’பார்த்த ஞாபகம் இல்லையோ..’ -  ‘புதிய பறவை’க்கு  55 வயது

By செய்திப்பிரிவு


வி.ராம்ஜி


ஒரு படத்தை முதல் முறை பார்ப்பதற்கும் மூன்றாவது நான்காவது முறை பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கும்தானே. முதல் முறை பார்க்கும்போது இருந்த அந்த படபடப்பும் பரபரப்பும் அடுத்தடுத்துப் பார்க்கும் போது, கொஞ்சம்கொஞ்சமாகக் குறையும்தானே. ஆனால், மூன்றுநான்கு முறை அல்ல... முப்பது நாற்பது முறை பார்த்தாலும், முதன்முதலில் பார்த்த, பார்க்கிற அதேவிறுவிறு, சுறுசுறு .. ஆச்சரிய அனுபவங்கள்... இவையெல்லாம் தெரிந்துதான் அந்தப் படத்துக்கு அப்படியொரு பெயரை வைத்தார்களோ என்னவோ..! அந்தப் படத்தின் பெயர்... ‘புதிய பறவை’.


சிங்கப்பூரிலும் ஊட்டியிலும் வியாபாரம் செய்து வரும் மிகப்பெரிய தொழிலதிபர் கோபால் (சிவாஜி). அவர் கப்பலில் வரும் போது, அதில் லதா (சரோஜாதேவி)வையும் அவரின் தந்தை விகே.ராமசாமியையும் பார்க்கிறார். இருவரும் அறிமுகமாகிக் கொள்கிறார்கள். பிறகு, இந்தியா வந்ததும் சிவாஜியின் வீட்டுக்கு வருகிறார்கள். தங்குகிறார்கள்.


அவர்கள் வந்த நாளிலேயே, சிவாஜிக்கு ஒரு மொட்டைபோன் (மொட்டைக்கடுதாசி) வருகிறது. அந்த போனில், சிவாஜியையும் சரோஜாதேவியையும் இணைத்து கிசுகிசுப்பு பேசி, கேலி பண்ணப்படுகிறது. ஆனால் அதைப் பொருட்படுத்தவில்லை சிவாஜி.
அதையடுத்து, சிவாஜியும் சரோஜாதேவியும் ஒருவரையொருவர் புரிந்துகொள்கிறார்கள். ஒருநாள், காரில் செல்லும்போது, ரயில்வே கேட் போடப்பட்டிருக்க, ரயில் சத்தம் கேட்டு, வெலவெலத்துப் போய், வியர்க்க விறுவிறுக்க, படபடப்பாகிறார் சிவாஜி. என்ன என்று சரோஜாதேவி கேட்க, ஏதேதோ காரணம் சொல்லி, சமாளிக்கிறார்.


அந்த சமயத்தில், படம் பார்க்கும் நமக்கு, படத்தின் டைட்டிலில் ஓடி வரும் பெண்ணும் அவளைத் துரத்தி வரும் காரும் நினைவுக்கு வந்துபோகும். அப்போது வரும் ரயிலும், ரத்தவெள்ளத்தில் அவள் பிணமாவதுமாக டைட்டில் முடியும்.


இதுகுறித்த நினைவுகளில் நாம் இருக்கும் போதே, அடுத்தடுத்த போன் மிரட்டல்கள், கேலிகள், நக்கல்கள், நையாண்டிகள் என வந்துகொண்டே இருக்கும். அந்தக் குரல் நமக்கும் நம் தமிழ்திரையுலகிறகும் பரிச்சயமான குரல். ஆமாம்... அது எம்.ஆர்.ராதாவின் குரல்.


ஒருகட்டத்தில், சரோஜாதேவியிடம் உண்மையைச் சொல்லவேண்டிய கட்டாயம் சிவாஜிக்கு. சிங்கப்பூரில், இரவு விடுதியில், பாடகி சித்ராவை (செளகார் ஜானகி) பார்க்கிறார் சிவாஜி. தாயை இழந்து தவித்து வரும் நிலையில், செளகாரின் பாடல், இதம் தருகிறது. பிறகு இருவரும் பதிவுத்திருமணம் செய்துகொள்கின்றனர்.


முதலிரவு. அங்கே செளகார் இன்னும் வரவில்லை. ஒருவழியாக வரும்போது, அவர் சுயநினைவிலேயே இல்லை. குடித்திருக்கிறார். அதைப் பார்த்து, சிவாஜியும் அவர் அப்பாவும் நொந்துபோகின்றனர். இப்படியாகத்தான் ஒவ்வொரு நாள் இரவும் கழிகிறது.
ஒருநாள்... இருவருக்கும் தகராறு. அதில் காரை எடுத்துக்கொண்டு, வேகமாகச் சென்ற செளகார், ரயிலில் அடிபட்டு இறந்து போகிறார் என கதையை முடிக்கிறார் சிவாஜி.


அவர் மீது இன்னும் கரிசனம் காட்டுகிறார் சரோஜாதேவி. சிவாஜிக்கும் சரோஜாதேவிக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. அப்போது, அங்கே எம்.ஆர்.ராதா வருகிறார். வருபவர் சும்மாவா வருகிறார். செளகார் ஜானகியுடன் வருகிறார். அதிர்ந்து போகிறார்கள் எல்லோரும். முக்கியமாக சிவாஜி.


‘நான் உங்கள் மனைவி சித்ரா’ என்கிறார் செளகார் ஜானகி. ‘இல்லை, அவள் இறந்துவிட்டாள்’ என்கிறார் சிவாஜி. அது நிரூபணமாகும் வரை அந்த வீட்டிலேயே இருப்பதாக முடிவு செய்யப்படுகிறது. சிவாஜியின் நண்பரும் இன்ஸ்பெக்டருமான ஓஏகே.தேவர் ஆறுதல் சொல்லுகிறார்.
ஒருபக்கம், முன்னாள் மனைவியான செளகார் சிவாஜியின் எல்லாவிஷயங்களையும் அட்சரம் பிசகாமல் சொல்ல, இன்னொரு பக்கம் சரோஜாதேவியைப் புறக்கணிக்கவும் முடியாமல், மணம் முடிக்கவும் முடியாமல் தத்தளிக்கிறார் சிவாஜி. அவள் சித்ரா இல்லை, என் மனைவி இல்லை என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபிக்க முயன்று தோற்றுப் போகிறார். எல்லா ஆதாரங்களும் அவளுக்கு சாதகமாகவே இருக்க, தவித்து மருகுகிறார் சிவாஜி. இறுதிக்கட்டமாக, மனைவி சித்ராவான செளகாரின் அண்ணன் பைலட் ராம்தாஸ் வந்துசேருகிறார். ஆனால் ‘இதோ... என் தங்கை. அவள் சாகவில்லை’ என்று ராம்தாஸ் சொல்ல... ரேகை உட்பட எல்லாமே சரியாக இருக்கும் நிலையில்... ‘இவள் எப்படி சித்ராவாக இருக்கமுடியும்?’ என்று கேட்கிறார் சிவாஜி.


பிறகு, அங்கே கதையை மீண்டும் தொடருகிறார். அப்போது என்ன நடந்தது, என்ன செய்தார், செளகார் என்ன ஆனார் என்பதையெல்லாம் சொல்லி முடிக்க... ‘இன்ஸ்பெக்டர்... கோபாலின் வாக்குமூலத்தை பதிவுபண்ணிவிட்டீர்கள்தானே. அவரை கைது செய்யுங்கள்’ என்று சரோஜாதேவி சொல்ல, திடுக்கிட்டுப் போகிறார் சிவாஜி.


கடைசியில், சரோஜாதேவி, விகே.ராமசாமி, எம்.ஆர்.ராதா என எல்லோருமே மலேசியா போலீஸ் என்பது தெரியவருகிறது. ஆதாரமே இல்லாத இந்தக் கொலையில், என் மைத்துனர் கோபால் மீது சந்தேகப்படுகிறேன் என ராம்தாஸ் கொடுத்த புகாரில், இந்த ஆக்‌ஷன். இதற்கு, சிவாஜியின் போலீஸ் நண்பர் ஓஏகே.தேவரும் உடந்தை.


கடைசியில், கைது செய்யப்படுகிறார் சிவாஜி. காத்திருக்கிறேன் என்கிறார் சரோஜாதேவி. அத்துடன் முடிகிறது ‘புதிய பறவை’.
படத்தில் என்ன ப்ளஸ் என்று கேட்கமுடியாது. ஏனென்றால், எல்லாமே ப்ளஸ். ராஜ்குமார் மித்ரா என்பவர் எழுதிய ,’சேஷாங்கா’ எனும் கதையின் மூலத்தை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழுக்குத் தக்கபடி ‘புதிய பறவை’யாக்கியிருந்தார் சிவாஜி.


சிவாஜியின் நடிப்பு அபாரம். அதுவும் பல இடங்களில் அவரின் ஸ்டைல் கரவொலி எழுப்பச் செய்யும். சரோஜாதேவி கொள்ளை அழகுடன், மிகச்சிறந்த நடிப்பைத் தந்திருப்பார். வழக்கம் போல், விகே.ராமசாமியும் ஓஏகே.தேவரும் ராம்தாஸும் தங்கள் வேலையை செம்மையாகச் செய்திருப்பார்கள். சமையல் ஜோடி நாகேஷ் - மனோரமாதான், காமெடி ஜோடி. இவர்கள் அடிக்கும் லூட்டி சொல்லிமாளாது.


எப்போதும் போல், எம்.ஆர்.ராதா மிரட்டியெடுத்திருப்பார். அவர் தலையில் உள்ள டர்பனும் சிங்கப்பூர் ஜிலுஜிலு லுங்கியும் ஜிப்பாவும் என கலக்கியிருப்பார். படத்தில் சிவாஜிக்கு இணையாக நடிப்பில் புகுந்து புறப்பட்டாரென்றால், அவர்... செளகார் ஜானகிதான். அழகு, அலட்சியம், ஸ்டைல், பார்வை, சிரிப்பு, நடை என செளகாரை இப்படிப் பார்ப்பதும் நமக்குப் புதிது. ஏன்... அவருக்கே இது புதிதுதான். படம் வெளியான போது வந்த விமர்சனங்களில், சிவாஜிக்கு அடுத்து செளகார் ஜானகியின் நடிப்பைக் கொண்டாடினார்கள். ரசிகர்களும்தான்!


பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். ‘உன்னை ஒன்று கேட்பேன்’, ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’, ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’, ‘ஆஹா மெல்ல நட மெல்ல நட’, ‘எங்கே நிம்மதி’ என்று எல்லாப் பாடல்களும் இன்றைக்கும் இரவுகளின் நீளம் சுருக்கும் செப்படிவித்தைப் பாடல்களாக அமைந்திருக்கின்றன. அதிலும், இரண்டாவது முறையாக ‘உன்னை ஒன்று கேட்பேன்’ பாடலை, பி.சுசீலா ஓர் தாலாட்டு போல் பாடியிருப்பார். கிறங்கடித்துவிடும் அந்தக் குரல். அதேபோல், முதலில் வரும் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடலின் போது, அப்படியொரு ஸ்டைலீஷாக ரகளை பண்ணுவார்கள் சிவாஜியும் செளகாரும். அதிலும் சிவாஜி சிகரெட் பிடித்து, புகை விடுவதற்கு ஆர்ப்பரித்தார்கள் ரசிகர்கள். முக்கியமாக, சிகரெட்டை இழுத்து, புகையை விட்டுவிட்டு, நாக்கை நீட்டி, அதன் நுனியை மெல்ல ஒரு தட்டுதட்டி விட்டு, மீண்டும் புகைப்பார் சிவாஜி. தமிழ் சினிமாவின் ஸ்டைல் மன்னன் சிவாஜிதான். மீண்டும் இந்தப் பாடல் வரும் போது, இன்னொரு செளகார் பாடும் போது, அந்தப் பாடல் முடியும் வரை அமைதியாக இருந்துவிட்டு, கடைசியாக, ‘இந்தப் பாட்டு உனக்கு எப்படித்தெரியும்’ எனப் பொங்குவாரே... மொத்தத் தியேட்டரும் குதூகலிக்கும்.


பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி பின்னணி இசைக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து, இசையால் மிரட்டியிருப்பார்கள். டைட்டில் இசையே நம்மை கிடுகிடுக்கச் செய்துவிடும். கவியரசரின் வரிகள், இன்றைக்கும் நமக்குள் ஊடுருவி என்னவோ செய்யும்.


ஆரூர்தாஸின் வசனங்கள், படத்தில் பல இடங்களில் கைத்தட்டல் பெறும். நறுக்சுருக் வசனங்கள். அதேபோல், படத்தின் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் மிக முக்கியப் பங்கு வகித்தன. வண்ணப்படம். மிகுந்த பொருட்செலவில், சிவாஜி தன் சிவாஜி பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருந்தார். இதுதான் இவர் தயாரித்த முதல் படம்.


படத்தை இயக்கியவர் தாதா மிராஸி. இந்தி, வங்காளப் படங்களின் இயக்குநர். ‘இந்தப் படத்தை இவரே இயக்கினால் நன்றாக இருக்கும்’ என அங்கிருந்து அழைத்து வந்தார் சிவாஜி. இந்த தாதா மிராஸி பற்றி ஒரு கொசுறுத் தகவல்... இவர் கதை சொல்லும் பாணியே மிரட்டலாக இருக்குமாம். ஐந்தாறு மணி நேரம் கதை சொல்லுவாராம். கதை, காட்சி, இசை, கேமிராக்கோணம் என சகலத்தையும் இவர் விவரிக்கும் ஸ்டைல், திரையுலகில் பிரபலம். இவரின் மேனரிஸங்களை வைத்துத்தான் இயக்குநர் ஸ்ரீதர், ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில், பாலையாவுக்கு நாகேஷ் கதை சொல்லும் காட்சியை வைத்திருந்தாராம்.


1964ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ரிலீசானது ‘புதிய பறவை’. கிட்டத்தட்ட 55 வருடங்களாகிவிட்டன. எத்தனையோ படங்களை ரீமேக்குகிறார்கள். ‘புதிய பறவை’ பற்றி எவரும் யோசிப்பதே இல்லை. காரணம்... சிவாஜி, சரோஜாதேவி, செளகார் ஜானகிக்கு இணையான நடிப்பை, இப்போது யார் தரமுடியும். நீங்களே சொல்லுங்கள்.


55 வருடங்களானாலும் ‘புதிய பறவை’... ‘புதிய’ பறவைதான்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்