் கஷ்டப்பட்டு கருமாயப்பட்டு ஒன்று சேர்த்த மூத்த மருமகள் க்ளைமாக்ஸ் காட்சியில தன் கணவனுடன் தனிக்குடித்தனம் போய்விடுவாள். உடைஞச பானை ஒட்டாது என்பாள். எதிர் பார்க்க முடியாத க்ளைமாக்ஸ். 'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்படத்தின் ஒலிச்சித்திரம் எங்கே கேட்டாலும் அப்படியே நின்று விடுவேன். மனோரமா அவர்களுக்கு கண்ணம்மா எத்தனை பெரிய கதாபாத்திரம். “கோதாவரி வீட்டுக்கு குறுக்க ஒரு கோடு போடு”, "இவன் பத்தாவது பரீட்சை எழுதியிருக்கான். எழுதுனான் எழுதுவான்”, “கண்ணம்மா கம்முன்னு கெட” என்பதாகட்டும் வசனம் அத்தனையும் எனக்கு மனப்பாடம்.

'பெண்மணி அவள் கண்மணி' திரைப்படம் விருதுநகரில் ஓடும் போது விசு அவர்கள் விருதுநகருக்கு விஜயம் செய்திருந்தார். அன்றைக்கு எங்களுக்கெல்லாம் ரஜினி, கமல் அவர்களைப் போல விசு அவர்களும் ஒரு உச்ச நட்சத்திரம் தான். அரட்டை அரங்கத்திலும் விசு அவர்கள் ஒரு கலக்கு கலக்கினார். அவரை நினைக்கும் போது ஒவ்வொரு வீடுகளிலும் எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராத ஒரு அறிவாளி மாமா இருப்பார். வீட்டின் முக்கியமான விஷயங்களையும் பிரச்சினைகளையும் களைந்து அவர் தான் நல்லதொரு முடிவெடுப்பார். அந்த மாமாவின் முகம் அவருக்கு.

கடைசி காலங்களில் சிறுநீரகப் பிரச்சினையில் மிகவும் அவஸ்தைப்பட்டார். ஆனால் அதைப்பற்றிய எவ்வித கவலையின்றி இயக்குநர்கள் சங்கத் தேர்தல்களில் நிற்பார். எழுத்தாளர்கள் சங்கத்தில் பணியாற்றுவார். இறுதியாக யூ-டியூப்பில் வீடியோக்களை வெளியிட்டவாறு இருந்தார்.

வலியை மனஉறுதியில் கடந்த அவரது மனதிடம் நாம் கற்ற வேண்டிய பாடம். விசு அவர்கள் வலியை கடந்த விதத்தை எண்ணுகையில் ஜெயமோகன் எழுதிய பெருவலி கதை நினைவுக்கு வந்தது. “”ஊழிற்பெருவலி யாவுள? பெருவலின்னு சொல்றார் பார்த்தீங்களா? தமிழிலே இப்படி நெறைய சிக்கல்கள் இருக்கு. வலிமைக்கும் வலிக்கும் என்ன சம்பந்தம்? வலி இல்லென்னா வலிமை கிடையாதா? இல்ல வலிமை ஜாஸ்தியா இருந்தா வலி ஜாஸ்தியா? ஆனா அந்த வார்த்தை பிடிச்சிருக்கு. பெருவலி…நெறையவாட்டி அதைச் சொல்லிட்டே இருக்கேன்..’”””

இன்று நிறைய தடவை பெருவலின்னு சொல்லிக்கிட்டே இருக்கேன். விசு அவர்களின் உயிர் இந்த ஊரடங்கில் அடங்கியிருக்கிறது. ஆனால் அவரின் ஆன்மா எதற்கு அடங்காத நாரதநாயுடு போன்று உலா வந்த வண்ணம் இருக்கும்”

இவ்வாறு இயக்குநர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

மேலும்