முதல் பார்வை: தனுஷின் 'பட்டாஸ்' வெடித்ததா? 

By உதிரன்

இரட்டை வேடங்களில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் 2-வது முறையாக நடித்திருக்கும் படம் 'பட்டாஸ்'.
அசுரனுக்குப் பிறகு, தமிழர் திருநாளில் தனியாக வந்திருக்கும் தனுஷ் பட்டாஸாக பட்டையக் கிளப்பினாரா?

திருடனாக இருக்கும் பட்டாஸ் (தனுஷ்) தன் பின்னணி அறிந்து அப்பா வளர்த்தெடுத்த வீரக் கலையை உலகறியுச் செய்யும் விதமாக, தாயின் துணையுடன் எடுக்கும் முயற்சிகளும் பயிற்சிகளுமே 'பட்டாஸ்' படத்தின் கதை.

தன் மகன் சக்தியைக் கொலை செய்த வெளிநாட்டைச் சேர்ந்த இளைஞரை அடிமுறை எனும் தற்காப்புக் கலையின் மூலம் விரல் வித்தையால் கொலை செய்கிறார் கன்னியாகுமரி (சினேகா). இதனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனை முடிந்த பிறகு, போயிட்டு வரேன் என்று சிறை அதிகாரிகளிடம் சொல்லிவிட்டே வெளியே வருகிறார். கிக் பாக்ஸிங் அகாடமி நடத்தி வரும் நிலப்பாறையைப் (நவீன் சந்திரா) பின் தொடர்ந்து அவரைக் கொல்ல முடிவெடுக்கிறார். அதற்கான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தும்போது சக்தியைப் (தனுஷ்) பார்த்து அவன் உயிரோடு இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறார்.

இதையெல்லாம் அறியாமலேயே பதக்கங்கள், கோப்பைகளைத் திருடி, அகாடமியில் நெருப்பைப் பற்ற வைத்து சேதாரம் செய்கிறார் பட்டாஸ் (தனுஷ்). இதனால் நிலப்பாறையின் பாக்ஸிங் அகாடமியில் எம்எம்ஏ போட்டி (தற்காப்புக் கலை) நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

சென்னையில் கிக் பாக்ஸிங் அகாடமி நடத்தும் நிலப்பாறையை ஏன் தென்மாவட்டத்தைச் சேர்ந்த கன்னியாகுமரி கொல்ல நினைக்கிறார், பட்டாஸ் ஏன் நிலப்பாறை அகாடமியில் இருந்து பதக்கங்கள், கோப்பைகளைத் திருடுகிறார், அகாடமியை ஏன் எரிக்கிறார், பட்டாஸின் பின்னணி என்ன, அடிமுறைக் கலைக்கு நிகழ்ந்த ஆபத்து என்ன, அடிமுறைக் கலையில் ஆசானாக இருந்த திரவியப் பெருமாள் (தனுஷ்) என்ன ஆனார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

'எதிர்நீச்சல்', 'காக்கிசட்டை', 'கொடி' படங்களை இயக்கிய துரை செந்தில்குமாரின் நான்காவது படம் 'பட்டாஸ்'. தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் முதல் இரு படங்களை இயக்கிவர் பின்பு, தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்க இரு படங்களை இயக்கியுள்ளார். அந்த இரண்டாவது படம்தான் 'பட்டாஸ்'. ஆனால், பட்டாஸின் சத்தம் தெறிக்கவிடவில்லை என்பதுதான் சோகம்.

நாயகனை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து ஒரு கமர்ஷியல் படத்தைக் கொடுப்பது, அதைப் பண்டிகைக் காலத்தில் ரிலீஸ் செய்வது ரசிகர்களுக்கான விருந்துதான் என்று விரும்பிப் போனால் இங்கே சர்க்கரைப் பொங்கலுக்குப் பதிலாக வெண்பொங்கலைக் காட்டி, 'அதான் பாஸ் இது' என்கிறார்கள்.

பட்டாஸ் என்கிற சக்தி, திரவியப் பெருமாள் என்று இரட்டை வேடங்களில் தனுஷ் நடிப்பில் பரிமாணங்களைக் காட்டுவார் என்று பார்த்தால் திரவியப் பெருமாளாக மட்டும் மனதில் நிற்கிறார். அடிமுறைக் கலை குறித்த போட்டியிலும், நண்பனை எதிர்த்துச் சண்டை போடும்போதும் ஆசான் நாசருக்கும், வீரக் கலையான அடிமுறைக்கும் பெருமை சேர்க்கிறார். சின்ன ஆசானாக தன் ஆளுமையை நிறுவுகிறார்.

விளையாட்டுத்தனமான சக்தி கதாபாத்திரத்தில் தனுஷ் தோற்றத்தில் பொருந்துகிறார். ''டேய் தம்பி. உன்னையெல்லாம் தண்ணி இல்லாம குளிப்பாட்டி டவல் இல்லாம துவட்டிடுவேன்'' என்று ரைமிங்கில் பேசி யூத் பல்ஸை பிரதிபலிக்கிறார். அவர் நடிக்கும் அளவுக்கு கதாபாத்திரம் சரியாகவும் முறையாகவும் எழுதப்படவில்லை. இதனால் இளைஞருக்கே உரிய குணாம்சங்களைக் காட்டி ஓரளவு ஈடுகட்டுகிறார்.

படத்தின் மிகப்பெரிய பலம் சினேகாதான். ஒட்டுமொத்தக் கதையின் வலுவைத் தாங்கி நிற்கிறார். கன்னியாகுமரியாக அடிமுறைக் கலையிலும், சண்டைக் காட்சிகளிலும், அழுத்தமான நடிப்பைத் தந்து தனித் தடம் பதிக்கிறார். இரட்டை வேடங்களில் நடிக்கும் நாயகனை மையமாகக் கொண்ட கமர்ஷியல் படத்தில், சினேகா தனக்குக் கொடுக்கப்பட்ட இடத்தை மிகச் சரியாகக் கையாண்டுள்ளார்.

பேருக்கு ஹீரோயினாக வந்து போகிறார் மெஹ்ரீன் பிரஷாடா. அவர் செய்யும் அதிகப்பிரசங்கித்தனம், அலப்பறை எதுவும் ஈர்க்கவில்லை. நடிப்புக்கும் அவருக்குமான தூரத்தைக் கணக்கிட முடியவில்லை.

'கலக்கப்போவது யாரு' மூலம் வெளிச்சத்துக்கு வந்த சதீஷ், 'பட்டாஸ்' தனுஷுடன் செய்யும் நகைச்சுவை ரசிக்க வைக்கிறது. ''நீ வழக்கம்போல வித்தை காமிச்சதையும் பார்த்தேன், அந்த அம்மா உன்கிட்ட கெத்தை காமிச்சதையும் பார்த்தேன்'' என்று போகிற போகில் கவுன்ட்டர் கொடுத்து மனிதர் பின்னி எடுக்கிறார். இனி, சதீஷை அடித்தடுத்த படங்களில் பார்க்கும் அளவுக்கு திறமை காட்டியிருக்கிறார்.

சினேகா வருவதைக் குறிப்பால் உணர்த்த முடியாமல் தனுஷை அலர்ட் செய்வதற்காக முனீஷ்காந்தின் சமாளிஃபிகேஷன் அட போட வைக்கிறது. நல்லாசானாக நாசர் கம்பீரமாக நடித்துள்ளார்.

நவீன் சந்திரா கதாபாத்திரம் போதுமான அளவில் கட்டமைக்கப்படவில்லை. சண்டை தெரிந்த எதிர் நாயகன் என்பதற்காக நவீனைத் தேர்வு செய்திருக்கலாம். ஆனால், நடிப்பில் அவர் போதாமையை வெளிப்படுத்துகிறார். அவன் முகத்தைக் காட்டு, யார்றா அவன் என்று கேட்கும் நவீன் எந்த அதிர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை. 'என்ன தம்பி முதுகுக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்குறதுக்கு பேர்தான் அடிமுறையா' என சாவகாசமாகக் கேட்டு அடி வாங்குகிறார்.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. விவேக்- மெர்வின் இசையில் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. 'மவனே என்னை மோதிட வாடா' பாடல் மட்டும் மிரட்டல். திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் அப்ளாஸ் அள்ளுகின்றன. மனிதரின் கடுமையான உழைப்பு ஏழு சண்டைக் காட்சிகளிலும் தெறிக்கிறது. துரைராஜின் கலை இயக்கத்தில் அடிமுறைக் கலையைக் கற்பதற்கான கூடம் நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரகாஷ் மப்பு தொய்வைச் சரிசெய்ய சில காட்சிகளுக்குக் கத்தரி போட்டிருக்கலாம்.

''நமக்கு எது நல்லதுங்கிறது நம்ம மண்ணுக்குத்தான் தெரியும், அந்த மண்ணோட ஈரத்தைக் காயாம காப்பாத்தி அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோய் சேர்க்குறது நம்ம கடமை இல்லையா'', ''பேருக்குப் பின்னாடி அப்பன் பேர் போட்டுக்கிறது மட்டும் புள்ளைக்குப் பெருமை இல்லடா... அந்தப் பேர காப்பாத்துற மாதிரி நடந்துக்கணும்'' போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

தற்காப்புக் கலையின் தாய்க் கலை, கராத்தே, ஜூடோ, பாக்ஸிங் கலைகளுக்கு முன்னோடி என அடிமுறைக் கலை குறித்து படத்தில் சொல்லப்படும் விஷயங்கள் பாராட்டுக்குரியவை. தமிழர் கலாச்சாரம், நாகரிகப் போர்வையில் மண்ணின் கலையை மறக்கக்கூடாது என்ற கருத்துகள் மதிக்கத்தக்கவை. குத்துச்சண்டை, கராத்தே, ஜூடோவை மையப்படுத்தி பல படங்கள் வரும் நிலையில் தமிழர்களின் வீரக் கலையான அடிமுறைக் கலைக்காக ஒரு படம் எடுத்திருக்கும் நோக்கமும் சிறந்தது.

ஆனால், அதற்காக எல்லோரும் அடித்துத் தேய்த்து ரீல் அறுந்த கதையை இப்போதும் அதே பாணியில் எடுத்திருப்பதுதான் பலவீனம். படத்தில் எந்தப் புதுமையும், வித்தியாசமும் இல்லாதது பெருங்குறை. சுவாரஸ்யமான காட்சிகள் மூலம் நகர்த்தாமல் வழக்கமான டெம்ப்ளேட்டில் திணறத் திணற திரைக்கதையை நகர்த்திய விதம் அலுப்பை வரவழைக்கிறது. திருடனாக இருக்கும் சக்தி திடீரென்று அம்மாவைக் காப்பாற்றுவதற்காக அடிமுறைக் கலையைப் பிரயோகிப்பது அநியாயத்துக்கு செயற்கையாக இருக்கிறது. நவீன் சந்திராவின் மகன் திடீரென்று போட்டியில் இருந்து தானாக விலகுவதெல்லாம் நம்பும்படியாக இல்லை.

இரட்டை வேடங்களில் தனுஷ் இன்னும் நிறைவான படத்தைக் கொடுக்கவில்லை. பழிக்குப் பழி என்று இறங்காமல் வன்முறையைக் கையில் எடுக்காமல் புத்திசாலித்தனமாக நாயகன் நடந்துகொண்டது மட்டும் ஆறுதல். மொத்தத்தில் மசாலா ஃபார்முலாவில் 'பட்டாஸ்' பற்றி எரிந்ததே தவிர வெடிக்கவில்லை.

முதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ்

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/535035-pattas-movie-review.html

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

18 mins ago

சினிமா

49 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்