மான்டேஜ் மனசு 3 - ஆள் மாற்றிடும் அட்டகத்தி வியூகம்!

By க.நாகப்பன்

நானும் புருஷோத்தும் பெரம்பூரை அடுத்த அகரம் அமிர்தம்மாள் காலனியில் அறை எடுத்து தங்கியிருந்தோம். புருஷோத் அருகில் உள்ள ஒரு ஹார்டுவேர் கம்பெனியிலும், நான் ஒரு பத்திரிகையிலும் வேலை செய்ய நாட்கள் நகர்ந்தன.

வாழ்க்கையில் எந்த சுவாரஸ்யமுமே இல்லை என்று அடிக்கடி புருஷோத் சொல்லிக்கொண்டே இருப்பான். அந்த மாதிரி நீண்...ட பிரசங்கம் நடத்திய ஒரு மாலைப்பொழுதில் வந்த ஃபோன் கால் புருஷோத்தை புரட்டிப்போடும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

''ஹலோ... கார்த்தி இருக்காரா?'' என்றது எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல்.

''நான் அவர் தம்பி பேசுறேன். அண்ணன் ரெடியாகிறார். நீங்க?''

''நான் காயத்ரி.. திண்டுக்கல்... என் அண்ணாவும் உங்க அண்ணாகூட தான் ஆர்மியில வேலை செய்றார். அண்ணா கிளம்பிட்டார். உங்க அண்ணாவை சென்ட்ரல் வந்து பிக்கப் பண்ணிக்க சொன்னார்.''

''ஓ.கே. சொல்லிடறேன்.''

இந்த உரையாடலுக்குப் பிறகு முகம் முழுக்க புன்னகையுடன் இருந்தான் புருஷோத். அதைத் தொடர்ந்த செல்போன் அழைப்புகளால் பின்னாளில் காதலாகி கசிந்துருகினான்.

இரவு எட்டு மணிக்கு அறைக்கு வரும் புருஷோத் ஒன்பது மணிக்கு பேச ஆரம்பிப்பான். காலை ஆறு மணிக்குதான் போனை வைப்பான். வேலை செய்யும் நேரத்தை விட செல்போனில் பேசும் நேரம் அதிகமாகிவிட்டது அவனுக்கு.

இ-மெயிலில் புகைப்படங்கள் அனுப்புவது, முத்தம் தந்தே செல்போனை ஈரமாக்குவது, மெசேஜ் மூலம் கொஞ்சுவது என்று மூன்றே மாதத்தில் முற்றிலுமாக மாறிப்போனான்.

திருமணம் குறித்த சிந்தனைகள் எல்லாம் பெருக்கெடுத்து ஓட ஓரம்பித்த தருணத்தில் குழந்தைகள் விளையாட்டு பொம்மைகளை உடைப்பதைப் போல, அவள் காதலை உடைத்துவிட்டுப் போய்விட்டாள்.

எனக்கு நிறைய பெண் தோழிகள் இருக்காங்க என்று புருஷோத் இஷ்டத்துக்கும் அள்ளிவிட்டான். தன்னை 'அட்ட'ன்னு பொண்ணு நெனைச்சிடக்கூடாது. கெத்தா நினைக்கணும் என்பதற்காகவே அந்த பில்டப். அதையே காரணமாகக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் செல்போன் தொடர்பை துண்டித்துக்கொண்டாள் காயத்ரி.

அதற்காக புருஷோத் வருத்தப்பட்டிருக்கிறான். ஆனால், கலங்கவோ கண்ணீர்விடவோ இல்லை. காரணம் கேட்டால், தன் நடத்தைகளுக்கு ஷாலினியை துணைக்கு அழைத்துக்கொள்வான்.

''ஷாலினி என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?''

''யார்றா.. அஜித் மனைவியா?''

''இல்லை. டிவியில வருவாங்களே டாக்டர் ஷாலினி.''

மனநல மருத்துவர் ஷாலினி ஏதாவது ஒரு சேனலில் உட்கார்ந்துகொண்டு காதல் பற்றியும், ஆண் பெண் பற்றியும் பேசிக்கொண்டிருந்த காலகட்டம் அது.

''என்ன சொன்னாங்க?''

''ஒரு பையன், பொண்ணை முதன் முதலா பார்க்கும்போது தெரிஞ்சோ தெரியாமலோ கழுத்துக்கு கீழே பார்க்கிறான். அதே மாதிரி பொண்ணு பையனைப் பார்க்கும்போது அவனோட தோள்களைப் பார்க்கிறா? இது ஏன்?''

''நீயே சொல்லுடா.''

''தான் குழந்தையை சுமக்குற அளவுக்கு தெம்பு இருக்கான்னு பையன் யோசிப்பான். தன் குடும்பத்தை காப்பாத்துற அளவுக்கு வலிமை இருக்கான்னு பொண்ணு யோசிப்பா.''

''அதுக்கும், நீ சொல்றதுக்கும் என்னடா சம்பந்தம்?''

''ஒரு பொண்ணு போய்டுச்சேன்னு அப்டியே விழுந்திடமாட்டேன். அடுத்து முயற்சி பண்ணுவேன். இதெல்லாம் தப்பே இல்லை. 'ஒரு மனுஷன் அவன் வாழ்க்கையில ஒரே பொண்ணை காதலிச்சா நல்ல விஷயம். ஆனா, ஒன்றுக்கும் மேற்பட்ட காதல் சாத்தியம். ஏழு பேரை கூட உண்மையா காதலிக்க முடியும்'னு ஷாலினி சொல்றாங்க.''

''அடுத்த காதலுக்கு ரெடியாகிட்ட போல?''

''நான் ரெண்டுதான் பண்ணியிருக்கேன். அப்படி பார்த்தா இன்னும் அஞ்சு காதல் பாக்கி இருக்கு''

அவன் எந்த நேரத்தில் இப்படி சொன்னான் என்று தெரியவில்லை. காயத்ரி அவன் வாழ்வில் இல்லையென்ற பிறகு விமலா வந்தாள்.

புருஷோத் அண்ணன் கார்த்திக்கு நிச்சயதார்த்தம் நடந்த தருணம் அது. கல்யாண வீட்டில் அழகான பெண்கள் இல்லாமலா? அந்த கூட்டத்தில் ஒரே ஒரு பெண் மட்டும் அங்குமிங்கும் ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்தாள்.

புருஷோத் வந்ததில் இருந்து அந்த பெண்ணையே கவனித்துக்கொண்டிருந்தான். குழந்தைகளைக் கொஞ்சுவது, வருபவர்களை உபசரிப்பது என பம்பரமாய் சுழன்ற அப்பெண் அண்ணிக்கு சொந்தம் என்று தெரிந்துகொண்டதும், சகஜமாக கலாய்க்க ஆரம்பித்தான்.

ஒரு வார்த்தை கூட அந்தப் பெண்ணிடம் பேசவேயில்லை. அடுத்த நாள் அந்தப் பெண்ணே புருஷோத்திடம் செல்போனில் பேசினாள்.

''ஹலோ. நான் விமலா பேசுறேன்.''

''பேசுங்க.''

''எதுக்கு என்னை கலாய்ச்சிட்டே இருந்தீங்க?''

''இதுக்குதான். இப்படி பேசணும்னுதான் பண்ணேன்'' என்றான்.

விமலா, புருஷோத்துக்கு தேவதையாகிப் போனாள்.

ஒரு முறை பெரம்பூரில் இருந்து அரக்கோணம் செல்லும்போது எதேச்சையாக இருவரும் சந்தித்துக்கொண்டார்கள். இவர்கள் ரொமான்ஸ் தாங்க முடியாமல் பொறாமையில் பொங்கி, நான் அடுத்த பெட்டிக்கு மாறியது தனிக் கதை.

ஒரு கட்டத்தில், விமலா வீட்டுக்கும், புருஷோத் அண்ணி வீட்டுக்கும் ஏதோ பங்காளிப் பிரச்னை. இரு குடும்பங்களுக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் போக, அந்த கோபத்தை புருஷோத் மீது கொட்டிவிட்டாள் விமலா.

அர்த்தமே இல்லாத காரணத்துக்காக புருஷோத்தின் அந்தக் காதலும் புஸ் ஆனது. அதற்குப் பிறகு வனிதா வந்தாள். அதற்கடுத்து கோசலா வந்தாள்.

ஒன் சைட், டூ சைட் எதுவும் பிரச்சினை இல்லை. பிடிச்சா கல்யாணம் பண்ணிப்போம். இல்லைன்னா பிரிஞ்சிடுவோம் என்று தெளிவாய் இருந்தான். இத்தனை காதலை சந்தித்ததற்காக புருஷோத் பெருமைப்பட்டானே தவிர, வருத்தப்படவில்லை. அந்த தெளிவு எப்படி கிடைத்தது? என்றபோதுதான் ஆச்சர்யமாக இருந்தது.

'அட்டகத்தி' படம் பார்த்த போது புருஷோத்தை தவிர்க்கவே முடியவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் புருஷோத்தே திரையில் ஆக்ரமித்துக் கொண்டிருந்தான்.

காதல் புனிதமானது. தெய்வீகமானது. காதலில் தோற்றவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்றெல்லாம் கூட தமிழ் சினிமா பல்வேறு பிம்பங்களைக் கட்டமைத்திருக்கிறது.

'தேவதாஸ்' படத்தில் ஆரம்பித்து இப்போது வரைக்கும் காதல் தான் பிரதானமாக இருக்கிறது. காதல் பூவைப் போல. ஒரு முறை உதிர்ந்துட்டா மறுபடி ஒட்டவைக்க முடியாது என்று விக்ரமன் ஃபீலிங்க்ஸில் பியானோ வாசிக்கும் அளவுக்கு 'பூவே உனக்காக' படத்தில் வசனம் எழுதி இருக்கிறார். இப்படிப்பட்ட வழித் தோன்றல்களில் 'அட்டகத்தி' தனித்துத் தெரிந்தது.

காதல் ஒரு உணர்வுதான். ஆனால், அதற்காக அழுது புலம்பி வாழ்வை இழக்க வேண்டாம் என்பதை அழுத்தமாக அதேசமயம் கலகலப்பாக சொன்ன விதத்தில் இயக்குநர் ரஞ்சித் கவனம் ஈர்த்தார்.

'அட்டகத்தி' ஹீரோ தினேஷ் பார்க்கிற பெண்களுக்கெல்லாம் ரூட் விடுகிறார். பின்னால் சுற்றுகிறார். உண்மையாய் இருக்கிறார். ஆனால், அந்த காதல் கைகூடவில்லை என்பதற்காக உடைந்துபோய்விடவில்லை. உடனே அடுத்த காதலுக்கு தாவிச் செல்கிறார்.

''ஒன் சைட் லவ் ஃபெயிலியர், காதல் தோல்வியில் தற்கொலை பண்ணிக்குறது எல்லாம் முட்டாள்தனம்டா'' என்று நண்பர்களிடம் சொல்கிறார் தினேஷ்.

காதலில் மூக்குடைபட்டதும், 'இப்போ என்னால எப்படி மச்சி போண்டா சாப்பிட முடியும்?' என போண்டாவைத் துப்பி ஃபீலிங்ஸ் காட்டிவிட்டு வீட்டுக்குச் செல்கிறார். ஆனால், நண்பர்களை அனுப்பிவிட்டு மீண்டும் கடைக்கு வந்து தனியாக போண்டாவை வாங்கி வாய்க்குள் தள்ளுகிறார்.

பக்கத்துவீட்டுப் பெண் ஐஸ்வர்யா பார்க்கிறாள் என்பதற்காக கராத்தே மாஸ்டரை பின்னி எடுப்பது, அதற்குப் பிறகு அதே மாஸ்டரிடம் அடிவாங்கி, ''வேணும்னே பழிவாங்கிட்டான்டா... மூச்சுவிட முடியலடா'' என கலங்குவது, 'அந்தப் பொண்ணு வருதுடா' என்று நண்பர்கள் சொன்னதும், உடனே கண்ணீர் துடைத்து கெத்து காட்ட தயாராவது என எல்லா பிரயத்தனங்களையும் அசால்ட்டாக செய்திருப்பார்.

பஸ்ஸில் எக்ஸ்போர்ட் வேலைக்கு செல்லும் இரு பெண்களையும் சைட் அடிப்பது, அதில் யாரைத் தேர்ந்தெடுப்பது என குழம்புவது, பக்கத்தில் இருந்தவன் அடிவாங்கியதும் என்னா அடி என பதறுவதுமாக தினேஷ் செம ஸ்கோர் செய்தார்.

நந்திதா தன்னைக் காதலிக்கவில்லை. தீனா என்கிற இன்னொரு நபரைத்தான் காதலித்தாள் என்று தெரிந்தபிறகு மழையில் நனைந்தபடி ''எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடக்குது?'' என பஸ் நிறுத்தத்தில் அழுது புலம்புகிறார். அந்த அழுகையும் சில நிமிடங்களே நீடிக்கிறது.

அதற்குப் பிறகு சைக்கிளில் மோதி விழுந்த பெண்ணின் விழியில் நுழைந்து இதயம் திருடுவது என்று படம் முழுக்க காதலில் விழுபவராகவே இருக்கிறார்.

கடைசியில், சைக்கிளில் விழுந்த பெண்ணை காதல் கல்யாணம் செய்துகொண்டு ஒரு குழந்தைக்கு அப்பாவாகிறார்.

புருஷோத்தின் வாழ்க்கையும் கிட்டத்தட்ட இதுபோலதானே. சொல்ல மறந்துவிட்டேன்.

புருஷோத் இப்போது ஏடிஎம் கஸ்டமர் சர்வீஸ் இன்ஜனீயராக இருக்கிறான். பெரம்பூர் - கோயம்பேடு ஏடிஎம் சென்டர்களில் புருஷோத்தை பார்த்தால் கை குலுக்கி கங்கிராட்ஸ் சொல்லுங்கள்.

புருஷோத் -கோசலா தம்பதியினர் புரமோஷன் ஆகியிருக்கிறார்கள். இன்னும் ஏழு மாதங்களில் ஜூனியர் புருஷோத்தை பார்க்கலாம்.

மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்...

க.நாகப்பன் - தொடர்புக்கு nagappan.k@thehindutamil.co.in

| முந்தைய அத்தியாயம்: >மான்டேஜ் மனசு 2 - இன்றும் நெஞ்சில் அழியாத கோலங்கள்! |

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்