இம்மாதம் முடிவடைகிறது தூங்காவனம் படப்பிடிப்பு?

ராஜேஷ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் முடிவடையும் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

'உத்தம வில்லன்' படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் தன்னிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா, பிரகாஷ்ராஜ், யூகி சேது, ஆஷா சரத், மதுஷாலினி உள்ளிட்ட பலர் கமலுடன் நடித்து வருகிறார்கள்.

'தூங்காவனம்' எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.

”ஈ.சி.ஆரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பிரம்மாண்டமான அரங்கில் தற்போது 'தூங்காவனம்' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பாதிக்கும் மேற்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இம்மாதம் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

'தூங்காவனம்' ப்ரெஞ்ச் படமான 'ஸ்லீப்லஸ் நைட்' படத்தின் ரீமேக் ஆகும். கமல், த்ரிஷா இருவரும் போலீஸ் அதிகாரிகளாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் கதை முழுக்க ஒரே இரவில் ஒரு பப்பில் (PUB) நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE