வி.ராம்ஜி
தமிழ் சினிமாவில், எடுத்த எடுப்பிலேயே ஹீரோவாக நடித்து, பிறகு வில்லனான நடிகர்கள் உண்டு. அதேபோல், வில்லனாக அறிமுகமாகி, பிறகு ஹீரோவான நடிகர்கள் உண்டு. செகண்ட் ஹீரோ போல் பல படங்களில் நடித்துக்கொண்டிருப்பார்கள். பிறகு, ஹீரோவாகிவிடுவார்கள். அல்லது வில்லனாக நடிக்கத் தொடங்குவார்கள். இப்படியானவர்களும் உண்டு.
கதாநாயகனாக ஜெய்சங்கர் கலக்கியதும் தெரியும். பிறகு ‘முரட்டுக்காளை’ படத்தில் இருந்து வில்லனாக நடித்ததையும் ரசித்தோம். விஜயகுமாரும் அப்படித்தான். பிறகு குணச்சித்திர கேரக்டரில் இருவருமே ஜொலித்தார்கள்.
இயக்குநர் ஸ்ரீதரால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘காதலிக்க நேரமில்லை’ ரவிச்சந்திரன், பின்னாளில், ‘ஊமைவிழிகள்’ படத்தில் வில்லனாக நடித்தார். ‘அலைகள் ஓய்வதில்லை’ கார்த்திக், பிறகு வில்லனாக நடித்ததையும் பார்த்தோம். ரஜினியே கூட ஆரம்பத்தில் வில்லனாகத்தான் நடித்தார். சத்யராஜின் வில்லத்தனம், மிகப்பெரிய ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்தது.
இப்படியான சூழல்கள் கொண்ட திரையுலகில், கே.பாக்யராஜின் திரை வாழ்வில் நடந்தது சுவாரஸ்யங்கள் நிறைந்ததுதான்.
இயக்குநர் பாரதிராஜாவுக்கு முதல் படம் ‘16 வயதினிலே’. உதவி இயக்குநராக பாக்யராஜுக்கும் இதுவே முதல் படம். இதைத்தொடர்ந்து ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ என பாரதிராஜாவின் படங்களில், உதவி இயக்குநராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார் பாக்யராஜ்.
இதன் பின்னர், தாமே படத்தை இயக்குவது என தீர்மானித்த பாக்யராஜ், அதற்கான வேலைகளில் இறங்கினார். அந்த சமயத்தில், பாரதிராஜாவின் ‘புதிய வார்ப்புகள்’ படத்துக்கு வசனம் எழுதிக்கொடுத்திருந்தார் பாக்யராஜ். அப்போது திடீரென ‘புதிய வார்ப்புகள்’ படத்தின் கதாநாயகனாக பாக்யராஜை தேர்வு செய்து, ‘இந்த வாத்தியார் கேரக்டர்ருக்கு நீதான் சரியா இருப்பே. அதனால நீதான் நடிக்கணும்’ என்று பாரதிராஜா சொன்னதும் பாக்யராஜால் தட்டமுடியவில்லை.
அதுவரை பாக்யராஜுக்கு நடிக்கவேண்டும் என்கிற ஆசை ஏதுமில்லை. தான் ஒரு எழுத்தாளர், ரைட்டர், டைரக்டர் என்பதாகத்தான் நினைத்து செயல்பட்டேன் என்கிறார் பாக்யராஜ். ‘உங்க குருநாதர் படத்து வேலையெல்லாம் முடிச்சிட்டு வா. அப்புறமா, நம்ம படத்தை நீ டைரக்ட் பண்ணலாம். பரவாயில்ல’ என்று ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தின் தயாரிப்பாளர் உறுதி கொடுக்க, பாக்யராஜ், ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் ஹீரோவாக நடித்தார்.
1979ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 14ம் தேதி, தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகி, வெள்ளிவிழாப் படமாக அமைந்தது ‘புதிய வார்ப்புகள்’.
இதன் பிறகு, மீண்டும் தான் இயக்குகிற ‘சுவரில்லாத சித்திரங்கள்’ பட வேலைகளில் இறங்கினார் பாக்யராஜ்.
இந்த சமயத்தில், இன்னொரு விஷயம் நடந்தது. இயக்குநர் பி.வி.பாலகுரு மீது பாக்யராஜுக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. ‘ஏன்னா, பாலகுரு அண்ணன்தான் எங்க டைரக்டர் சார்கிட்ட என்னை சேர்த்துவிட்டார்’ என்று நன்றியுணர்வுடன் சொல்கிறார் பாக்யராஜ்.
‘16 வயதினிலே’ படத்தின் தயாரிப்பாளரான அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு, ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தை எடுத்தார். இதையடுத்து பாலகுரு அண்ணனுக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு தந்தார். அந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனமெல்லாம் எழுதிக் கொடுத்துவிட்டுத்தான், என்னுடைய ‘சுவரில்லாத சித்திரங்கள்’ பட வேலையில் இறங்கினேன்.
அப்போது ஒருநாள், பாலகுரு அண்ணன் என்னை அழைத்தார். ‘இந்தப் படத்துல அந்த வில்லன் கேரக்டருக்கு யாரும் சரியா வரலை. நீயே பண்ணிரு. கேமிராமேனும் நீ நடிப்பு சொல்லிக் கொடுத்ததைப் பாத்தாராம். அவரே பண்ணினா, நல்லாருக்கும்னு சொன்னாரு’ என்று சொல்ல, நான் இதை என்னுடைய தயாரிப்பாளரிடம் சொன்னேன்’’ என்கிறார் பாக்யராஜ்.
ஏற்கெனவே, ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் ஹீரோவாக நடிப்பதால், ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படவேலைகள் தள்ளிப்போயின. அதற்கு தயாரிப்பாளர் ஒத்துக்கொண்டார். இப்போது, பி.வி.பாலகுரு இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘கன்னிப்பருவத்திலே’ படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்கவேண்டும் என்கிற நிலையில், ’சுவரில்லாத சித்திரங்கள்’ தயாரிப்பாளர் என்ன சொன்னார்?
‘சரி... பரவாயில்ல. நீதான் நடிக்கணும்னு அவங்க எல்லாரும் ஆசைப்படுறாங்க. அதனால, இந்தப் படத்தையும் முடிச்சிட்டு வா. எந்த டிஸ்டர்ப்பும் இல்லாம, நம்ம பட வேலைல இறங்குவோம்’ என்று தயாரிப்பாளர் சொல்ல, பாக்யராஜ் நிம்மதியும் நிறைவுமாக, நன்றி செலுத்துவதற்கு கிடைத்த வாய்ப்பாக, ‘கன்னிப்பருவத்திலே’ படத்தில் வில்லனாக, துரோகம் செய்யும் நண்பனாக, சீனு எனும் கதாபாத்திரத்தில் நடித்தார்.
1979ம் ஆண்டு, செப்டம்பர் 21ம் தேதி, ‘கன்னிப்பருவத்திலே’ வெளியானது. அதாவது, ஏப்ரல் மாதம் ரிலீசான படத்தில் பாக்யராஜ் ஹீரோ. ஐந்து மாதம் கழித்து, செப்டம்பர் மாதம் வெளியான ‘கன்னிப்பருவத்திலே’ படத்தில் பாக்யராஜ் வில்லன்.
இதன் பிறகுதான், பாக்யராஜ் இயக்கிய முதல் படம் ‘சுவரில்லாத சித்திரங்கள்’ வெளியானது. இதில் சுதாகர்தான் ஹீரோ. பாக்யராஜ் செகண்ட் ஹீரோ. இத்தனைக்கும், படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே பாக்யராஜ்தான். ஆனாலும் நாயகனாக சுதாகர் நடித்தால் நன்றாக இருக்கவேண்டும், நாம் செகண்ட் ஹீரோ கேரக்டர் பண்ணினால் நன்றாக இருக்கும் என முடிவு செய்தார் பாக்யராஜ். அதன்படியே நடிக்கவைத்தார். நடிக்கவும் செய்தார்.
ஏப்ரலில் ரிலீசான ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் ஹீரோ. செப்டம்பரில் வெளியான ‘கன்னிப்பருவத்திலே’ படத்தில் வில்லன். நவம்பரில் ரிலீசான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் பாக்யராஜ் செகண்ட் ஹீரோ. ஆறு மாதங்களுக்குள் மூன்று விதமான நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமாகி, மூன்று படங்களிலும் ஹிட்டடித்தார் பாக்யராஜ். அடுத்து, இயக்குநராகவும் வெற்றிபெற்றார்.
பாக்யராஜ் திரையுலகிற்கு வந்து 40 ஆண்டுகளாகின்றன.
இதையொட்டி அவர் ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு அளித்த சிறப்பு வீடியோ பேட்டி:
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago