வாலு அப்டேட்: எம்ஜிஆர், ரஜினி, அஜித் கெட்டப்களில் சிம்பு

'வாலு' படத்தின் 'தாறுமாறு' பாடலுக்கு எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் உள்ளிட்ட கெட்டப்களில் நடனமாட இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிக்க நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த படம் 'வாலு'. தமன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜூலை 17ம் தேதி சிம்பு சினி ஆர்ட்ஸ் இப்படத்தை வெளியிட இருக்கிறது.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் போது, 'தாறுமாறு' என்ற பாடல் மட்டும் படமாக்கப்படாமல் இருந்தது. சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தற்போது அப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியதைத் தொடர்ந்து 'தாறுமாறு' பாடல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சரோஜா தேவி, குஷ்பு, சிம்ரன் உள்ளிட்ட பல்வேறு நடிகைகளை வைத்து படமாக்கப்பட இருந்த 'தாறுமாறு' பாடல் தற்போது சிம்பு - ஹன்சிகா இருவரையும் வைத்து படமாக்கப்பட்டு வருகிறது. இப்பாடலில் எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் உள்ளிட்ட நடிகர்களின் கெட்டப்களில் ஆடி வருகிறார் சிம்பு. எம்.ஜி.ஆர் காட்சிக்கு என்று ஒரு செட், ரஜினி காட்சிக்கு என்று ஒரு செட் என தனித்தனியாக செட்கள் போடாமல், ஒரு நாள் ஒரு நடிகரின் பகுதி படப்பிடிப்பு என்று திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள். இப்பாடல் படப்பிடிப்பு வெள்ளிக்கிழமை (ஜூலை 4) வரை நடைபெற இருக்கிறது.

ஜூலை 17ம் தேதி 'வாலு' படத்துடன் தனுஷ் நடித்த 'மாரி' படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE