நடிகர் சங்கத் தேர்தல்: விஷால் இறுதி நிபந்தனை

மல்டிபிளக்ஸ் யோசனையைக் கைவிட்டு, நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்ட சம்மதித்தால், நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் இருந்து விலகிக் கொள்ள தயார் என்று நடிகர் விஷால் இறுதி நிபந்தனை விதித்துள்ளார்.

ஜூலை 15ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற இருக்கிறது. நடிகர் சங்க கட்டிட விவகாரம் தொடர்பாக சரத்குமார் அணிக்கும், விஷால் அணிக்கும் காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒருவர் மீது ஒருவர் புகார்களை அடுக்கி வருகிறார்கள்.

இன்று (ஜூன் 14) ஆட்டோ ஒட்டுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நடைபெற்ற மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார் விஷால்.

அப்போது நிருபர்களிடம் அவர் கூறும்போது, "நடிகர் சங்க விவகாரத்தைப் பொறுத்தவரையில், ஸ்பை சினிமாஸ் நிறுவனத்துக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, மீண்டும் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டும் என்று அறிவித்தால் போட்டியில் இருந்து ஒதுங்கத் தயாராக இருக்கிறோம்.

எங்களுக்கு தேவை நடிகர் சங்கத்திற்கு ஒரு கட்டிடம் அவ்வளவு தான். ஒரே சங்கத்தில் இருந்து கொண்டு சண்டையிட்டு கொள்வது நல்லதாக இல்லை. நாங்கள் தேவையில்லாம எந்த நடிகர்களுடனும் பிரச்சினை செய்யவில்லை. எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்டவர்கள் கட்டிய கட்டிடத்தை இடித்துவிட்டு மல்டிபிளக்ஸ் கட்ட அனுமதிக்க மாட்டோம். மல்டிபிளக்ஸ் அமைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு, நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்டினால் எந்தப் பிரச்சினையும் இல்லை" என்றார் விஷால்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE