சுரேஷ் எழுப்பிய பாகுபலி சர்ச்சைக்கு ராஜமெளலி பதில்

'பாகுபலி' தொடர்பான நடிகர் சுரேஷின் கேள்விக்கு, இயக்குநர் ராஜமெளலி ஒரு பேட்டியில் பதிலளித்திருக்கிறார்.

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், ராணா, தமன்னா, அனுஷ்கா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'பாகுபலி'. ARKA மீடியா தயாரித்திருக்கும் இப்படத்துக்கு கீராவானி இசையமைத்து இருக்கிறார். ஜூலை 10ம் தேதி அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. தமிழில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை வெளியிட இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு, “ராஜமௌலிக்கும், ‘பாகுபலி’ படத்திற்கும் நான் ஆதரவு தர மாட்டேன். ஜெகபதி பாபு, சுமன், சாய்குமார் போன்ற நடிகர்கள் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு உரிய திறமை மிக்கவர்கள் என கருதவில்லை" என தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார் நடிகர் சுரேஷ். அவரது கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இக்கருத்து குறித்து 'பாகுபலி' படக்குழு கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தது. 'பாகுபலி' படத்திற்காக அளித்த ஒரு வீடியோ பேட்டியில் இயக்குநர் ராஜமெளலி சுரேஷின் கருத்துக்கு பதிலளித்திருக்கிறார்.

"நான் எப்போதுமே எனது படத்தில் நடிக்கும் நடிகர்களின் மொழியைப் பற்றி கவலைப்பட்டதில்லை. மற்ற மொழி நடிகர்கள் என் படத்தில் நடிப்பது இது முதல் முறையல்ல. போஜ்புரி நடிகர்கள், இந்தி நடிகர்கள், தமிழ் நடிகர்கள் என பலருடன் பணியாற்றி இருக்கிறேன். யாருக்குமே தெரியாத தெலுங்கு நடிகர்களுடனும் பணியாற்றி இருக்கிறேன்.

எனது படம் மூலமாக பல நல்ல நடிகர்கள் உருவாகி இருக்கிறார்கள். அதற்கு நான் தான் காரணம் என்று எப்போதும் சொன்னதில்லை. எப்போதுமே நடிகர்களின் வரிசையில் என்னுடைய பாத்திரத்திற்கு எந்த நடிகர் பொருத்தமானவராக இருப்பார் என்று மட்டும் தான் பார்ப்பேன். எனக்கு நடிகர்களின் தமிழ், தெலுங்கு, இந்தி என்றெல்லாம் பிரிக்க தெரியாது.

ஒரு இயக்குநராக என்னுடைய பாத்திரத்திற்கு யார் சரியாக இருப்பார் என்று பார்ப்பது எனது பணி. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதற்காக எல்லாம் நான் கவலைப்பட முடியாது" என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE