காக்கா முட்டையும் என் பீட்சா அனுபவமும்!

பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகள், சிறந்த குழந்தைகள் திரைப்படம் மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் என இரண்டு தேசிய விருதுகள் வென்ற திரைப்படம் 'காக்கா முட்டை'.

இவ்வளவு விருதுகள், படத்தைப் பற்றி இயக்குநரைவிட தனுஷின் தொடர் பாராட்டு என அனைத்தும் இப்படத்தை முதல் நாள் பார்த்துவிட வேண்டும் எனத் தூண்டியது. ஆனால், படத்தை முன்பே பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

'பென்டாஸ்டிக் 4' ட்ரெய்லர்தான் முதலில் திரையிட்டுவிட்டு, 'காக்கா முட்டை' என்ற இரண்டு குழந்தைகளின் உலகத்தை நோக்கி பயணிக்க துவங்கியது திரைப்படம். 'காக்கா முட்டை' என்ற எழுத்து போடும் முன் ஒரு காட்சி இருக்கிறது. அக்காட்சியை நிஜத்தில் செய்யாத எந்த ஒரு குழந்தையும் இந்த உலகத்தில் இருக்காது. ஆனால், இயக்குநர் மணிகண்டன் அதனை படமாக்கிய விதத்தில் என்னை மிகவும் ஈர்த்தார். திரையரங்கில் பல தடங்கல்கள் இருந்தும், அதனை எல்லாம் சமாளித்து படத்தில் மூழ்க ஆரம்பித்தேன்.

கதை என்று பார்த்தால் ரொம்ப எளிமையானதுதான். அப்பா சிறையில் இருக்கிறார். அம்மா, பாட்டியுடன் குடிசைப் பகுதியில் இருக்கும் இரண்டு சிறுவர்கள் பீட்சா சாப்பிட விரும்புகிறார்கள். அவர்களால் அது முடிந்ததா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

இரண்டே வரியில் கதையை சொல்லிவிட்டாலும், இயல்பு மீறாத அசத்தல் காட்சிகளால் ஈர்க்கிறது படம். குறிப்பாக, சிறுவர்கள் ரமேஷ் மற்றும் விக்னேஷ். வீட்டிற்கு டி.வி வாங்க வேண்டும், விளம்பரத்தை பார்த்து பீட்சா சாப்பிட வேண்டும் என்று நானும் யோசித்திருப்பதால் இப்படத்தில் வரும் சிறுவர்கள் மூலமாக என்னுடைய சிறு வயதிற்கு தான் சென்றேன். சென்னை வந்த புதுதில் பீட்சா எந்தக் கடையில் போய்டா வாங்கணும் என்று நண்பர்களிடம் விசாரித்தது எல்லாம் உண்டு.

பீட்சா வாங்க பணம் சேர்ப்பது ஆகட்டும், பாட்டி வீட்டிலேயே உருவாக்கி தரும் பீட்சா என ஆங்காங்கே எதார்த்தமான விஷயங்களில் காமெடியை ரசித்தேன். அதிலும் பீட்சா கொண்டு வருபவரிடம் "அண்ணா.. ஒரு தடவை திறந்து காட்டுங்க வழி சொல்றேன்" என்றவுடன் திறந்து காட்டும் போது சிறுவர்கள் காட்டும் எக்ஸ்பிரஷன் இருக்கிறதே அய்யோ!

இரண்டு சிறுவர்களும் கிடைக்கும் பணக்கார நண்பன் கொடுக்கும் பீட்சாவை சாப்பிடாமல் கிளம்புவது, நாயை விற்க முனைப்பது, புதுத்துணி வாங்க இவர்கள் போடும் திட்டம் என எதுவுமே கதைக்கு மிகாமல் கதையோடு ஒன்றியே பயணிப்பது இப்படத்துக்கு மிகப்பெரிய பலம்.

தங்களது பீட்சா சாப்பிடும் கனவு முடிந்துவிட்டது என எண்ணும் இடத்தில் ஓர் ஒளிப்பதிவாளராக மணிகண்டன் விளையாடி இருக்கிறார். படம் தொடங்கி, முடிந்த உடன் எழுத்து - ஒளிப்பதிவு - இயக்கம் மணிகண்டன் என எழுத்து போடும் போது தான் "ஒஹோ.. நாம பார்த்தது படம் இல்ல" என்று தோன்றும் அளவுக்கு அவ்வளவு யதார்த்தம். சிறு வீடு, வீட்டுக்குள்ளே கழிப்பறை, சமைக்கும் இடம், அதற்கு அருகிலேயே தூங்குவது என கச்சிதமாக செய்து இருக்கிறார்கள்.

காட்சிக்கு தகுந்தவாறு பின்னணி இசையை அமைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், சில காட்சிகளில் பின்னணி இசை இல்லாமல் விட்டிருப்பது காட்சிக்கு அழகு சேர்த்திருக்கிறது. பல படங்களில் நாயகனுடன் பாடல் காட்சிகள், காதல் காட்சிகள் என நடித்து வந்த ஐஸ்வர்யாவுக்கு இந்தப் படத்தின் அம்மா பாத்திரம் என்பது மிகப்பெரிய பொக்கிஷம் தான். மேக்கப் எல்லாம் போட்டு அந்த ஐஸ்வர்யாவா இது என்று தோன்றுகிறது. இதைவிட மேலே இன்னும் ஒரு பாத்திரம் அவருக்கு திரையுலகில் கிடைப்பது என்னைப் பொறுத்தவரை சந்தேகம் தான். மேலும், கடைசி வரை இரண்டு சிறுவர்கள் பெயர் என்ன என்பதையே கூறாமல் 'ஐ யம் சின்ன காக்கா முட்டை', 'ஹி இஸ் பெரிய காக்கா முட்டை' என அமைத்து அப்ளாஸ் அள்ளுகிறார் இயக்குநர்.

'சூது கவ்வும்' ரமேஷ் மற்றும் யோகி பாபு இருவரின் காமெடி பார்ப்பவர்களை கண்டிப்பாக சிரிக்க வைக்கும். அதிலும் பணம் வாங்கும் சமயத்தில் தொலைக்காட்சியில் ஒடும் காட்சிக்கும் சிரிக்காதவர்கள் இருந்தால் கண்டிப்பாக அவரை நல்ல மருத்துவரை அணுகச் சொல்லவும். இடைவேளைக்கு பின்பு திருடர்கள், போலீஸ், எம்.எல்.ஏ, பீட்சா கடைக்காரர் என கதை வெவ்வேறு இடங்களில் பயணித்துக் கொண்டிருந்த போது "என்னடா வழக்கமான கமர்ஷியல் பாதையில் சொல்கிறதே" என்று தோன்றியது. ஆனால், யாருமே யூகிக்க முடியாத ஒரு க்ளைமாக்ஸ் வைத்து என்னை மிரட்சி அடைய வைத்துவிட்டார் இயக்குநர் மணிகண்டன்.

சிம்புவை இப்படத்தில் பீட்சா கடையை திறந்து வைப்பவராகவும், இறுதியில் ஒரு காட்சியில் சிறு வசனம் பேசுவதற்கும் மட்டுமே உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு வழியாக சிம்பு நடிப்பில் அவரது ரசிகர்களுக்கு ஒரு படம் வெளியாகிவிட்டது.

க்ளைமாக்ஸில் அக்கடையில் சென்று பீட்சா சாப்பிட்டார்களா என்பதை தவறாமல் திரையரங்கில் போய் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதை விட முக்கியம், இந்த முழுப் படமும் நமக்குத் தருகின்ற அனுபவம். உள்ளூர் சாதாரண ரசிகனுக்கு உன்னத சினிமா அனுபவம் தந்து லயிக்க வைக்கும் உலக சினிமா இது.

கடைசியில் என்னிடம் கேட்க ஒற்றைக் கேள்வி மிச்சமிருக்கிறது: நான் இதுவரை பீட்சா சாப்பிட்டதே இல்லை... அது நல்லா இருக்குமா?

கா.இசக்கிமுத்து - தொடர்புக்கு esakkimuthu.k@thehindutamil.co.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE