நட்பு வட்டத்தில் அஞ்சலி, இந்துஜா!- அதுல்யா ரவி உற்சாக நேர்காணல்

By மகராசன் மோகன்

‘நாடோடிகள் 2’ படத்தை தொடர்ந்து ‘எண்ணித் துணிக’ படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக இருக்கிறார் நடிகை அதுல்யா ரவி. மண் மணக்கும் தமிழ் பேச்சு, நடனத்தில் ஈடுபாடு, சக கலைஞர்களுடன் கலகலப்பு என படப்பிடிப்பு தளத்தையே சுவாரஸ்யமாக்கிக் கொண்டிருந்தவருடன் ஒரு நேர்காணல்..

தமிழ் தெரியாத நடிகைகளின் வருகைக்கு மத்தியில் தமிழ் பேச, எழுதத் தெரிந்த உங்களுக்கு நம் சினிமா மிகவும் நெருக்கமானதாக இருக்குமே?

கண்டிப்பாக. குறிப்பாக, ஒவ்வொரு படத்தின் உதவி இயக்குநர்களுடன் தகவல் பரிமாற்றம் மிகவும் எளிதாக இருக்கு. எல்லா உதவி இயக்குநர்களுக்கும் எல்லா மொழியும் தெரிய வாய்ப்பு இல்லை.அன்றாட படப்பிடிப்பு காட்சியை விளக்குவது, வசனத்தை புரிந்துகொள்வது எனும்போது எனக்கு தமிழ் ரொம்ப சவுகரியமாக இருக்கிறது. இயல்பாகவே எனக்கு தமிழ்நன்றாக எழுத வரும் என்பதால், வசனமாக என் கைக்கு வரும் ஒரு காட்சியை படித்துவிட்டு அதுக்கு தயாராவதும் சுலபம்.டப்பிங் வரை அது பயன் அளிக்கிறது.

இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கும் வாய்ப்புகளே உங்களுக்கு அதிகம் வருகிறது, ஏன்?

இப்போதெல்லாம் சராசரியாக 10 படங்களில் 8 படங்கள் இரண்டு அல்லது மூன்று நாயகிகள் படங்களாகத்தான் இருக்கின்றன. காஜல் அகர்வால் போன்றமுன்னணி நடிகைகள்கூட மல்டி ஹீரோயின் படங்களில் நடிக்கின்றனர். தவிர,நான் ஏற்கும் கதை, அதில் என் கதாபாத்திரம் ஆகியவற்றைதான் பார்ப்பேனே தவிர, எத்தனை நாயகிகளில் ஒருவர் என்று பார்ப்பது இல்லை. இன்னொரு விஷயம்.. இப்போது நடித்து வரும் ‘எண்ணித் துணிக’ படத்தில் நான் மட்டும்தான் நாயகி.

தமிழ் படங்களில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறீர்களா?

அமலாபால் நடித்து தயாரிக்கும் ‘கடாவர்’ திரைப்படம் தமிழ், தெலுங்கில் வெளிவர உள்ளது. அதிலும் நடித்துள்ளேன். தெலுங்கு, மலையாள படங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வரும்.

மாடலிங் துறை ஆர்வம்தான் உங்களை சினிமாவுக்கு அழைத்து வந்ததா?

மாடலிங் வாழ்க்கை என்றால் என்ன என்பதே எனக்கு தெரியாது. பள்ளி, கல்லூரி நாட்களில் இருந்தே நடனத்தின் மீது அலாதி பிரியம் உண்டு. எம்.டெக்.படிப்பதற்காக கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு வந்தேன். கல்லூரி நண்பர்கள் சேர்ந்து ‘காதல் கண் கட்டுதே’ என்று ஒரு படம் எடுத்தனர். அதனால், படிக்கும் காலத்திலேயே நடிக்கும் சூழல் அமைந்தது. அந்த படம் 2017-ல் வெளியானபோது, கல்லூரி மாணவர்கள், இளம் தலைமுறையினரின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. அதுவழியே ‘ஏமாலி’ திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. அதில் நடித்த சமுத்திரகனி, பிறகு எங்கள் குடும்ப நண்பராகவே ஆகிவிட்டார். அவரது ‘நாடோடிகள் 2’ படத்தில் நடித்துள்ளேன். இப்போது முழு சினிமாவாசியாகவே மாறியாச்சு.

‘கருத்துகளை போதிக்கும் இயக்குநர்’ என்ற விமர்சனம், சமுத்திரகனி மீது இருப்பது பற்றி உங்கள் கருத்து..

அவர் பணத்துக்காக படம் எடுப்பவர் அல்ல. சமூக அக்கறையுள்ள படங்களை இயக்க வேண்டும் என்ற விருப்பம்உள்ளவர். அதனால், அந்த நோக்கம் படங்களில் வெளிப்படுகிறது. மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்கும்போது, அவர் இந்த பாணியை பின்பற்றுவது இல்லை. உதாரணத்துக்கு ‘வட சென்னை’, ‘காலா’ மற்றும் தெலுங்கு படங்களில் அவரது வேறொரு பரிமாணத்தை பார்க்க முடியும்.

நடிகை அஞ்சலிதான் உங்களுக்கு சினிமாவில் சிறந்த தோழியாமே?

‘நாடோடிகள் 2’ படத்தில் நடிக்கும்போது அவர் சீனியர். ஒரு நடிகைக்கு உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு கட்டாயம் தேவை என்பது போன்ற விஷயங்கள்கூட தெரியாமல் இருந்த எனக்கு, அந்த படத்தில் ஒரு நல்ல தோழியாக அவர் கிடைத்தார். இப்போது சென்னை வந்தால் அவரும், ஹைதராபாத் போனால் நானும் வீடு வரை போய்விட்டு வரும் அளவுக்கு நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டோம். இந்த நட்பு வட்டத்துக்குள் இந்துஜாவும் இணைஞ்சுட்டாங்க. இப்போ, இவர்கள் இல்லாமல் என் குடும்ப நிகழ்ச்சிகள் இல்லை.

‘ஹீரோயினிஸ’ கதைகள், வெப் சீரீஸ் ஆகியவை சீனியர் நடிகைகளை மட்டுமின்றி, இளம் நடிகைகளையும் துரத்துகிறதே?

ஆம். எனது சமூக வலைதள பகிர்வுகள், நடிப்பு பாவனைகளை பார்த்த இயக்குநர் ஒருவர், சமீபத்தில் நாயகியை மையமாகக் கொண்ட கதையை கூறியுள்ளார். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் இருக்கும். அதேபோல, அமேசான் பிரைம் சேனலுக்கு எஸ்பிபி சரண் இயக்கும் ஒரு வெப் சீரீஸிலும் நடித்து வருகிறேன். அடுத்தடுத்து ‘கடாவர்’ திரைப்படம், ட்ரீம் வாரியர் நிறுவனத்துக்காக சிபிராஜுடன் இணைந்து நடித்துள்ள புதிய படம் ஆகியவை ரிலீஸுக்கு தயாராக உள்ளன. சுறுசுறுப்பாக நாட்கள் நகர்வது மகிழ்ச்சியாக இருக்கிறது! மகராசன் மோகன்


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்