காக்கா முட்டை திரைப்படத்துக்கு எதிரான வழக்கு: தயாரிப்பாளர்கள், இயக்குநர் நேரில் ஆஜராக உத்தரவு

‘காக்கா முட்டை’ திரைப்படத்துக்கு எதிரான வழக்கில், அதன் தயாரிப்பாளர்கள், இயக்குநர் உள்ளிட்ட 4 பேர் அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.

அகில இந்திய வழக்கறிஞர்கள் நலச் சங்கத் தலைவர் எஸ்.மணிவண்ணன், சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனி நபர் மனு ஒன்றை நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:

‘காக்கா முட்டை’ திரைப்படத் தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் விதமாகவும், வழக்கறி ஞர் தொழிலை கொச்சைப்படுத்தும் விதமாகவும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அதனால் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றிமாறன், இயக்குநர் மணிகண்டன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் மீது உரிய விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றமே இவ்வழக்கை விசாரித்து நீதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி ஏ.முருகன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.நமோநாராயணன் ஆஜரானார். அப்போது மனுதாரர் மணிவண்ணனின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 4 பேரும் அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் மனு மீதான அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE