படத்தின் கதைதான் இசையை தீர்மானிக்கிறது: இசையமைப்பாளர் ரைஹானா சிறப்பு பேட்டி

‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ படத்தை அடுத்து ‘நிலம் நீர் காற்று’, ‘ஒண்ணுமே புரியல’, ‘கடைசிப் பக்கம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் ரைஹானா. இசையமைப்பாள ரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷின் அம்மாவும், ஏ.ஆர் ரஹ்மானின் அக்காவுமான அவரை ஒரு மாலைப் பொழுதில் சந்தித்தோம்.

‘மச்சி’ படத்தின் மூலம் இசையமைப்பாள ராக அறிமுகமானீர்கள். அதன் பிறகு கொஞ்சம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் நிறைய படங்களுக்கு இசையமைக்க தொடங்கியிருக்கிறீர்களே?

நான் எப்போதுமே சுதந்திரமாக பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். அதேநேரத்தில் செய்யும் வேலையில் ஏதாவது ஒருவிதத்தில் தனித்துவம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். குறிப்பிட்ட நாட்களுக்குள் இத்தனை படங்கள் செய்தே ஆக வேண்டும் என்று எப்போதும் நினைத்ததில்லை. இசைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் என் பங்களிப்பு தொடர்ந்து இருக்கும்.

உங்கள் சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படங்களில் நீங்கள் பாடிய பாடல்கள் ஹிட் ஆகிவிடுகிறதே?

நான் இதுவரை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 12 பாடல்கள் பாடியிருக்கிறேன். ‘சிவாஜி’, ‘ராவணன்’, ‘கோச்சடையான்’ உள்ளிட்ட படங்களில் பாடலுக்கும், சூழலுக்கும் என் குரல் சரியாக இருக்கும் என்பதால்தான் என்னை பாட அழைத்தார். அவரது இசையில் நான் பாடிய ஒவ்வொரு பாடலும் அப்படித்தான் அமைந்தது. அது வெற்றியும் அடைந்திருக்கிறது.

ஒரு படத்துக்கு எப்படி இசையமைக்க வேண்டும் என்பதை எதை வைத்து தீர்மானிப்பீர்கள்?

படத்தின் கதைதான் இசையை தீர் மானிக்கிறது. கதையின் களம்தான் இசை எந்த இடத்தில், எந்த மாதிரி தேவை என் பதை முடிவு செய்கிறது. அந்த தேவையை உணர்ந்து நாங்கள் பணிபுரிகிறோம்.

உங்கள் மகன் ஜி.வி.பிரகாஷ் இசை யமைப்பதைத் தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறாரே?

இசை, நடிப்பு எல்லாமே அவனாகவே விரும்பி எடுத்துக்கொண்டதுதான். அவன் நடிக்கப் போனதால் இசையில் கவனம் செலுத்தாமல் இருக்கப்போவதில்லை. பிரகாஷ் 10 டியூன்கள் போட்டால் அதில் ஒன்றுதான் சிறப்பாக அமையும் என்றில்லை. அத்தனையும் ஒவ்வொரு விதத் தில் ஈர்க்கவே செய்யும். ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ படத்துக்காக என் இசையில் ஒரு பாடலை அவன் பாடினான். என் இசையில் அவன் பாடிய முதல் பாடல் இது தான். எனக்கு இது ரொம்பவே மகிழ்ச்சி.

புதிய பாடகர்களின் வருகை அதிகரித்து வருகிறதே?

அதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள்தான். அதுதான் தொழில்நுட்ப ரீதியாக நிறைய கற்றுக்கொள்ள வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இன்றைய இளம் பாடகர்களின் திறமை தரமாகவும் உள்ளது. இப்படி பலர் உருவாவது நல்லதுதானே.

புதிய இசையமைப்பாளர்களில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?

சந்தோஷ் நாராயணனின் இசை பிடிக்கும். அதிலும் அவருடைய பின்னணி இசை மிகவும் பிடிக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE