எம்ஜிஆர்  4, சிவாஜி 8, கமல் 10 -  75ம் வருட ப்ளாஷ்பேக்

By செய்திப்பிரிவு

வி.ராம்ஜி


75ம் வருடத்தில், எம்ஜிஆர் 4 படங்களிலும் சிவாஜிகணேசன் 8 படங்களிலும் கமல்ஹாசன் 10 படங்களிலும் நடித்துள்ளனர்.


75ம் ஆண்டில், எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து, தீவிரமாக செயல்பட்டு வந்த தருணம். சிவாஜி கணேசன் வழக்கம் போல தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். ‘களத்தூர் கண்ணம்மா’வில் சிறுவனாக அறிமுகமான கமல், வரிசையாக நடித்து வந்தார். பிறகு ஓர் இடைவெளி விழுந்தது.
அதன் பின்னர், வாலிபனாக ‘குறத்தி மகன்’, ‘மாணவன்’ படங்களில் நடித்தார். கே.பாலசந்தரின் ‘அரங்கேற்றம்’ படத்தில் இருந்து வரிசையாக அவரின் படங்களில் கமல் நடிக்கத் தொடங்கினார். பிறகு மளமளவென படங்களில் நடித்து வந்தார்.


75ம் வருடம், எம்ஜிஆர், சிவாஜி, கமல் ஆகியோரின் படங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டன. எம்ஜிஆருக்கு ‘நாளை நமதே’, ‘பல்லாண்டு வாழ்க’, ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘இதயக்கனி’ ஆகிய நான்கு படங்கள் வெளியாகின. இதில் எம்ஜிஆரின் ‘நாளை நமதே’ படத்தை கே.எஸ்.சேது மாதவன் இயக்கினார், ‘பல்லாண்டு வாழ்க’ படத்தை கே.சங்கர் இயக்கினார். ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தை ப.நீலகண்டன் இயக்கினார். ‘இதயக்கனி’ படத்தை ஏ.ஜெகநாதன் இயக்கினார். இதில் ‘நாளை நமதே’, பல்லாண்டு வாழ்க’ ஆகிய இரண்டு படங்களும் ரீமேக் படங்கள். ‘நாளை நமதே’, ‘நினைத்ததை முடிப்பவன்’ ஆகிய இரண்டு படங்களிலும் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்தார். இந்த நான்கு படங்களிலும் சூப்பர் ஹிட்டடித்தது ‘இதயக்கனி’தான். மற்ற மூன்று படங்களிலும் எம்ஜிஆருக்கு ஜோடி லதா.


அதேபோல் அந்த வருடத்தில் சிவாஜி, எட்டு படங்களில் நடித்தார். ‘அன்பே ஆருயிரே’, அவன்தான் மனிதன்’, ‘மன்னவன் வந்தானடி’, ‘டாக்டர் சிவா’ ஆகிய நான்கு படங்களிலும் மஞ்சுளா ஜோடி. இதில், ‘அன்பே ஆருயிரே’, ‘அவன்தான் மனிதன்’, ‘டாக்டர் சிவா’ ஆகிய மூன்று படங்களையும் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார்.’மன்னவன் வந்தானடி’, ‘மனிதனும் தெய்வமாகலாம்’ ஆகிய படங்களை பி.மாதவன் இயக்கியிருந்தார்.
‘சினிமா பைத்தியம்’ படத்தில் கெளரவத் தோற்றம். முக்தா சீனிவாசன் இயக்கினார். ’வைரநெஞ்சம்’ படத்தை இயக்குநர் ஸ்ரீதர் இயக்கினார். ஆக, சிவாஜி 75ம் வருடத்தில், எட்டு படங்களில் நடித்திருந்தார். இதில், ‘அவன்தான் மனிதன்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ‘டாக்டர் சிவா’படத்திலும் ‘மன்னவன் வந்தானடி’ படத்திலும் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தன. ‘வைரநெஞ்சம்’ பி அண்ட் சி ஆடியன்ஸைக் கவர்ந்தது.


75ம் வருடத்தில், கமல்ஹாசன் பத்துப் படங்களில் நடித்திருந்தார். ‘அந்தரங்கம்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘ஆயிரத்தில் ஒருத்தி’, ‘சினிமா பைத்தியம்’, ‘தங்கத்திலே வைரம்’, ‘தேன் சிந்துதே வானம்’, ‘பட்டிக்காட்டு ராஜா’, ‘பட்டாம்பூச்சி’, ‘மாலை சூட வா’, ‘மேல்நாட்டு மருமகள்’ என பத்துப் படங்களிலும் தன் நடிப்பால் கவனம் ஈர்த்தார் கமல்.


‘அந்தரங்கம்’ படம் கமலின் கேரியரில் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘ஞாயிறு ஒளிமழையில்’ என கமல் முதன்முதலாகப் பாடியது இந்தப் படத்துக்குத்தான். இயக்குநர் கே.பாலசந்தர் படமான ‘அபூர்வராகங்கள்’ படத்தில், மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது, கமலுக்கு. ‘ஆயிரத்தில் ஒருத்தி’ படத்தை அவினாசி மணி இயக்கியிருந்தார். சொர்ணம் இயக்கிய ‘தங்கத்திலே வைரம்’, முக்தா சீனிவாசன் இயக்கிய ‘சினிமா பைத்தியம்’, ரா.சங்கரன் இயக்கிய ‘தேன் சிந்துதே வானம்’, ஏ.எஸ்.பிரகாசம் இயக்கிய ‘பட்டாம்பூச்சி’, சி.வி.ராஜேந்திரன் இயக்கிய ‘மாலைசூடவா’, ‘ஏபி.நாகராஜன் இயக்கிய ‘மேல்நாட்டு மருமகள்’ என இரண்டாம் நாயகனாக பல படங்களிலும் தனி ஹீரோவாக சில படங்களிலும் நடித்திருந்தார் கமல். இதில் பல படங்களில், சிவகுமாரும் கமலும் இணைந்து நடித்திருந்தார்கள்.


75ம் வருடத்தில் இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க, எம்.கர்ணன் இயக்கத்தில் ஜெய்சங்கர் நடித்த ‘எங்க பாட்டன் சொத்து’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அப்போதைய டீன் ஏஜ் பசங்க, யாருக்கும் தெரியாமல் இந்தப் படங்களை தேடிச்சென்று பார்த்தார்கள். இயக்குநர் ப்ளஸ் ஒளிப்பதிவாளரான கர்ணனின் கேமிராக் கோணங்கள், மிரட்டலாகவும் ஆபாசமாகவும் இருப்பதாக விமர்சிக்கப்பட்டன.


இதே வருடத்தில், தேங்காய் சீனிவாசன் நாயகனாக நடித்த ‘காரோட்டி கண்ணன்’ படம் வெளியானது. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், முத்துராமன், சுஜாதா நடித்த ‘மயங்குகிறாள் ஒரு மாது’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ஜெய்சங்கர் நடித்த ‘யாருக்கு மாப்பிள்ளை யாரோ’ வெற்றிப்படமாக அமைந்தது. மகேந்திரன் கதை, வசனத்தில், முத்துராமன், சுஜாதா நடித்து வெளியான ‘வாழ்ந்து காட்டுகிறேன்’ திரைப்படமும் ரசிகர்களால் பேசப்பட்டது.


கமல் நடித்த ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தில் வாணிகணபதியும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதேபோல், இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம்... ‘உறவுக்கு கை கொடுப்போம்’. நாடகமாக இயக்குநர் விசு அரங்கேற்ற அது மிகப்பெரிய வெற்றி பெற... கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கதையை வாங்கி, ஜெமினிகணேசனையும் செளகார் ஜானகியையும் வைத்து படமாக எடுத்தார். ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கினார். இந்தப் படம் படுதோல்வியைச் சந்தித்தது.


‘உறவுக்கு கை கொடுப்போம்’ நாடகத்தை ஹிட்டாக்கினார் விசு. அவரின் கதை, 1975ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி திரைப்படமாக எடுத்து, தோல்வியைக் கண்டனர் கே.எஸ்.ஜி. குழுவினர். இதன் பின்னர் 86ம் ஆண்டு, அதாவது 11 வருடங்கள் கழித்து, ‘உறவுக்கு கை கொடுப்போம்’ கதையை விசுவே நடித்து இயக்கினார்.

86ம் ஆண்டு வந்த படங்களிலேயே அந்தப் படம்தான் மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற மிக முக்கியமான படம். 33 வருடங்கள் கழித்தும், அந்தப் படத்தை இன்னமும் மறக்காமல் இருக்கிறார்கள் ரசிகர்கள். அந்தப் படம்... ‘சம்சாரம் அது மின்சாரம்’.

அதேபோல், 75ல் அறிமுகமான அந்த நடிகரையும் மறக்கவில்லை ரசிகர்கள். கைப்பிடித்து உச்சிக்கே கொண்டு நிறுத்தினார்கள். அந்த நடிகர்... ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் அறிமுகமான ரஜினிகாந்த்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்