நல்ல வேடத்துக்காக காத்திருப்பதில் தவறில்லை: சிங்கப்பூர் தமிழரின் சினிமா அனுபவங்கள்

‘‘நூறு ரூபாய் பணம் கொடுத்துவிட்டு கடைசி வரிசையில் அமர்ந்து நாடகம் பார்க்கும் பார்வை யாளனையும் நம் நடிப்பு போய்ச் சேரணும் என்று எனக்கு நடிப்பு பயிற்சி அளித்த குருநாதர் அடிக்கடி சொல்வார். இன்று சினிமா படப்பிடிப்பில் என் மீது கேமரா வெளிச்சம் விழும் ஒவ்வொரு காட்சியின்போதும் அந்த வாசகம்தான் மனதில் வந்து நிற்கிறது’’ என்கிறார், குணா.

சிங்கப்பூர் மண்ணிலிருந்து தமிழ் சினிமா வுக்கு வந்திருக்கும் இவர் ‘கலக்குற மாப்ள’, ‘டெய்சி’, ‘வீர தீர சூரன்’ உள்ளிட்ட படங் களில் நடித்துவருகிறார். மூன்று வாரங்கள் சென்னை, ஒரு வாரம் சிங்கப்பூர் என்று படப்பிடிப்பும், பயணப் பரபரப்புமாக இருந்தவரை சந்தித்தோம்.

தேசம் கடந்து வந்து தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு எப்படி அமைந்தது?

எனக்கு பூர்விகம் தஞ்சாவூர். தாத்தா காலத்திலேயே சிங்கப்பூர்வாசியாக மாறிவிட்டோம். அப்பா, நான் உட்பட குடும்பத்தில் உள்ள எல்லோரும் பிறந்தது, படித்தது, வேலை பார்ப்பது எல்லாம் சிங்கப்பூரில்தான். மேடை நாடகத்தின் மீது மோகம் ஏற்பட்டு கால்தடம் பதித்தபோது எனக்கு 13 வயது. ரவீந்திரன் நாடகக் குழுவில் நடிக்கத் தொடங்கினேன். வீட்டில் அதிகம் தமிழ் பேசவராத எனக்கு மேடை நாடகம்தான் தெளிவாக தமிழ் கற்றுக்கொடுத்தது. ராதிகா மேடம் சிங்கப்பூரில் உள்ள வசந்தம் சேனலில் ‘பட்சி சொல்லுது’ என்ற பெயரில் ஒரு தொடரை எடுத்தார். அதில் நான்தான் நாயகன்.

அந்த வாய்ப்புதான் சென்னைக்கு போய் சினிமாவில் நல்ல நடிகனாக வேண்டும் என்ற ஆசையை எனக்குள் விதைத்தது. இங்கே என் முதல் படம் ‘சிங்கக்குட்டி’. அடுத்தடுத்து ‘சந்தோஷ் சுப்ரமணியன்’ ‘வீரசேகரன்’ ஆகிய படங்களில் நடித்தேன். இப்போது ‘கலக்குற மாப்ள’, ‘டெய்சி’, ‘வீர தீர சூரன்’ என்று பல படங்களில் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களாக அமைந்து வருகிறது.

தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறீர்களே?

நாயகனாக மட்டும்தான் நடிக்க வேண்டும் என்பது எனக்கு அவசியமாகப் படவில்லை. வில்லன், கவுரவ நடிகர், குணச்சித்திர வேடம் என்று எந்த வேடமேற்று நடித்தாலும் அதில் நம் பங்களிப்பும், தனித்துவமும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சினிமாவில் முகத்தை மட்டும் காட்டினால் போதும் என்றில்லாமல் நல்ல வேடத்துக்காக காத்திருக்கவும் தயாராக இருக்கிறேன். மணிரத்னம், ஷங்கர், பாலா மாதிரி வெவ்வேறு களத்தில் சிந்திக்கும் இயக்குநர்கள் கைகளில் சிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ‘வீர தீர சூரன்’ படத்தில் நான் பக்கா வில்லன். ‘டெய்சி’ படத்தில் 5 வயது குழந்தைக்கு அப்பாவாக நடிக்கிறேன். இப்படி வெவ்வேறு தளத்தில் கதைகளை தேர்வு செய்யும் வேலையைத்தான் தற்போது செய்து வருகிறேன்.

நடிப்புக்காக அரசு வேலையையே துறந்துவிட்டீர்களாமே?

சிங்கப்பூரில் காவல்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். நடிப்பு மீது இருந்த ஆசையால் வேலை பார்க்க மனம் ஒப்புக் கொள்ளவில்லை. 2007-ல் சென்னைக்கு வந்து ஒன்றி ரண்டு படங்களில் முகம் காட்டினேன். தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் 2010-ல் மீண்டும் சிங்கப்பூருக்கு சென்று மேடை நாடகங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.

நடிப்பு மீது ஈர்ப்பு அதிகமான தால் வேறு எந்த வேலையை யும் செய்யப் பிடிக்கவில்லை. நமக்கு சினிமாதான் சரியாக இருக்கும் என்று உள்ளுக்குள் ஒரு உணர்வு ஏற்பட்டுக்கொண்டே இருந்ததால் மீண்டும் இங்கே வந்து விட்டேன்.

இங்கே தொடர்ந்து இயங்க சினிமா சார்ந்த நண்பர்கள் கிடைத்தார்களா?

நாசர் சார், கலா மாஸ்டர், நண்பன் வெற்றி ஆகியோரின் நட்பு கிடைத்தது.

விஷ்ணு என் வீடியோவைப் பார்த்து பாராட்டிவிட்டு பல இடங்களில் சிபாரிசு செய்தார். அப்படித்தான் ’கலக்குற மாப்ள’, ‘வீர தீர சூரன்’ படங்கள் அமைந்தது.

உங்கள் சினிமா முயற்சிகளுக்கு குடும் பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கிறதா?

அப்பா, அம்மா, அண்ணன், மனைவி மாயா, இரண்டு குழந்தைகள் என்று எல்லோருடைய அன்பும் ஒன்றாக கிடைத்ததால்தான் என்னால் என் விருப்பத்துக்கு இருக்க முடிகிறது. அந்த அன்புதான் என்னை சரியாக வழிநடத்தியும் செல்கிறது.



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE