தன் சொந்த மண்ணில் காப்பர் தொழிற்சாலை உருவாவதைத் தடுக்கப் போராடும் இளைஞனின் கதையே 'சங்கத்தமிழன்'.
தேனி மாவட்டம் மருதமங்கலத்தில் எந்தப் பிரச்சினை நடந்தாலும் அப்பா தேவராஜும் (நாசர்) மகன் தமிழும் (விஜய் சேதுபதி) தீர்த்து வைக்கிறார்கள். அந்த ஊர் எம்எல்ஏ குழந்தைவேலு (அசுதோஷ் ராணா) கார்ப்பரேட் முதலாளி சஞ்சயின் (ரவி கிஷன்) கைப்பாவையாகச் செயல்படுகிறார். காப்பர் தொழிற்சாலையை உருவாக்குவதற்கான எல்லா வேலைகளையும் குழந்தைவேலு செய்கிறார். இதைத் தடுக்க நினைக்கும் தேவராஜ் தன் நண்பன் குழந்தைவேலுவை எதிர்த்து தேர்தலில் வென்று எம்எல்ஏ ஆகிறார். இதைப் பொறுத்துக்கொள்ளாத குழந்தைவேலு தேவராஜின் குடும்பத்தை அழிக்கிறார்.
ரவி கிஷன் மகள் கமாலினி (ராஷி கண்ணா) சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் படிக்கிறார். அவர் போட்டோகிராபியில் நிபுணத்துவம் பெறும் முனைப்பில் ஹவுசிங் போர்டு மக்களின் வாழ்வியலை தன் கேமராவுக்குள் பதிவு செய்கிறார். அதற்கு முருகன் (விஜய் சேதுபதி) உதவுகிறார். இவர்கள் இருவருக்குள்ளும் காதல் முளைக்கிறது. இதைத் தெரிந்துகொண்ட ரவி கிஷன், தன் மகளின் காதலன் யார் என்று விசாரிக்கிறார். முருகனை தேனியில் சங்கத்தமிழனைப் போல நடிக்கச் சொல்கிறார். காப்பர் தொழிற்சாலையை உருவாக்க ஊர் மக்களின் சம்மதம் பெற்றுத்தந்தால் அதற்கு ரூ.10 கோடி பணம் தருவதாக பேரமும் பேசுகிறார். சினிமாவில் நடிப்பதையே லட்சியமாகக் கொண்ட முருகன், ரவி கிஷனின் சதித் திட்டத்தை நிறைவேற்ற ஒப்புக்கொள்கிறார்.
முருகனாக இருக்கும் விஜய் சேதுபதி ஏன் சங்கத்தமிழனாக நடிக்க ஒப்புக்கொள்கிறார், காப்பர் தொழிற்சாலை மருதமங்கலத்தில் உருவானதா, சங்கத்தமிழனும் முருகனும் என்ன ஆனார்கள், தமிழையே நம்பியிருக்கும் மருதமங்கல மக்களின் நிலை என்ன போன்ற கேள்விகளுக்கு அலுப்பூட்டும் டெம்ப்ளேட் பாணியில் பதில் சொல்கிறது திரைக்கதை.
தரை லோக்கல் கமர்ஷியல் படம் இயக்க வேண்டும் என்று முடிவு பண்ணி இறங்கினாரா அல்லது இறங்கி அடித்து முடிவுக்கு வந்தாரா என்பது இயக்குநர் விஜய் சந்தருக்கே வெளிச்சம். காதைக் கிழிக்கும் மாஸ் பன்ச் வசனங்கள் படத்துக்குப் பொருந்தாமல் இடைச்செருகலாகவே வந்து போகின்றன. ஸ்லோமோஷன் காட்சிகள் வெற்று பில்டப்பாக வீணடிக்கப்பட்டுள்ளன.
சங்கத்தமிழன், முருகன் என்று இருவிதப் பரிமாணங்களில் விஜய் சேதுபதி ஹீரோயிஸத்தை நிறுவுகிறார். களத்துக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் நாயகனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதால், களம் பாழாகிறது. ஹீரோயிஸமும் அதீத அளவில் துருத்திக்கொண்டு நிற்கிறது. கோபமும் ஆவேசமுமான சங்கத்தமிழனாக தன்னை முன்னிறுத்தும் விஜய் சேதுபதி, ஜாலியான, புத்திசாலித்தனமான முருகனாகவும் ஸ்கோர் செய்கிறார். உடல் மொழி, குரல் மொழி என இரண்டிலும் போதுமான நடிப்பைக் கொடுத்துள்ளார். எனக்கு டான்ஸ் வராது என்று சொல்லியே அவர் ஆடும் நடனத்தை ரசிக்க முடியவில்லை. உடல் எடை விஷயத்தில் விஜய் சேதுபதி கறாராக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
ராஷி கண்ணாவுக்கு படத்தில் பெரிய வேலையில்லை. வழக்கமான வில்லனின் மகளாக வந்து நாயகனின் மனம் கவர் காதலியாக வந்து தாராளம் காட்டுகிறார். அவர் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. நிவேதா பெத்துராஜ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கிறார். அவர் கதாபாத்திரத்திலும் கனம் இல்லை. நகைச்சுவைக்காக சூரி உள்ளார். ஆனால், அவர் பேசி முடிக்கும் முன்பே காட்சி வேறு இடத்துக்குத் தாவுகிறது.
நாசர், ஸ்ரீரஞ்சனி, மாரிமுத்து, கல்லூரி வினோத், லல்லு, ஸ்ரீமன் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள். அசுதோஷ் ராணா எந்த வித்தியாசமும் காட்டாத பழக்கமான வில்லனாகவே நடித்துள்ளார். ரவி கிஷன் எந்த அதிர்வையும் ஏற்படுத்தாமல் கடந்து செல்கிறார். மைம் கோபி க்ளிஷே கதாபாத்திரத்தில் தன் இருப்பைப் பதிவு செய்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய் ஆகியோர் சம்பிரதாயமாக வந்து போகிறார்கள்.
வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம். விவேக்- மெர்வின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இல்லை. பின்னணி இசையும் களத்துக்கான ஒத்துழைப்பை நல்கவில்லை. இயக்குநரின் ஒத்துழைப்புடன் பிரவீன் கே.எல். பாடல்களில் கத்தரி போட்டு நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். அனல் அரசுவின் சண்டைக் காட்சிகள் மட்டும் கமர்ஷியல் அம்சத்துக்காக முட்டுக் கொடுத்து உதவுகின்றன.
லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று விஜய் சந்தரிடம் கேட்க வேண்டிய நிலை. இஷ்டத்துக்கும் திரைக்கதையை இழுத்திருக்கிறார். அதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. ரசிகர்கள் ஊகிக்கக்கூடிய காட்சிகள் அச்சரம் பிசகாமல் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கின்றன. மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் ஒரு தொழிற்சாலையை உருவாக்க ஒரு எம்எல்ஏவை மட்டும் நம்பி இருப்பாரா, எம்எல்ஏ இல்லாமல் மருதமங்கலம் ஊருக்கு அடிப்படை வசதிகள் அனைத்தையும் தனி மனிதரால் தடுக்க முடியுமா, ரேஷன் கடையில் போதிய பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படுவதில்லையா, தலைவனை இழந்த ஓர் ஊர் எந்த முன்னேற்றத்தையும் அடையாமல் அப்படியே இருக்குமா போன்ற பல கேள்விகள் எழுகின்றன. அதற்கான பதில்களில் நம்பகத்தனமை துளியும் இல்லை என்பதுதான் படத்தின் பலவீனம்.
''மேல எப்படி வந்தன்னு கீழ இருக்குறவங்ககிட்ட கேளுடா, மேல வந்தவன்கிட்ட கேட்குற'', ''நீங்க வேணும்னா ஏரியாவுல க்ளாஸா, பாஸா சுத்தலாம். என் மாஸ் என்னன்னு தெரியாதுல'', ''ஒருத்தன் வரணும்னு ஆண்டவன் முடிவு பண்ணிட்டான்னு வெச்சுக்கோயேன்... நீ என்னதான் கேட்டை சாத்தி தாழ்ப்பாள் இழுத்து பூட்டு போட்டாலும் பூட்டு லாக் ஆவாது, ஏன்னா சாவி அவன்கிட்ட இருக்கு'' ஆகிய வசனங்கள் மூலம் இயக்குநர் விஜய் சந்தர் மாஸ் கமர்ஷியல் படம் என்பதை நிறுவ முயல்கிறார். ஆங்காங்கே இப்படி இடையில் செருகப்பட்ட வசனங்களில் காட்டிய மெனக்கெடலை படம் முழுக்கக் காட்டியிருந்தால் 'சங்கத்தமிழன்' காலம் கடந்தும் பேசப்பட்டிருப்பான்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago