பாடலாசிரியர், நடிகர் அவதாரத்தை அடுத்து இயக்குநராக புதிய முகம் காட்ட வருகிறார் பா.விஜய். தான் இயக்கி, நடித்துள்ள ‘ஸ்ட்ராபெரி’ படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள அவர், அதன் இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இருக்கிறார். படத்தின் கிராஃபிக்ஸ் மற்றும் சென்சார் பணிகளில் இருந்த பா.விஜய்யை சந்தித்தோம்.
நடிகராக வளர்ந்து வரும் நிலையில் ‘ஸ்ட்ராபெரி’ படத்தை இயக்கும் சூழல் எப்படி உருவானது?
‘‘இளைஞன்’ படத்தை முடித்த சில நாட்களில் ‘தகடு தகடு’ படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அந்தப் படம் முடிந்து ரிலீஸுக்கு தாமதமாகிக்கொண்டிருந்த நேரத்தில்தான் ஏற்கெனவே நான் எழுதி வைத்திருந்த ‘ஸ்ட்ராபெரி’ படத்தின் வேலையை தொடங்கலாம் என்று இறங்கினேன். நம் கதையை நாமே எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்ததால் நானே இயக்க முடிவெடுத்தேன். இதை ஒரு கமர்ஷியல் திரில்லராக உருவாக்க கிராஃபிக்ஸ் உட்பட பல விஷயங்கள் தேவைப்பட்டன. இரண்டு ஆண்டுகாலம் இப்படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளேன்.
படத்தின் டிரெய்லரைப் பார்க்கும்போது பேய்ப் படம் போல் தெரிகிறதே?
தொடர்ந்து வரிசையாக வந்துகொண்டிருக்கும் பேய்ப் படங்களில் இதுவும் ஒன்று என்று சொல்லமுடியாது. காமெடி, திகில் இவற்றை கடந்து திரில்லர் பின்னணியில் சமூகத்துக்கான செய்தியையும் இந்தக் கதை உணர்த்தும்.
பயிற்சிகள் எதுவும் இல்லாமல் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறீர்களே?
சென்னை வந்து பாடலாசிரியராகி பணம் சம்பாதித்து கார் வாங்கியபோது எனக்கு கார் ஓட்டத் தெரியாது. புதிய காரை வாங்கிய இரண்டாவது நாளில், டிரைவர் ஒரு இடத்தில் இடித்துவிட்டார். உடனே டிரைவர் இருக்கையில் இருந்து அவரை நகரச் சொல்லிவிட்டு நான் காரை இயக்கினேன். அப்படித்தான் நான் ஓட்டுநரானேன்.
ஏதாவது ஒரு புதிய விஷயம் செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது, உள்ளுக்குள் ஒரு உணர்வு அதை நோக்கி நம்மை தள்ளிக்கொண்டே இருக்கும். அப்படித் தான் என் இயக்குநர் பயணத்தை தொடங்கினேன். விஷ்ணுவர்த்தன், செல்வராகவன் மாதிரி நாமும் இயக்க முடியும் என்று நம்பினேன். கவிஞர் வாலியும் படம் இயக்கியிருக்கிறாரே என்று யோசித்தேன். இவை எல்லாம் சேர்த்துதான் என்னை இயக்குநர் ஆக்கியது.
‘தகடு தகடு’ திரைப்படம் ரிலீஸ் ஆக தாமதமாவது ஏன்?
படத்தின் எல்லா பணிகளும் முடிந்துவிட்டது. படத்தின் தயாரிப்பாளர் ‘தகடு தகடு’ படத்தைப்போல ‘சவாரி’, ‘அம்மிணி’ ஆகிய இரண்டு படங்களை எடுத்து வருகிறார். அந்தப் படங்களின் வேலைகளும் முடிந்து எந்தப் படம் மேக்கிங்கில் சரியாக வந்திருக்கிறது என்பதைப் பார்த்து அதை முதலில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார்.
பாடலாசிரியராக ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியதுபோல நடிகனாகவும், இயக்குநராகவும் ஒரு தனித்த இடத்தை பிடிக்க என்னமாதிரியான முயற்சிகளில் இறங்கியிருக்கிறீர்கள்?
‘ஞாபகங்கள்’, ‘இளைஞன்’ படங்களில் நடித்த போது, நடிப்பதற்காக பெரிய பயிற்சிகள் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. ‘ஸ்ட்ராபெரி’ படமும் நான் ஒரு நடிகனாக தனித்து தெரியும் கதை அல்ல. கதாபாத்திரமாக மட்டுமே வெளிப்படுவேன். இப்படத்தில் நான் ஒரு கால் டாக்ஸி டிரைவர். அந்த பாத்திரத்துக்கு ஹீரோயிஸம் தேவையில்லை. படத்தில் சமுத்திரகனி, தம்பிராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டவர்களின் நடிப்பு பெரிய அளவில் பேசப்படும்.
இடைவேளைக்கு பிறகு நான் 12 காட்சிகளில் மட்டும்தான் நடித்திருக்கிறேன். இந்தப்படத்தைப் பொறுத்தவரைக்கும் நாயகன் என்பதிலிருந்து விலகி நின்று நடித்திருக்கிறேன். ஒரு இயக்குநரின் வேலை எவ்வளவு பெரியது என்பதை உணர்த்திய படமாகத்தான் இதை பார்க்கிறேன். இயக்குநராக இருப்பதில் அதிக சவால்கள் உள்ளதை இப்படத்தின் மூலம் நான் தெரிந்துகொண்டேன். இப்படத்தில் ஒரு இயக்குநராக நான் எதிர்கொண்ட சவால்கள் அதிகம்.
நடிகர், இயக்குநர் என்று பொறுப்புகள் கூடியதால் பாடல்கள் எழுதும் பணி தடைபடுமே?
அதெல்லாம் இல்லை. மூன்றையும் இணைத்துக் கொண்டு பயணிக்கவே விரும்புகிறேன். ‘யட்சன்’, ‘அரண்மனை 2’, விஜய் அட்லீ இணையும் புதிய படம் என்று பல படங்களுக்கு பாடல்களை எழுதி வருகிறேன். மற்ற ஹீரோக்களின் படங்களையும் இயக்குவேன்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago