வி.ராம்ஜி
எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இரண்டு படங்களில் இணைந்து நடித்தார்கள். அதேவருடத்தில், சிவாஜியும் ஜெயலலிதாவும் நான்கு படங்களில் நடித்தார்கள். இதில் மூன்று படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
1972-ம் ஆண்டில், சிவாஜிகணேசன் மொத்தம் ஏழு படங்களில் நடித்தார். ஞான ஒளி, தர்மம் எங்கே, தவப்புதல்வன், நீதி, பட்டிக்காடா பட்டணமா, ராஜா, வசந்தமாளிகை என்று ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு விதம். அவரின் வித்தியாசமான நடிப்புக்குத் தீனி போடும் வகையில் படங்கள் அமைந்தன.
72-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ம் தேதி ‘ஞான ஒளி’ வெளியானது. பூண்டி மாதாகோயிலில் மணி அடிப்பவராக, பாதிரியாரின் வளர்ப்பில் வளர்ந்தவராக, முரட்டுத்தனம் கொண்டவராக, ஆன்டனியாக நடித்திருந்தார் சிவாஜி. இவரின் பால்ய நண்பனாக, எதையும் பகுத்தறிந்து பார்ப்பவராக, போலீஸ் இன்ஸ்பெக்டராக, லாரன்ஸாக நடித்திருந்தார் மேஜர் சுந்தர்ராஜன். இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருந்தனர். வியட்நாம் வீடு சுந்தரம் கதை வசனம் எழுத, பி.மாதவன் இயக்கினார். எம்.எஸ்.வி.யின் இசையில் பாடல்கள் செம ரகம். ‘தேவனே என்னைப் பாருங்கள்’, ‘அம்மாக்கண்ணு சும்மா சொல்லு ஆசை இல்லையோ’ என்ற பாடல்கள் இன்றைக்கும் மறக்கமுடியாதவை. சிவாஜிக்கு பெயர் தந்த படம். வசூலிலும் அசத்திய படம். ரசிகர்களால் மறக்க முடியாத படம்.
அடுத்து, மே மாதம் 6-ம் தேதி, சிவாஜியின் ‘பட்டிக்காடா பட்டணமா’ வெளியானது. ‘ஞானஒளி’ ஆன்டனி எப்படியோ... அதேபோல் ‘சோழவந்தான் மூக்கையா தேவர்’ பிரபலாமானார். இந்தப் படத்தையும் பி.மாதவன் இயக்கினார். எம்.எஸ்.வி. இசை. எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட். கிராமம் - நகரம், பண்பாடு - நாகரீகம் என வித்தியாசப் பாகுபாடுகளுடன் இருக்கிறவர்கள் கல்யாணம் பண்ணிக்கொண்டால், அதையடுத்துப் பிரிந்தால், எப்படிச் சேருகிறார்கள் என்பதை காமெடியாகவும் கொஞ்சம் சீரியஸ் கலந்தும் சொல்லியது படம். ‘என்னடி ராக்கம்மா’, ‘கேட்டுக்கோடி உருமிமேளம்’, ‘நல்வாழ்த்து நான் சொல்லுவேன்’, ‘அம்பிகையே ஈஸ்வரியே’ என்று எல்லாப் பாடல்களும் அதிரிபுதிரி ஹிட்டாகின. இருந்தாலும் ‘என்னடி ராக்கம்மா’ பாட்டு, இன்றைக்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதில் சிவாஜிக்கு ஜெயலலிதா ஜோடி.
இதன் பின்னர், ஜூலை மாதம் 11-ம் தேதி ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில், ‘தர்மம் எங்கே’ படத்தில் நடித்தார் சிவாஜி. இதிலும் ஜோடி ஜெயலலிதா. முத்துராமன், நம்பியார் உட்பட பலரும் நடித்திருந்தார்கள். புரட்சி, விடுதலை என்றெல்லாம் பேசிய இந்தப்படம் சுமாராகத்தான் ஓடியது.
ஆகஸ்ட் 26-ம் தேதி, முக்தா சீனிவாசன் இயக்கத்தில், சிவாஜி நடித்த ‘தவப்புதல்வன்’ வெளியானது. மாலைக்கண் நோயுள்ளவராக சிவாஜி நடித்திருந்தார். கே.ஆர்.விஜயா ஜோடி. எம்.எஸ்.விஸ்வநாதன் இசை. பாட்டெல்லாம் பிரமாதம். ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’, ‘கிண்கிணிக்கிணிக்கிணி மாதாக் கோயில் மணியோசை’ என்ற பாடல்களை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை.
செப்டம்பர் 26-ம் தேதி, சிவாஜி ரசிகர்களுக்கு அடித்தது ஜாக்பாட். கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கத்தில், ராமாநாயுடு தயாரிப்பில், வாணிஸ்ரீ, பாலாஜி, நாகேஷ், சிஐடி சகுந்தலா என பலரும் நடித்திருந்தனர். சிவாஜி நடித்த அந்தப் படம் இன்றைக்கு தியேட்டருக்கு வந்தாலும் ஹவுஸ்புல் தான்! அது... ‘வசந்த மாளிகை’. கலர் படம். பாட்டுக்காகவே பார்க்கலாம். கண்ணதாசன் பாடல்கள். இசைக்காகவே பார்க்கலாம்.
கே.வி.மகாதேவன் இசை. வசனத்துக்காகவே பார்க்கலாம். பாலமுருகன் வசனம் எழுதியிருப்பார். எல்லாவற்றுக்கும் மேலாக சிவாஜியின் ஸ்டைல் கலந்த நடிப்பு. படத்தில் எத்தனை பாடல்கள் என்பதும் பாட்டு வரிகள் என்னென்ன என்பதும் ரசிகர்களுக்கு அத்துப்படி. அதேபோல், படத்தின் பிரமாண்டமான வெற்றியும் சரித்திரம்.
இதன் பின்னர், டிசம்பர் மாதம் 7-ம் தேதி கே.பாலாஜியின் தயாரிப்பில் ‘நீதி’ வெளியானது. சி.வி.ராஜேந்திரன் இயக்கினார். ஜெயலலிதா, செளகார் ஜானகி உள்ளிட்டோர் நடித்தனர். எம்.எஸ்.வி. இசை. இந்தப் படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட். முக்கியமாக, ‘நாளை முதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம்’ பாடலை, இன்றைய குடிமகன்களும் மற்றவர்களும் மறக்கவே இல்லை.
முன்னதாக, ஜனவரி 26-ம் தேதி சிவாஜி நடித்த ‘ராஜா’ படம் வெளியானது. இந்தப் படத்தையும் சி.வி.ராஜேந்திரனே இயக்கியிருந்தார். ஜெயலலிதா நாயகி. எம்.எஸ்.வி. இசை. ஜனவரி 26-ம் தேதி படம் ரிலீஸ் என்றதுமே, படத்தின் தயாரிப்பாளர் கே.பாலாஜி என்று சட்டென்று தெரிந்திருக்கும் உங்களுக்கு.
ஆக, கே.பாலாஜிக்கு ‘நீதி’, ‘ராஜா’ என்று இரண்டு படங்கள். ‘பட்டிக்காடா பட்டணமா’, ’ஞான ஒளி’ என பி.மாதவனுக்கு இரண்டு படங்கள். முக்தா சீனிவாசன், ஏ.சி.திருலோகசந்தர், கே.எஸ்.பிரகாஷ்ராவ் ஆகியோருக்கு தலா ஒரு படம். மொத்தம் ஏழு படங்கள். இதில் ‘நீதி’, ‘ராஜா’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘தர்மம் எங்கே’ என்று நான்கு படங்களில் ஜெயலலிதா சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார்.
இந்த ஏழு படங்களை ‘வசந்தமாளிகை’, ‘ஞான ஒளி’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘ராஜா’, ‘தவப்புதல்வன்’, ‘நீதி’, ‘தர்மம் எங்கே’ என்று சிறந்த படம், வசூல் படம், வெற்றிப்படம், நல்ல படம் என்றெல்லாம் இப்படியாக வரிசைப்படுத்தலாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago