கர்நாடகா கலவரத்தில் தன் குடும்பத்தை கன்னடர் எப்படிக் காப்பாற்றினார் என்பதை 'டிம் டிப்' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜ் கூறினார்.
அருணாச்சலம் ஆனந்த் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ள படம் 'டிம் டிப்'. டாக்டர் தணிகாசலம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மோனிஷ் குமார், சஞ்சனா சிங், பவர் ஸ்டார், கே.ஆர். விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் இயக்குநர் பாக்யராஜ், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். படத்தின் இசை பாக்யராஜ் வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள். இந்த விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசியதாவது:
“இங்கே இசையமைப்பாளர்கள் கதாநாயகன் எல்லோருடைய பெற்றோர்களையும் அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்து சந்தோஷப் படுத்தினார்கள். இது எல்லோருக்குமே அமைவதில்லை. இது ஒரு நல்ல விஷயம்.எல்லாரும் பேசும்போது தயாரிப்பாளர் எவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்தார் இயக்குநர் எவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்தார் என்று பேசினார்கள்.
இங்கே திரையிடப்பட்ட இரண்டு பாடல்களில் ஒரு பாடல் காட்சியில் கதாநாயகனும் நாயகியும் நெருக்கமாக இருக்க வேண்டிய காட்சி .ஆனால் சற்று இடைவெளி இருந்தது போல் தெரிந்தது. அவர்களுக்குள் ஹெமிஸ்ட்ரி இல்லையோ என்று தோன்றியது. அப்படிப்பட்ட காட்சிகளில் இருவரும் சங்கோஜப்பட்டு நடித்திருந்தார்கள்.இருவரும் ஒரு போர்வைக்குள் போர்த்திக் கொள்வது போல் முடிகிற அந்தக் காட்சிக்கு முன்பு இருந்த இடைவெளியில் அவர்கள் ஏதாவது செய்திருக்க வேண்டும். இருவரும் சங்கோஜப் பட்டுக் கொண்டிருந்தார்கள் .
நான் கூட 'மௌனகீதங்கள்' படத்தில் நடிக்கும்போது சரிதாவை வாங்கப் போங்க என்று தான் அழைப்பேன். அவருக்கு அது ஒரு மாதிரியாக இருந்தது .பெயர் சொல்லி அழையுங்கள் என்பார். நடிக்கும்போதெல்லாம் நன்றாக நடித்து விடுவோம் . பேசும்போது பெயர் சொல்லிக் கூப்பிட எனக்கு வாய் வார்த்தை வரவில்லை. காரணம் அவர் 'தப்புத்தாளங்கள்' போன்ற படங்களில் நடித்து மூத்தவர் என்கிற உணர்வு மனதிலிருந்ததால் கடைசி வரை பெயர் சொல்ல வாய் வார்த்தை வரவே இல்லை.
நமக்கு நெருக்கமான நண்பன், வாடா போடா என்று கூப்பிட்ட அந்த நண்பனுக்குத் திருமணம் ஆகி விட்டால் அவனது மனைவியை வாங்கப் போங்க என்றுதான் அழைப்போம் .அப்போது அவன் நீ அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிடலாம் என்பான். ஆனால் நமக்கு வாய்வாரது .அதுதான் நமது பண்பாடு .ஏனென்றால் நண்பன் நமக்குத் தெரிந்தவன். அந்தப் பெண் யார் வீட்டுப் பெண்ணோ ? எனவே நமக்கு அப்படிச் சொல்லத் தோன்றாது. பெயர் சொல்லி அழைக்க நமக்குள் இடர்பாடு இருக்கும்.அந்த இடர்ப்பாடு மரியாதைக்குரிய இடர்ப்பாடுதான்.ஏனென்றால் அதுதான் நமது பண்பாடு.
சஞ்சனாசிங் பேசும்போது என்னைப் பற்றிப் பேசும்போது "நிறையச் சொல்லிக் கொடுத்தார்" என்று சொன்னார் .பா. விஜய் படத்தில் நடித்த போது அவரைத் தெரியும். இப்படி எப்போதாவது தீபாவளிக்குத் தீபாவளி சந்திப்பதோடு சரி. ஆனால் அவர் சொல்வதைப் பார்த்தால் ஏதோ இவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்களோ என்று மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.பேசும்போது முழுமையாகப் பேசவேண்டும். மொட்டையாகப் பேசக்கூடாது. அதைத் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும்.இந்த படத்தில் பவர்ஸ்டார் ஜோடியாகத்தான் அவர் நடித்திருக்கிறார். பாக்யராஜ் சார் ஜோடியாக என்று என் பெயரைச் சேர்த்து விட்டார்.இதையெல்லாம் பார்ப்பவர்களுக்கு அடிக்கடி சந்தித்துக் கொள்வது போல் நினைத்துக்கொள்வார்கள். எனவே தெளிவாகப் பேச வேண்டும்.
தயாரிப்பாளர் பேசும்போது அவரது உற்சாகத்தைப் பார்த்து எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கர்நாடகாவிலிருந்து வந்துள்ள ஒருவர் நம்பிக்கையோடு உற்சாகமாகப் பேசியது எனக்குப் பிடித்திருந்தது.கர்நாடகா என்றதும் கன்னடர் அனைவரும் பிரச்சினை செய்பவர்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் இவரைப் பார்க்கும் போது அங்கும் நல்லவர்கள் இருக்கிறார்கள்.
எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது .'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ' படப்பிடிப்பு மைசூரில் நடந்துகொண்டிருந்த போது எங்கள் பிள்ளைகளுக்கு ஒரு வாரம் விடுமுறை கிடைத்ததால், படப்பிடிப்பில் வந்து பார்ப்பதாக பூர்ணிமா அழைத்து வருவதாகச் சொன்னார். அதன்படி என் மனைவியும் பிள்ளைகள் இரண்டு பேரும் சென்னையிலிருந்து பெங்களூர் ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய உடனேயே அங்கே கலவரம் ஆரம்பித்து விட்டது .சிட்டி மட்டுமல்ல போகிற இடமெல்லாம் கலாட்டா கல்லெறிதல் என்று தொடர்ந்திருக்கிறது.
தமிழ்நாட்டுப் பதிவு எண் வாகனங்கள் எல்லாம் தாக்கப்பட்டன .எங்கள் காரையும் தாக்க முயற்சி செய்தார்கள். கற்களும் வீசப்பட்டுக்கொண்டு இருந்தன. சாலை எங்கும் டயர்களும் தடைகளும் ஆக இருந்தது.மைசூர் எப்படி வருவது என்று தெரியாமல் டிரைவர் குழம்பி எப்படியோ அங்குமிங்கும் ஓட்டி தட்டுத்தடுமாறி ஒரு ஊருக்குச் சென்றுவிட்டார். அந்த ஊர் பெங்களூரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமம்
.அங்கே இவர்களைப் பார்த்த ஒரு பெரியவர் இந்த நிலையில் நீங்கள் வெளியே செல்ல வேண்டாம் .இரவு இங்கேயே தங்கி விட்டுப் பிறகு செல்லலாம் என்று கூறியிருக்கிறார். இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து யோசித்த போது ”அவர் யோசிக்க வேண்டாம் உங்கள் காரை தமிழ்நாட்டுப் பதிவு எண் தெரியாத அளவுக்கு உள்ளே நிறுத்தி விடுங்கள் வெளியே தெரிந்தால் பிரச்சனை” என்று ஒரு காம்பவுண்ட் கேட்டை திறந்து உள்ளே வழிவிட்டு, இங்கே பெண்களும் இருக்கிறார்கள் எங்கள் வீட்டுப் பெண்களோடு நீங்கள் தங்கிக் கொள்ளுங்கள் என்று அங்கே தங்க வைத்திருக்கிறார்.
நானும் மைசூரில் பதற்றமாக இருந்தேன்.என் மனைவியிடம் பேசியபோது அந்த இடத்தில் பாதுகாப்பாக இருப்பதாகச் சொன்னார். நான் கர்நாடகாவிலுள்ள திரையுலகினரைத் தொடர்பு கொண்டேன் .அம்ப்ரீஷைத் தொடர்பு கொண்டபோது பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தார். மறுநாள் காலை போலீஸ் பாதுகாப்போடு அவர்களை அழைத்து வந்தார்கள்.இதை ஏன் சொல்கிறேன் என்றால் கன்னடர்கள் என்றாலே அப்படி இப்படி என்று நினைக்கிறோம் .
எல்லாக் கன்னடர்களும் அப்படியில்லை. அவர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் .கலவரத்திலும் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது என்பதற்கு அந்த ராசய்யா ஒரு சாட்சியாக இருக்கிறார். அவர்கள் ஏதோ ஒரு தமிழ்க் குடும்பம் என்ற வகையில்தான் என் மனைவி குழந்தைகளைக் காப்பாற்றினார்களே தவிர பாக்யராஜ் மனைவி குழந்தைகள் என்று அல்ல. ஏனென்றால் அது பிறகுதான் தெரியும். எனவே இங்கு வந்துள்ள கர்நாடகாவைச் சேர்ந்த இந்த தயாரிப்பாளரும் நிறையப் படங்கள் தயாரிக்க வேண்டும்.
இயக்குநர் ஆனந்த் பேசும்போது இந்த படத்துக்கு ஆதரவு தரும்படி நான் கெஞ்சமாட்டேன் .படம் நன்றாக இருந்தால் ஆதரித்து எழுதுங்கள் ஊக்கப்படுத்துங்கள் என்று பேசினார் . அந்த நம்பிக்கை எனக்குப் பிடித்திருந்தது. அதுதான் ஒரு இயக்குநருக்கு இருக்க வேண்டும்.அவரை வாழ்த்துகிறேன்”
இவ்வாறு இயக்குநர் கே.பாக்யராஜ் பேசினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago