லிங்கா பிரச்சினைக்கு ஒரு வாரத்தில் தீர்வு: ரஜினி தரப்பு விளக்கம்

'லிங்கா' படத்தின் நஷ்ட ஈடு குறித்த பிரச்சினை இன்னும் தீராத சிக்கலில் நீடித்து வருகிறது. உரிய பணம் கிடைக்கவில்லை என்று விநியோகஸ்தர் சிங்காரவேலன் திருப்பூர் சுப்பிரமணியனை நோக்கி சரமாரியாக கேள்விகளை எழுப்பி இருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக ரஜினியின் நண்பர் திருப்பூர் சுப்பிரமணியம் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.

திருப்பூர் சுப்பிரமணியம் பேசியதாவது: ''தயாரிப்பாளர் 12.50 கோடி தருவதாக கூறினார். ஆனால், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து 6.26 கோடி பணம் மட்டுமே கிடைத்தது. இதை விநியோகஸ்தர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டேன். இன்னும் 6.24 கோடி பணம் வரவில்லை. வந்தவுடன் விநியோகஸ்தர்களுக்கு பிரித்துத் தந்துவிடுவேன். ஒரு வாரத்தில் இந்தப் பிரச்சினை முழுமையாக முடிந்துவிடும்.

நான் எந்த தருணத்திலும் ரஜினியின் கால்ஷீட் வாங்கித் தருவதாக சொல்லவே இல்லை. நான் பேசிய ஆடியோவை வெளியிடும் சிங்காரவேலன், ரஜினி கால்ஷீட் குறித்து நான் பேசி இருந்தால், அந்த ஆடியோவை வெளியிட்டிருக்கலாமே?

நான் 35 ஆண்டுகளாக திரைப்பட விநியோகஸ்தராக இருந்துவருகிறேன். ஒரு படத்தை மினிமம் கியாரண்டி அடிப்படையில் வாங்கும்போது, நஷ்டம் ஏற்பட்டால் தயாரிப்பாளரிடம் இருந்து பணம் கேட்பது தவறு. அப்படி வாங்குவது சரி என்றால் பல படங்களுக்குக் கேட்க வேண்டியிருக்கும்.

ரஜினி மனிதாபிமான அடிப்படையில் பணம் கொடுக்க முன்வந்தார். அதை கொடுக்கக் கூடாது என்று சொல்ல முடியாது. 'லிங்கா' பிரச்சினை சரியாக ஒரு வாரத்தில் முடிவுக்கு வந்துவிடும்'' என்று திருப்பூர் சுப்பிரமணிய பேசினார்.

தாணு பேசுகையில், ''முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகிறார் சிங்காரவேலன். சிங்காரவேலனே லிங்கா பிரச்சினை முடிவுக்கு வந்ததாக சொன்னார். இப்போது விளம்பரம் தேடும் நோக்கில் மீண்டும் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். விரைவில் அனைத்து சங்கங்கங்களையும் கூட்டி முடிவு எடுக்கப்படும்'' என்று தாணு பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE