எலி: முதல் நாள் முதல் பார்வை

By உதிரன்

வடிவேலு ஹீரோவாக நடிக்கும் நான்காவது படம், யுவராஜ் தயாளன் - வடிவேலு கூட்டணியில் இரண்டாவது படம் என்ற இந்தக் காரணங்களே 'எலி' படத்துக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

'வின்னர்', 'தலைநகரம்', 'மருதமலை', 'கிரி', 'எல்லாம் அவன் செயல்', 'காவலன்' படங்களில் பார்த்த வடிவேலுவை மீண்டும் திரையில் பார்க்க வேண்டும் என்ற அலாதி ஆர்வமும் இன்னொரு காரணம்.

வடிவேலு அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றினாரா?

திருடனாக இருக்கும் வடிவேலு உளவாளியாகி, கடத்தல் கும்பலை போலீஸிடம் பிடித்துக் கொடுக்கிறார். அதற்குப் பிறகு திருடன் வடிவேலு போலீஸ் வடிவேலு ஆகிறார்.

இந்த ஒற்றை வரிக் கதையை வைத்துக்கொண்டு ஒரு விழிப்புணர்வையும் கொடுக்கத் துணிந்திருக்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன்.

புகைப் பிடிப்பது புற்றுநோயை உருவாக்கும். உயிரைக் கொல்லும். மற்றவர் உயிரையும் சேர்த்துக் கொல்லும் என்று வடிவேலு தனக்கே உரிய பாணியில் எச்சரிக்கை வாசகத்தைப் படிக்கும்போதே சிரிப்பு வந்துவிடுகிறது.

'எலி'யின் ஆட்டம் ஆரம்பம் என்று நினைத்துக்கொண்டு தியேட்டரில் இருக்கும் ரசிகர்கள் படம் நிசப்தமாகி, படம் பார்க்க ஆரம்பித்தனர்.

'எலி' மாதிரி சின்ன சின்ன ரியாக்‌ஷன் கொடுக்கும் வடிவேலு சில திட்டங்கள் தீட்டி, திருடுகிறார். போலீஸ் வீட்டில் திருடும்போது மட்டும் கவனம் ஈர்க்கிறார். ரசிகர்கள் பலே என்று கை தட்டுகிறார்கள். அதற்குப் பிறகு அரங்கம் முழுக்க நிசப்தம் மட்டுமே நிலவியது.

போஸ் வெங்கட்டைப் பார்த்து ஜெய்சங்கர் மாதிரி டிரஸ் பண்ணியிருக்கார் என்று ரசிகர்கள் கலாய்க்கும் அளவுக்கு ஆகிவிட்டது நிலைமை.

இப்படியே நகர்ந்து, ஊர்ந்து, தள்ளிவிட்டு முதல் பாதி முடிகிறது. இரண்டாம் பாதியில் கதைக்குள் போகிறேன் பேர்வழி என்று எதையோ சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.

வடிவேலு தான் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை சொல்லிக்கொண்டே செய்கிறார். இவனை பிடிச்சா அவனை பிடிச்சிடலாம். அப்போ இவனை ஃபாலோ பண்ணலாம் என்று சொல்கிறார். சொன்னதையே செய்கிறார். இதுவே மிகப்பெரிய சோர்வையும், அலுப்பையும் உண்டாக்கிவிடுகிறது.

அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ன பதற்றமோ, வேகமோ இல்லாமல் திரைக்கதை நகர்வேனா என்று அடம்பிடிக்கிறது.

வழக்கமாக சிரிப்பு வெடிகளை கொளுத்திப் போடும் வடிவேலு, இதில் வெறும் வேலுவாக இருப்பதாலோ என்னவோ எல்லா வெடிகளும் புஸ் ஆகிப் போனது. தியேட்டரில் காலியாக கிடந்த பாதி இருக்கைகளும் அதை உறுதிப்படுத்தின.

இரண்டாம் பாதியிலும் வடிவேலு ஸ்கோர் செய்ய முயற்சித்தாலும் வடிவேலுவின் நடிப்புக்கு ரசிகர்களிடம் பெரிதாக எந்த ரியாக்‌ஷனும் இல்லை.

வில்லனிடம் மாட்டிக்கொள்வோமோ என்று பதறித் துடித்து, 'சுத்திக்கிட்டு இல்லை. வழி தெரியாம சிக்கிக்கிட்டு இருக்கு' என்று பேசும்போது மட்டும் அசல் வடிவேலுவைப் பார்க்க முடிகிறது. மனிதர் மற்ற இடங்களில் ஏன் சோபிக்காமல் போனார்? இத்தனைக்கும் கிளைமாக்ஸில் வடிவேலு சண்டை போட்டு ரசிகர்களின் இதயம் கவர முயற்சித்திருக்கிறார்.

பிரதீப் ராவத், ஆதித்யா, போஸ் வெங்கட், மகாநதி சங்கர் ஆகியோர் கேரக்டருக்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். சண்முகராஜா, நான் கடவுள் ராஜேந்திரன், முத்துக்காளை ஆகியோர் சும்மா வந்து போகிறார்கள்.

சதாவுக்கு படத்தில் பெரிதாய் எந்த ஸ்கோப்பும் இல்லை. கொள்ளை அழகு பாடலுக்கு கிளப் டான்ஸ், இந்திப் பாடல் டூயட், சில வசனங்களில் உள்ளேன் ஐயா சொல்லிவிட்டுப் போகிறார். ஆனால், வசனங்களில் கூட பெரிதாக எந்த ஈர்ப்பும் இல்லை. வடிவேலு பாடிய கண்ண மேய விட்டியா பாடல் மட்டும் சுமாராக இருக்கிறது. சதாவுடன் வடிவேலு ஆடும் இந்திப் பாடலுக்கு தியேட்டரில் இருக்கும் சில ரசிகர்கள் எழுந்துபோய்விட்டனர்.

சதா அறையில் எதைத் தேடினார்? ஏன்? போலீஸூக்குள் இருக்கும் கறுப்பு ஆடு யார் என தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இப்படி ஏகப்பட்ட ஏன்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

இயக்குநர் யுவராஜ் தயாளன் திரைக்கதையில் ஏகப்பட்ட தொய்வு மட்டுமே இருக்கிறது.

1960-ல் நடக்கும் கதை என்று ட்ரெய்லரிலேயே சொல்லிவிட்டார்கள். அதற்காக கதைகூட அந்தக் காலத்தில் நடப்பதைப் போல மெதுவாகவே நகர வேண்டுமா? சுவாரஸ்யமோ, புத்திசாலித்தனமோ, பார்றா என ஆச்சர்யப்படும் விதத்திலோ எந்தக் காட்சியும் இல்லை.

மேலோட்டமாகப் பார்த்தால் எம்ஜிஆர் காலத்தில் எம்ஜிஆர் நடித்த கதைதான். அதை கொஞ்சம் திருப்பிப் போட்டு வடிவேலுவை இட்டு நிரப்பியிருக்கிறார்கள். ஆனால், அதுதான் முழுமையாகப் பொருந்தாமல் உறுத்துகிறது.

வடிவேலுவிடம் இருந்த அப்பாவித்தனமும், வெகுளித்தனமும், உடல் மொழியும் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் கடந்து காணாமல் போய் இருக்கிறது. அதனால்தான் காமெடிக் கதையில் கூட வறட்சியை சந்திக்க நேரிடுகிறது.

புராணக் கதை, சரித்திரக் கதை, பீரியட் கதைகளுக்கு வடிவேலு குட் பை சொல்ல வேண்டிய நேரம் இது. காவலன் வடிவேலு வந்தால் கூட வயிறு வெடித்து சிரிக்கலாம். எழுந்து நின்று கை தட்டலாம்.

ஒரு ரசிகர் புலம்பியபடியே சொன்னார்: இதுவரை வந்த வடிவேலுவின் மொத்த காமெடியையும் ரெண்டரை மணிநேரம் போட்டிருந்தால் கூட சந்தோஷமாக இருந்திருக்கும் என்றார்.

படம் முடிந்ததும் நாம் நினைவுகூரும் வடிவேலுவின் ஒற்றை சொல் இதுதான்... முடியல!

வடிவேலுவிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் இதுதான். பழைய பன்னீர்செல்வமா ஸாரி. பழைய கைப்புள்ள வடிவேலுவா வரணும்.

வருவாரா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

38 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்