திரையுலகில் வரவேற்பு பெற்ற பல்வேறு படங்களை இயக்கியவரும், பல படங்களுக்குக் கதாசிரியராகப் பணிபுரிந்தவருமான விசு காலமானார். அவருக்கு வயது 74.
திரையுலகில் கதாசிரியராக அறிமுகமாகி, பின்பு நடிகர், இயக்குநர் எனத் தன்னை நிரூபித்தவர் விசு. 2016-ம் ஆண்டு வெளியான 'மணல் கயிறு 2' படத்தின் கதாசிரியராக இருந்து, அதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்பு அவருடைய வயோதிகம் காரணமாகவும், தொடர்ச்சியாக டயாலிசிஸ் செய்து வந்ததாலும் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
வாரத்துக்கு 2 முறை டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தவருக்கு, 3 முறை செய்யக் கூடிய சூழல் ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நிலை கடந்த 10 நாட்களாகவே மோசமடைந்து இருந்தது. இன்று (மார் 22) மிகவும் சோர்வாகக் காணப்பட்டவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர் பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். விசுவின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். அவருக்கு வயது 74
இவருடைய மனைவியின் பெயர் சுந்தரி. இவருக்கு லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என 3 மகள்கள் இருக்கிறார்கள். அனைவருக்குமே திருமணம் முடிந்துவிட்டது.
விசு கடந்து வந்த பாதை
நாடகத்திலிருந்து 1977-ம் ஆண்டு 'பட்டினப் பிரவேசம்' என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாசிரியராக அறிமுகமானவர் விசு. அதனைத் தொடர்ந்து 'சதுரங்கம்', 'அவன் அவள் அது', 'மழலை பட்டாளம்' என கதாசிரியராகவே பல படங்களுக்குப் பணிபுரிந்து வந்தார். அவற்றில் 'தில்லு முல்லு', 'நெற்றிக்கண்', 'குடும்பம் ஒரு கதம்பம்', 'மணல் கயிறு', 'மிஸ்டர் பாரத்', 'சம்சாரம் அது மின்சாரம்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
ரஜினி நடிப்பில் பெரும் வரவேற்பு பெற்ற 'தில்லு முல்லு' படத்தில் கதாசிரியராகப் பணிபுரிந்தது மட்டுமன்றி, அதன் மூலமாகத் தான் நடிகராகவும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தான் இயக்கிய படங்கள் மட்டுமல்லாது, பிற படங்களான 'சின்ன மாப்ளே', 'மன்னன்', 'வனஜா கிரிஜா', 'இரட்டை ரோஜா', 'அரவிந்தன்', 'ஜி', 'அலெக்ஸ் பாண்டியன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
'கண்மணி பூங்கா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பிறகு 'மணல் கயிறு', 'புதிய சகாப்தம்', 'கெட்டி மேளம்', 'சிதம்பர ரகசியம்', 'சம்சாரம் அது மின்சாரம்', 'திருமதி ஒரு வெகுதி' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதில் 'சம்சாரம் அது மின்சாரம்' என்ற படத்துக்காகச் சிறந்த பொழுதுபோக்குப் படம் என்பதற்கான தேசிய விருதை வென்றார். மேலும், 1992-ம் ஆண்டு இவர் இயக்கிய 'நீங்க நல்லா இருக்கணும்' படத்துக்காக சமூகப் பிரச்சினைகள் குறித்த சிறந்த படம் என்பதற்கான தேசிய விருதினை வென்றார். தமிழக அரசு விருதினையும் வென்றுள்ளார்.
திரையுலகில் நுழையும் முன்பு பல நாடகங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் குடும்ப உறவுகளை மையப்படுத்தியே இருக்கும். அதனாலே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதுமட்டுமன்றி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அரட்டை அரங்கம்', ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'விசுவின் மக்கள் அரங்கம்' ஆகிய நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலம்.
விசுவின் இழப்பு கண்டிப்பாக நாடக உலகிற்கும், திரையுலகிற்கும் பேரிழப்பு. இவரது இயக்கத்தில் நடித்த பலரும் இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago