'' ‘ராமு’ போஸ்டர் இன்ஸ்பிரேஷன்தான் ‘முந்தானை முடிச்சு’ ‘’ - கே.பாக்யராஜ் பிரத்யேகப் பேட்டி

By செய்திப்பிரிவு

வி.ராம்ஜி


‘’ ‘ராமு’ படத்தின் போஸ்டர் இன்ஸ்பிரேஷனில் இருந்து எழுதிய கதைதான் ‘முந்தானை முடிச்சு’ ‘’ என்று நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் தெரிவித்தார்.


நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் முதன்முதலாக இயக்கிய படம் ‘சுவரில்லாத சித்திரங்கள்’. இந்தப் படம் 1979ம் ஆண்டு திரைக்கு வந்தது. கிட்டத்தட்ட, இவர் திரையுலகில் இயக்குநராகி, 40 வருடங்களாகின்றன.


இதையொட்டி, ‘இந்து தமிழ் திசை’ சார்பில், கே.பாக்யராஜுக்கு 40 ஆண்டை நினைவுபடுத்தும் வகையில் நினைவுப்பரிசு ஒன்று வழங்கப்பட்டது. இதையடுத்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்காக, அவர் பிரத்யேகப் பேட்டி அளித்தார்.


அதில் அவர் தெரிவித்ததாவது:


‘’முதன்முதலாக என்ன படம் பார்த்தேன் என்று நினைவில் இல்லை. ஆனால் என் அத்தை கூட சேர்ந்து பார்த்த படம் ‘மன்னாதி மன்னன்’. அது நன்றாக ஞாபகம் இருக்கிறது. எம்ஜிஆர் படங்களுக்கு பெண்கள் கூட்டம் பயங்கரமாக இருக்கும். நான் சின்னப்பையன் என்பதால் டிக்கெட் எடுக்க லேடீஸ் க்யூவில் என்னை அனுப்பிவிடுவார்கள். எங்கள் அத்தைக்கு இவ்வளவு தெரிந்திருந்தால், அங்கே வந்திருக்கும் பெண்களுக்கும் இதெல்லாம் தெரியாதா என்ன? அவர்கள் முட்டுக்கட்டை போடுவார்கள். அதையெல்லாம் தாண்டி, டிக்கெட் எடுத்துப் படம் பார்த்தால்... சண்டைக் காட்சிகள் நம்மை உற்சாகப்படுத்திவிடும்.


சண்டைக் காட்சியின் போது, நான் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பெண்களை ‘ஆய் ஊய்’ என்று கத்திக்கொண்டே அடித்துவிடுவேன். பெரிய சண்டையே நடந்துவிடும். பிறகு ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடுவே உள்ள நடைபாதையில் உட்கார வைத்துவிட்டார்கள். தியேட்டருக்குள் நடந்த இந்தச் சண்டையால் இதெல்லாம் நன்றாக நினைவில் இருக்கிறது.


என் பாட்டிக்கு படிக்கத் தெரியாது. ‘இது எத்தனாம் நம்பர் பஸ்சுடா’ என்று கேட்பார்கள். ‘ஏழாம் நம்பர் பாட்டி’ என்று சொல்லுவேன். ‘இது அந்தத் தியேட்டருக்குப் போகாதுடா’ என்று சரியாகச் சொல்லுவார். ‘பூம்புகார்’ படம் வந்திருந்தது. அதில் கவுந்தியடிகளாக நடித்த கே.பி.சுந்தராம்பாளுக்காகவே அந்தப் படத்தைப் பார்க்கிற ஆசையில் இருந்தார் பாட்டி. அவருடன் அந்தப் படம் பார்த்தது நினைவில் இருக்கிறது. இதேபோல், ஜெமினி, கே.ஆர்.விஜயா நடித்த ‘கற்பகம்’ படம் பார்த்தேன். எம்ஜிஆர், சிவாஜி போல ஜெமினிக்கு ரசிகைகள் ஏகப்பட்ட பேர் உண்டு.
அப்புறம்... நான் நண்பர்களுடன் பார்த்த படம் ‘ராமு’. ஜெமினிகணேசன், கே.ஆர்.விஜயா நடித்த இந்தப் படத்தின் போஸ்டர்தான் பின்னாளில் என்னை வெகுவாகக் கவர்ந்தது. லேசான தாடியும், ஒரு ஜோல்னாப்பையும் தோளில் ஒரு பையனுமாக ஜெமினிகணேசன் சோகமாக நிற்பார். இதுதான் போஸ்டர். பார்க்கவே பரிதாபமாக இருக்கும்.


பின்னாளில், நான் இயக்குநரான பிறகு, என்ன படம் பண்ணலாம் என்று யோசிக்கும்போது, ‘ராமு’ படத்தின் போஸ்டர் நினைவுக்கு வந்தது. அந்த போஸ்டரில் இருந்து கதை பண்ணியதுதான் ‘முந்தானை முடிச்சு’ ஜெமினி போல் அவ்வளவு பெரிய பையன் என்றால், நம்ம வயசுக்கு நன்றாக இருக்காது என்பதால், கைக்குழந்தை என்று மாற்றினேன்.


இன்னும் சொல்லப் போனால், ‘முந்தானை முடிச்சு’க்கு முதலில் சொன்ன கதையே வேறு. முதலில் செய்த கதையில், அந்தக் குழந்தை என்னுடையது அல்ல. தத்தெடுத்திருப்பேன். மனைவியை இழந்த கணவன் நடத்தும் நிறுவனத்தில், அதேபோல் கையில் குழந்தையுடன் இருந்தால்தான் வேலை கிடைக்கும் என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு, ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொண்டு வேலைக்குச் சேருவேன். அவரும் தன் மகளுக்காக இன்னொரு கல்யாணம் பண்ணாமல் இருப்பார். பிறகு என்னைப் பிடித்துப் போய், அவர் மகளை எனக்குக் கல்யாணம் செய்து வைப்பார். பிறகு, அது நான் தத்தெடுத்த குழந்தை என்பது தெரிந்ததும், என்னைத் துப்பாக்கியால் சுடுவதற்கு வருவார் என்றெல்லாம் கதை பண்ணியிருந்தேன். உதவியாளர்கள் எல்லோருக்குமே கதை பிடித்திருந்தது.


ஆனால் இரண்டு நாட்கள் கழித்து, எல்லோரையும் அழைத்து, ‘இந்தக் கதை சரியில்லை. குழந்தையை தத்தெடுத்தான் என்று சொன்னால், அது டிராமாவாக இருக்கும். நிஜமாகவே அவன் ‘விடோ’, அவனுக்கு கைக்குழந்தை இருக்கிறது என்றே இருக்கட்டும். அதுதான் ஆடியன்ஸிடம் ஒரு ஸிம்பதியை உருவாக்கும். சென்டிமென்டாகவும் இருக்கும்’ என்று சொல்லி மாற்றினேன். அதுதான் இப்போது எல்லோரும் பார்த்த ‘முந்தானை முடிச்சு’.


ஆக, ‘முந்தானை முடிச்சு’ கதைக்கான இன்ஸ்பிரேஷன், ‘ராமு’ படத்தின் போஸ்டர்தான்.


இவ்வாறு கே.பாக்யராஜ், ‘இந்து தமிழ் திசை’இணையதளத்துக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்தார்.


கே.பாக்யராஜின் வீடியோ பேட்டியைக் காண...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்