திரை விமர்சனம்- அசுரகுரு

By செய்திப்பிரிவு

வெளியுலகத்துக்கு கூரியர் பாய் என்று தன்னைக் காட்டிக்கொள்ளும் சக்தி (விக்ரம் பிரபு), கத்தை கத்தையாக பணம் எங்கிருந்தாலும், மிக திறமையாக அதை கொள்ளையடித்துவிடுகிறார். இந்த தொடர் கொள்ளைகளைக் கண்டுபிடிக்க போலீஸ் உயரதிகாரியான மணிவாசகம் (பாகுபலி சுப்பாராஜ்) நியமிக்கப்படுகிறார். இதற்கிடையில், தனது ஹவாலா பணத்தை திருடிச் சென்றவனை கண்டுபிடித்துக் கூறும்படி துப்பறியும் நிபுணரான தியாவை (மஹிமா நம்பியார்) அணுகுகிறார் நிழல் உலக மனிதர் ஜமாலுதீன் (நாகிநீடு). இவர்கள் அனைவரும் வெவ்வேறு திசைகளில் விக்ரம் பிரபுவை தேடுகின்றனர். இந்த தேடலில் அவர் சிக்கினாரா, இல்லையா? எதற்காக அவர் அடுத்தடுத்து கொள்ளையடிக்கிறார், கொள்ளையடித்த பணத்தை என்ன செய்தார் என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறது கதை.

முதல் காட்சியிலேயே, ஓடும் ரயிலில் குதித்து கொள்ளையடிக்கிறார் நாயகன். அடுத்தடுத்து இவ்வாறு ஈடுபடும்போது, அவர் ஏன் கொள்ளையடிக்கிறார், ஒரு போலீஸ்காரராக இருந்துகொண்டு விக்ரம் பிரபுவுக்கு ஜெகன் ஏன் உதவி செய்கிறார் ஆகிய கேள்விகளுக்கான எதிர்பார்ப்புடனேயே விறுவிறுப்பாக கடந்துவிடுகிறது முதல் பாதி.

அதேபோல, நாயகன் எதற்காக கொள்ளையடிக்கிறார் என்ற காரணத்தை புதிய கோணத்தில் பரபரப்பு குறையாமல் சொல்ல முயன்று, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஏ.ராஜ்தீப்.

ஒரு பக்கம் திருடன் – போலீஸ், மற்றொரு பக்கம் தனியார் துப்பறிவாளர் எனும் துரத்தல் அம்சம் ஆகியவை திரைக்கதையை தொய்வின்றி நகர்த்திச் செல்ல உதவுகின்றன. கொள்ளைக் காட்சிகளை ஏனோதானோ என காட்டாமல், நாயகனின் புத்திசாலித்தனம் மிகுந்த உத்திகளில் நவீனத்தையும், நேர்த்தியையும் கையாண்டிருப்பதால் அவை நன்றாகவே எடுபடுகின்றன.

திரைக்கதையில் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. ஆனாலும், பல இடங்களில் டெம்ப்ளேட் சரடுகள் நம்மை சோதிக்கின்றன. குறிப்பாக, மஹிமாவின் துப்பறியும் காட்சிகளில் இருக்கும் அழுத்தம், அவரது மனமாற்றத்தில் இல்லை. சுப்பாராஜின் விசாரணைக் காட்சிகள் பல படங்களில் பார்த்துப் பழகியவை. மனரீதியாக பாதிக்கப்பட்ட நண்பனை மருத்துவரிடம் அழைத்துச் செல்லாத நண்பனும், நாயகன் – நாயகி இடையேதோன்றும் காதலுக்கான அடிப்படையும் துருத்தித் தெரியும் ஓட்டைகள். ஆனால், இரண்டு மணிநேரத்தில் முடிந்துவிடும் படத்தின் கால அளவு, அந்த ஓட்டைகளை சட்டை செய்யாமல் சட்டென்று கடந்து
செல்ல வைத்துவிடுகிறது.

கூரியர் பாய் தோற்றத்துக்கு பொருந்தாத விக்ரம் பிரபு, வழக்கம்போல சண்டை, சாகசக் காட்சிகளில் அட்டகாசமாக பொருந்துகிறார். கொள்ளையடிப்பதற்கான காரணத்தின் பின்னணியில் வெளிப்படுத்த வேண்டிய உணர்ச்சியையும் அவர் கச்சிதமாக வெளிப்படுத்து கிறார்.

தனியார் துப்பறியும் பெண்ணாக மஹிமா நம்பியார் ஸ்டைலிஷ் நடிப்பை தந்திருக்கிறார். புகைப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில் அவரது கதாபாத்திரம் அதைச் செய்வது தேவையற்ற ஒட்டு.

யோகிபாபுக்கு பட எண்ணிக்கையில் ஒன்று கூடுவதை தவிர இப்படத்தில் வேறு ஏதும் இல்லை. போலீஸ் உயரதிகாரியாக சுப்பாராஜ் நல்ல தேர்வு. அவரதுஉயரமும், கட்டுக்கோப்பான உடலும்அதற்கு உதவுகின்றன.

நண்பனாக வரும் ஜெகனுக்கு இதில் நகைச்சுவை இல்லாத குணச்சித்திர வேடம். அதை கச்சிதமாக செய்திருக்கிறார்.
கணேஷ் ராகவேந்திரா இசையில் ஈர்ப்பு ஏதும் இல்லை. ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு கதைக்கு தேவையானதை மட்டுமே கொடுக்கிறது. படம் சீரான வேகத்தில் பயணிக்க லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு உதவுகிறது.

விறுவிறுப்பும், பரபரப்பும் கொண்ட காட்சிகளை மட்டுமே வைத்து திரைக்கதையை நிறைத்த இயக்குநர், அதை தாண்டி கதாபாத்திரங்களுக்கு இடையிலான ஈர்ப்பையும், விலகலையும் இன்னும் அழுத்தமாக சொல்லியிருந்தால் முழுமையான ஆக்‌ஷன் த்ரில்லர் கிடைத்திருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE