வாழ்க்கைக்கும் பாடல்களுக்கும் மிகப்பெரிய பந்தம் உண்டு. சினிமாவுக்கும் பாடலுக்கும் இருக்கிற உறவைவிட, இது மிக நீண்டதான சொந்தம். இரண்டரை மணி நேர சினிமாவுக்குள் வருகிற நான்கரை நிமிடப் பாடல், நம் வாழ்நாளின் பல தருணங்களில், கூடவே நம்முடன் பயணிக்கும். நம்மை இன்னும் இன்னுமாகப் பயணிக்க வைக்கிற கிரியா ஊக்கியாக இருக்கும். அப்படியான பல பாடல்கள் தமிழ் சினிமாவில் உண்டு. அப்படியான தலைமுறை கடந்த கவிஞர்கள் இன்றைக்கும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இன்றைக்கும் எழுதிக்கொண்டிருக்கிற, என்றைக்கும் பேசப்பட்டுக்கொண்டிருக்கிற கவிதைக்குச் சொந்தமான பாட்டுக்காரர் கவிப்பேரரசு வைரமுத்து. அவரின் முதல் பாடல் திரை வழியே வந்து, நம் நெஞ்சம் தொட்டு, தனிச்சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துகொண்டிருக்கிறது. அந்த முதல்பாடல்... ‘பொன்மாலைப் பொழுது’. இளமை மாறா எழுத்துக்குச் சொந்தக்காரரான வைரமுத்து எழுதிய இந்தப் பாட்டுக்கு வயது 40. இந்தநாள்... கவிப்பேரரசு வைரமுத்து திரையுலகிற்கு வந்த நாள்.
‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘நிறம் மாறாத பூக்கள்’ ஆகிய படங்களுக்குப் பின்னர், மணிவண்ணனின் கதை வசனத்தில், பாரதிராஜா உருவாக்கிய படம் ‘நிழல்கள்.’ இளைஞர்களின் கனவுகள் குறித்த கதைக்களம். இளைஞன் வைரமுத்துவின் கனவும் அங்கே சேர்ந்தது. கனவு நனவானது. அவரின் முதல் பாடல்... காற்றில் கலந்து, தமிழகத்தை வலம் வந்தது. ’இதுவொரு பொன்மாலைப் பொழுது’ என்கிற அந்தப் பாடல், எல்லோருக்குமான பாடலாக அமைந்தது. எல்லோருக்கும் பிடித்த பாடலாக அமைந்தது. எல்லாக் காலத்தின் தலைமுறையினரும் ரசிக்கும் பாடலாக இன்றைக்கும் இருக்கிறது. பாடியது ‘பொன்மாலைப் பொழுது’ என்றாலும், வைரமுத்துவின் சூரியன் கிழக்கு கிழித்து உதிக்கத்தொடங்கினான்.
» உடல் எடையைக் குறைக்கும் விஜய் சேதுபதி
» 'ஜிப்ஸி' படக்குழுவினரின் முடிவு: தணிக்கை குழுவினர் ஆச்சரியம்
அன்று தொடங்கிய வைரமுத்துவின் சூரியத்தேரின் குதிரைப் பயணம், இன்றைக்கும் அதே வேகத்துடன் தாள லயத்துடன் ஸ்வரம் பிசகாமல் ‘நுக்நுக்நுக்நுக்’ என தமிழ்த்திரையுலகிலும் தமிழகத்திலுமாக வலம் வந்துகொண்டே இருக்கிறது.
‘வானமகள் நாணுகிறாள்; வேறு உடை பூணுகிறாள்’ என்ற வரிகளில் கிறுகிறுத்துப் போனான் ரசிகன். ‘வானம் எனக்கொரு போதிமரம்’ என்ற வரிகளில் திளைத்து, வைரமுத்துவின் வரிகளின் பின்னே ஓடினான். அப்படி வந்தவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தைப் புகட்டினார் வைரமுத்து. அவரின் கவிதைகளையும் நூல்களையும் சேர்த்துக் கோர்த்து, அலமாரி நிரப்பிய ரசிகர்கள் ஏராளம்.
எண்பதுகள் சினிமாவின் பொற்காலம் என்பார்கள். பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி அமைத்தால், அந்த வருடத்தின் சூப்பர்ஹிட் பாடல்கள் அவைதான் என உறுதி செய்யப்பட்டது. ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே’ பாடல், எண்பதுகளில்... காதலர்களின் தேசியகீதமாயிற்று. ‘நீ பட்டுப்புடவை கட்டிக்கொண்டால், பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும்’ என்ற வரிகளில் மோட்சகதி அடைந்த ரசிகர்கள் உண்டு.
’சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை’ பாடலைக் கேட்டு, காதலையும் அதன் அடர்த்தி ஆழங்களைக் கண்டு கொண்ட கூட்டம் இன்றைக்கும் வைரமுத்துவின் வரிகளைச் சிலாகித்துச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ‘கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது, தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது’ என்ற வரிகளைக் கேட்ட இளைஞர்கள், புரிந்தும் புரியாமலும் புரியாமல் புரிந்து தெளிந்துமாக வியர்த்துப் போனார்கள்.
பாரதிராஜா, பாக்யராஜ், மணிவண்ணன், கே.ரங்கராஜ், மனோபாலா என அந்தப் பக்கம் மட்டுமல்லாமல், ஸ்ரீதரின் ‘தென்றலே என்னைத் தொடு’, ‘நினைவெல்லாம் நித்யா’வுக்கு எழுதிய பாடல்கள் அனைத்துமே காதலுக்கான டிக்ஷனரிகளாயின. ‘இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை, விரல்களில் மேனி முழுவதும் இளமை வரையும் ஓர் கவிதை’ என்ற வரிகளில், காதலும் காமமும் கைகோர்த்துக்கொண்டு, கும்மியடித்தன. ‘வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது உனது கிளையில் பூவாவேன், இலையுதிர்க் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்’என்ற வரிகளில், காமம் கடந்த காதலையும் அது சொல்லும் பேரன்பையும் போதித்திருப்பார் வைரமுத்து.
இளையநிலாவை பொழியச் செய்தார். முகிலனங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ என்று அவை மீது இரக்கப்பட்டிருப்பார். ‘பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்’ என்ற வெட்கச் சிணுங்கல் பாடியிருப்பார். அதேசமயம், ‘மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்’ என்று அறைகூவல் விடுத்திருப்பார். ‘எரிமலை எப்படிப் பொறுக்கும்’ என்று பொறுமை இழந்து கோபப் பேனாவில் எழுதியிருப்பார். அதேசமயம், ‘பூவை அள்ளி பூவை கையில் கொடுத்தபின்னும், தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்’ என்று மணம் கமழும் மனம் சொல்லியிருப்பார். ’நகங்கள் உரசிக்கொண்டால் அனல் உருவாகும்’ என விரசத்தை விரல் படாமல் சுட்டிக்காட்டியிருப்பார்.
மணிவண்ணனின் ‘இளமைக்காலங்கள்’ படத்தின் ‘ஈரமான ரோஜாவே’ பாடல் காதலர்களின் கண்ணீரைத் துடைத்தன.
’சலங்கை ஒலி’ யின் ‘மெளனமான நேரம்’ மன இறுக்கத்தின் நிசப்தங்களைப் போக்கியது. பாட்டிக்கும் பேத்திக்குமான அன்பை உணர்த்திய சினிமா புதுசு. அது ‘பூவே பூச்சூடவா’. அதில், ‘ஜீவதீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்’ என்று பாசத்துக்கு பால் வார்த்து வளர்த்த வரிகளைக் கொடுத்தார் வைரமுத்து. ’பேத்தி என்றாலும் நீயும் என் தாய்’ எனும் வரிகளில் நம்மை அப்படியே உருக்கிக் கரைத்தார்.
எம்.எஸ்.வியின் இசையில் பாடல்கள். அம்சலேகாவின் இசையில் அத்தனையும் அம்சமான பாடல்கள். தேவேந்திரனின் இசையில் தேவாமிர்தப்பாடல்கள். வித்யாசாகரின் இசையில் எல்லாமே வித்தியாசக் கடலில் மூழ்கடித்த முத்துமுத்துப் பாடல்கள். ஏ.ஆர்.ரஹ்மானைக் கைப்பிடித்து அவரின் இசையை, வாய்க்கால்களிலும் வரப்புகளிலும் பரப்பிவிட்டு மடை திறந்துவிட்டார் வைரமுத்து. ‘சின்னச்சின்ன ஆசை’ பெரிய பெரிய ஹிட்டைக் கொடுத்தது. ‘தென்மேற்குப் பருவக்காற்று’ தேனிப்பக்கம் மட்டுமின்றி, தென்னாடெங்கும் தேனருவியென தித்தித்தது. தேவாவின் இசைக்கும் வரிகள் இசைபடும். யுவன்சங்கராஜாவின் இசைக்கும் இளமை குதூகலிக்கும். இவையெல்லாம் தான் வைரமுத்துவின் வைரஜாலங்கள்; வரிவரியாய் எழுதிய இசைக்கோலங்கள்.
’மேகமே மேகமே’ என்றும் ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போனது’ என்றும் சங்கர்கணேஷ் இசையில் இவர் எழுதிய பாடல்கள், இன்றைக்கும் இளமை குறையாமல் நெஞ்சை அள்ளுகின்றன.
பாடல்களும் அதிகம். அவற்றால் கிடைத்த பதக்கங்களும் விருதுகளும் அதிகம். இதைப் பட்டியலிடும் நேரம் என்பது வைரமுத்துவின் நூறு பாடல்களைக் கேட்கும் நேரம். ஆயிரமாயிரம் கதை சொல்லும் பாடல்கள் அவை. இன்னும் ஆயிரம் வருடங்கள் கடந்தும் உசுப்பி, உயிர் தொடும் பாடல்கள்.
40 ஆண்டுகள் என்பது ஒரு தலைமுறை கடந்த விஷயம். சிவாஜிக்கும் பின்னர் பிரபுவுக்கும் அதையடுத்து விக்ரம்பிரபுவுக்குமாகப் பாட்டெழுதும் வைரமுத்துவுக்கும் அவரின் பேனாவுக்கும் தலைமுறை கடந்த பயணம்தான். ஆனால், அதே இளமை. ‘பொன்மாலைப் பொழுது’ இளமைத் துள்ளலுடன் இன்றைக்குப் புதிதாகப் பிறந்த இயக்குநர்களின் அசைவையும் இசைவையும் அறிந்து உணர்ந்து பாட்டெழுதும் சித்தன்.
இவரின் வரிகளை இசைக்காத இசையமைப்பாளர்கள் இல்லை. வாயசைக்காத தமிழ் நடிகர்களில்லை. தேன் சொட்டும் வரிகளைப் பாடிப்பருகாத பாடகர்களோ பாடகியரோ இல்லை. இயக்குநர்களின் பட்டியலும் சென்னை டூ வடுகப்பட்டி தூரம்.
நூறு பேரை நிறுத்தி, அவர்களின் செல்போனைத் துழாவினால், அதில் வைரமுத்துவின் பாட்டுக்கு தனி ஃபோல்டர் இருக்கும். அதில், நிழல்களின் ‘பொன்மாலைப் பொழுது’ பாடலாக, காலர் டியூனாக, ரிங்டோனாக ஒலித்துக் கொண்டிருக்கும்.
’வானம் இரவுக்குப் பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூ மரங்கள் சாமரங்கள் வீசாதோ’
வைரமுத்து எனும் பூமரம், 40 ஆண்டுகளைக் கடந்தும் தமிழ்ச் சமூகத்துக்காக, சமூகத்தை ஆற்றுப்படுத்துவதற்காக சாமரம் வீசிக்கொண்டே இருக்கிறது.
‘வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதிபெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்’
என்று திரைப்பயணத்தின் 40ம் ஆண்டைத் தொடங்கிய இந்தநாளில், கவிப்பேரரசு வைரமுத்துவை வாழ்த்துவோம். கைகொள்ளாத அளவுக்கு பூங்கொத்துகள் வழங்கி, மனம் கொள்ளாத வாழ்த்தைச் சொல்லுவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago