முதல் பார்வை: இருட்டு

By உதிரன்

ஒரு மலைக் கிராமத்தில் நடக்கும் மர்மங்களைக் கண்டுபிடிக்கும் இன்ஸ்பெக்டரின் கதையே 'இருட்டு'.

சிகாபுரா ஹள்ளி என்ற மலைக் கிராமத்தில் பகல் நேரத்தில் திடீரென இருள் சூழ்கிறது. திடீரென ஆறு பேர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். இதனைக் கண்டுபிடிக்க மூளையைக் கசக்கிப் பிழியும் இன்ஸ்பெக்டர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்கிறார். இந்நிலையில் அந்த ஊருக்கு இன்ஸ்பெக்டராக சுந்தர்.சி.வருகிறார். ஊருக்குள் நுழையும்போதே ஒரு காக்கை அவரின் குடும்பத்தை அச்சுறுத்துகிறது. ஆனாலும் அவர்கள் அசராமல் அந்த ஊரில் தங்குகிறார்கள். காக்கைகள் ஒன்றாகப் படையெடுத்து வந்து சுந்தர்.சி.யின் வீட்டை முற்றுகையிடுகின்றன. அதிலும் அக்குடும்பம் அலறினாலும் ஊரை விட்டுப் போகவில்லை.

இந்நிலையில் சுந்தர்.சி.யின் மனைவி உருவம் வழியாக ஒரு மாய விளையாட்டு நடைபெறுகிறது. மகள் மூலம் பேராபத்துக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. சந்தேகப்படும்படியாக நடந்துகொண்ட மவுலியார் என்ற மாந்திரீகரும் கொல்லப்படுகிறார். இந்த சூழலில் இந்த மர்மக் கொலைகளுக்கு யார் காரணம், சுந்தர்.சி. தன் குடும்பத்தைக் காப்பாற்றினாரா, அவர் மகளுக்கு நேர்ந்த கதி என்ன, இன்ஸ்பெக்டராக சுந்தர்.சி. எவ்வாறு மூளையாக இயங்கினார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

பேய் சினிமா என்றாலே வீடு, அரண்மனை, விடுதி என்றே இருக்கும் என்ற வழக்கமான ஃபார்முலாவை உடைத்து புதிதாக யோசித்திருக்கிறார் இயக்குநர் வி.இஸட்.துரை.

படத்தின் ஹீரோ, இன்ஸ்பெக்டர் கேரக்டர் என்பதற்காக சுந்தர்.சி. அலட்டிக்கொள்ளவே இல்லை. உடல் மொழி, குரல் மொழி, போலீஸுக்கு உண்டான மிடுக்கு பற்றியும் கவலைப்படவில்லை. இயல்பான மனிதராகவே அளவாக நடித்துச் செல்கிறார். மனைவியைக் கொஞ்சுவது, உடன் இருக்கும் விடிவி கணேஷுக்கு பீதியை ஏற்படுத்துவது, தன்னைச் சுற்றி நடக்கும் மர்மங்களைப் புரிந்துகொள்ள முயல்வது, உண்மையைத் தேடிச் செல்வது என கதாபாத்திரத்துக்குரிய வேலையைச் சரியாகச் செய்கிறார். தன் குழந்தைக்கு நடக்கும் விபரீதங்களைக் கண்டு பயப்படாமல் சாதாரணமாகவே இருப்பதுதான் உறுத்தல். எந்த அதிர்ச்சியையும் அவர் முகத்தில் கூட காட்டாதது நெருடல்.

சாக்‌ஷி சவுத்ரிக்கு நடிப்பதற்கு வாய்ப்பில்லை. கவர்ச்சிப் பதுமையாக வந்து போகிறார். குழந்தை தியா சக்திக்கு மீறி சத்தம் போட்டுள்ளார். விமலா ராமனா இது என்று போட்டி வைத்து கண்டுபிடிக்க வேண்டிய நிர்பந்தம். சாய் தன்ஷிகா மிரட்டுவார் என்று எதிர்பார்த்தால், விழிகளை மட்டும் ஆக்ரோஷமாக உருட்டி சும்மா நடந்து போகிறார். ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமியும், ஒலி வடிவமைப்பாளரும் வேறு வழியில்லாமல் ரொம்பவே சிரமப்பட்டு காட்சிகளை ஒப்பேற்றி இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

விடிவி கணேஷ் சில இடங்களில் கலகலப்பு கூட்டுகிறார். யோகி பாபு ஒரு காட்சியில் மட்டும் வந்து காணாமல் போகிறார். வழக்கம்போல ராஜசிம்மன் கதாபாத்திரம் எதையும் செய்யாமல் குறியீடாகக் கடந்து போகிறது.

க்ரிஷின் இசையில் ஒரே பாடல் அவ்வளவு சீக்கிரம் முடிந்து நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. மேக்கிங்கில் பயத்தையும் பதற்றத்தையும் கூட்டி அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்ற விதத்தில் கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு, க்ரிஷின் இசை, ஒலி வடிவமைப்பாளரின் பங்களிப்பை பாராட்டியே ஆக வேண்டும்.

பயந்து நடுங்கும் பேய் படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதில் வி.இஸட். தீயாய் வேலை செய்திருக்கிறார். கோரைப் புல், கண்ணாடித் தொட்டி மீன், கறையான், பாம்பு, நாய் என ஓரறிவு முதல் ஐந்தறிவு உள்ள உயிரினங்கள் வரை திரைக்கதைக்குள் புகுத்தியிருக்கும் ஐடியா செம்ம. மனிதர்களின் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து வாழும், தேவைப்பட்டால் உருமாற்றம் அடையும் ஜின்களைப் பற்றி சொன்ன விதத்தில் சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார். ஆனால், அதற்கான பின்னணியில் அழுத்தம் இல்லை.

கதைக்குள் செல்லாமலேயே பயப்படுவதற்காகவே காட்சிகளை அடுத்தடுத்து வைத்து முதல் பாதி வரை நகர்த்தி இருப்பது மெச்சும்படி இல்லை. தன்னைப் போன்றே பேசும் ஒருவரால் நடக்கும் ஆபத்தைக் கண்கூடாகப் பார்த்த பிறகும் அதைக் கணவனிடம் சொல்லாமல் சாக்‌ஷி தவிர்ப்பது ஏன்? பிரச்சினைகள் தொடர்ந்து நடக்க சுந்தர்.சி. மட்டும் ரொமான்ஸுக்கு முக்கியத்துவம் தருவது ஏன்? அந்த ஊர் மக்களை கண் துடைப்புக்காக வேடிக்கை பார்ப்பவர்களாக ஒரே காட்சியில் மட்டும் காட்டுவதும் நம்பகத்தன்மையுடன் இல்லை.

சில இடங்களில் ஹாலிவுட் படங்களின் காட்சிகளை அச்சரம் பிசகாமல் எடுத்தாண்டிருக்கிறார். மர்ம முடிச்சு அவிழ்ந்த பிறகு காட்சிகள் ஆட்டம் காண்கின்றன. கதாபாத்திர உருவாக்கத்தில் கவனம் செலுத்தி, திரைக்கதையில் தீவிரம் காட்டியிருந்தால் இருட்டு இன்னும் அதிர வைத்திருக்கும். ஆனாலும், வித்தியாசமான அனுபவத்துக்காக இந்த இருட்டில் நீங்களும் கொஞ்ச நேரம் பயணிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

34 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

மேலும்