காஷ்மீரில் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பெற்றோர் பலியானசூழலில் கைக்குழந்தையாக ஒரு பெரியவரிடம் அடைக்கலமாகிறான் ஜிப்ஸி (ஜீவா). ஒரு நாடோடிக் கலைஞனாக வளர்ந்து, தேசத்தின் குறுக்கும் நெடுக்கும் சென்று வருகிறான். பெரியவர் மறைந்துவிட்ட பிறகு, பிழைப்புக்காக தனது நடனக் குதிரையான ‘சே’வுடன் நாகூருக்கு வருகிறான். அங்கு ஜிப்ஸியின் காதலுக்குரியவள் ஆகிறாள் வஹிதா (நடாஷா சிங்). இருவரும் மணம் முடித்துக்கொண்டு வட இந்தியாவில் ஒரு சிறு நகரில் குடியேறுகின்றனர். வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் வஹிதாவையும், ஜிப்ஸியையும் பிரித்துவிடுகிறது ஒரு மதக் கலவரம். பின்னர் அவர்கள் சேர்ந்தார்களா, இல்லையா என்பதை அரசியல் பார்வையுடன் சொல்கிறது ‘ஜிப்ஸி’.
‘ஜோக்கர்’ படத்துக்குப் பிறகு ராஜுமுருகனின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம். தணிக்கை துறையினருக்கும் கடுமையான வேலைவைத்திருக்கும் என்பது படத்தைப் பார்த்தாலே தெரிகிறது. நாடு நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும்போது, கலைஞர்கள், மக்கள் பக்கம் நின்றுஅவர்களது வாதைகள், வேதனைகளை சொல்ல வேண்டும். அந்த வேலையை தனக்கே உரிய விமர்சனப் பார்வையுடன் செய்திருக்கிறார் ராஜுமுருகன்.
இன, மத அடையாளங்களுக்கு வெளியே, மனிதப் புனிதனாக வலம் வரும் ஒரு நாடோடி இளைஞனின் காதலை முதன்மைப்படுத்தி, நாட்டின் பலவித நிலப்பரப்புகளையும் கதைக் களமாக்கி, அதற்குள் வளர்ந்து நிற்கும் மதவாத அரசியலை, அதை மீறி நிற்கும் இந்தியாவின் ஆன்மா என்பது, அதன் பன்முகத் தன்மையிலேயே இருக்கிறது என்பதை அச்சமறத் தூக்கிப் பிடித்திருக்கிறது சிதறலான திரைக்கதை. அதற்கு ராஜுமுருகனின் நிதர்சனமான வசனம் துணைநிற்கிறது.
கலவரத்தில் பல கொலைகளை செய்யும் சோனுகுமார் என்ற தொண்டரை, பின்னர் ஒரு காட்சியில் கொல்ல வரும் மதவாதியை மக்கள் திரண்டு செங்கற்களை எறிந்து விரட்டுகின்றனர். இந்திய வரலாற்றில் மதப் பிரிவினையின் குறியீடான செங்கற்கள், இங்கு மத ஒற்றுமைக்கு குறியீடாக மாறி நிற்பது அசத்தல். இப்படி படத்தில் ஆங்காங்கே வாய்ப்புகிடைத்த இடங்களில் எல்லாம் சகோதரத்துவத்தை, நல்லிணக்கத்தை தூக்கிப்பிடிக்க முயன்றிருக்கிறார் இயக்குநர்.
ஆனால், திரைக்கதை கோர்வையாக இல்லாமல் காட்சிகள் வெவ்வேறு நிலப்பரப்புக்கும் வெவ்வேறு உணர்வுக்கும் அடுத்தடுத்து இடமும், தடமும் மாறுகின்றன. இந்த மாற்றத்தை எதிர்கொள்ளத் தேவையான கால இடைவெளியும், ஏற்ற காரணங்களும் தணிக்கையின் கடும் வெட்டுகளில் நீக்கப்பட்டிருப்பதால், தனது ஒட்டுமொத்த உணர்வுத் தொடர்ச்சியை படம் இழந்து நிற்பது சோகம்.
இருப்பினும் சமகால, கடந்தகால கசப்பான அரசியல் நிகழ்வுகளை, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு காவடி தூக்கிப் பழக்கப்பட்ட காவல்துறையின் ஏவல் முகத்தைநம்பகமாகவும், மதம் சார்ந்த காட்சிகளில் ஒரு திரைப்பட இயக்குநர் கைகொள்ள வேண்டிய நடுநிலையைப் பொறுப்புடனும் கையாண்டிருக்கிறார் இயக்குநர்.
ஒரு நாடோடிக் கலைஞன் கதாபாத்திரத்துக்கு ஜீவா முழுமையான உயிர்ப்பை தருகிறார். காவல் துறையினரின் சித்ரவதைகளைக் காட்டுவதற்காக நீதிமன்றத்தில் சட்டையைக் கழற்றி நிற்பது, கேரளாவில் காவல் நிலையத்தில் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகளில் அலைக்கழித்து நொறுக்கப்பட்ட ஒரு கலைஞனின் வலியை வார்த்தைகள் இன்றி வெளிப்படுத்துகிறார்.
சுதந்திரத்துக்கு ஏங்கும் ஒரு சாமானியக் குடும்பத்தின் பெண்ணாக, கலவரத்தின்போது உயிரைக் கண்களில் தேக்கி இறைஞ்சி, கலங்கிய விழிகளுடன் கைகூப்பி நிற்கும்போதும், மீண்டும் தன்னை வந்து பார்க்கும் ஜிப்ஸியை கண்டு மனப்பிறழ்வுடன் அதிரும்போதும் உயரிய நடிப்பைக் காட்டியிருக்கிறார் கதாநாயகி நடாஷா சிங். அவரது தந்தை முத்தலீப்பாக நடித்திருக்கும் லால் ஜோஷ், மதஅடிப்படைவாதியாக தனது கதாபாத்திரத்தை இயன்ற அளவு இறுக்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
செல்வகுமார் ஒளிப்பதிவில் இந்தியாவின் பல்வேறு இடங்களும் இரவும் பகலும், பனிப் பாறைகளும், மணல் மேடுகளும், நதிக்கரைகளும், கலவரம் சூழ்ந்த பொழுதுகளுமாக கச்சாத் தன்மையுடன் பதிவாகியுள்ளன. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்துடன் ஒத்திசைந்து செல்கிறது. ஆனால், ஒரு நாடோடிப் பாடகனை முன்னிறுத்தும் திரைக்கதைக்கு பலமாக அமைந்திருக்க வேண்டிய பாடல்கள், சிறிதும் ஈர்க்கவில்லை.
இந்தியாவின் மேன்மையும், பலமும் அதன் மதச்சார்பின்மையில்தான் இருக்கிறதே தவிர, வெறுப்புணர்வை வளர்க்கும் அடிப்படைவாத அரசியலில் அல்ல என்பதை எச்சரிக்கும் ஜிப்ஸியின் குரலில் ஒலிக்கும் அரசியல் தெளிவு, அதன் திரைமொழியில் விடுபட்டுப்போனதில் தடுமாறி நிற்கிறான்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago